Published : 27 May 2020 09:14 AM
Last Updated : 27 May 2020 09:14 AM
மருதன்
எப்போதும் போல் பண்ணையில் விளையாடிக்கொண்டிருந்த என்னை ஒரு நாள் திடீரென்று கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார்கள். அதற்கு முன்பு பார்த்திராத ஒரு புதிய வீட்டுக்குள் என்னைத் தள்ளி, ’‘பிரெட்ரிக், இனி நீ இந்த வீட்டின் உடைமை. இங்குள்ளவர்கள் உன் எஜமானர்கள். அவர்கள் சொல்பேச்சு கேட்டு நடந்துகொள்ளும் வரை உனக்கு எந்தச் சிக்கலும் இருக்காது’’ என்று அறிவுறுத்திவிட்டுக் கிளம்பிச் சென்றபோது தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. இந்தப் புதிய வீட்டில் யார் இருப்பார்கள்? நான் ஏன் அவர்களோடு இருக்க வேண்டும்? மிக முக்கியமாக என்னை ஏன் உடைமை என்கிறார்கள்? நான் என்ன கடிகாரமா, நாற்காலியா, சமையல் பாத்திரமா?
திருமதி சோஃபியா என்று ஒருவர் வெளியில் வந்து வா, பையா என்றபடி என்னை உள்ளே அழைத்துச் சென்றார். இவர் எப்படி இருப்பாரோ, என்னை எப்படி நடத்துவாரோ, என்னென்ன வேலைகள் எல்லாம் செய்யச் சொல்வாரோ, திட்டுவாரோ, அடிப்பாரோ என்றெல்லாம் யோசித்தபடி தயங்கித் தயங்கிதான் உள்ளே போனேன். ஆனால், திருமதி சோஃபியா என்னைப் பார்க்கும்போதெல்லாம் புன்முறுவல் செய்தார். உணவு போக, அவ்வப்போது தின்பண்டங்கள் கொடுத்தார். ஒருமுறை என்னைத் தொட்டுத் தூக்கி தன் மடியில் உட்கார வைத்துக்கொண்டு, “நீ எங்கே பிறந்தாய், உன் அம்மா யார், அப்பா யார், பண்ணையில் என்ன செய்துகொண்டிருந்தாய்” என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, நான் பேசுவதை ரசித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒருநாள், “பிரெட்ரிக், உனக்குப் படிக்கத் தெரியுமா?’’ என்று அவர் கேட்டபோது நான் ‘ம்ஹூம்’ என்றதும் பதறிப் போய், “இவ்வளவு பெரியவனாகிவிட்டாய். இன்னமுமா தெரியாது” என்று கோபித்துக்கொண்டதோடு நில்லாமல், ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துவந்து அருகில் அமர்ந்து ஏ,பி,சி,டி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். என் கண்கள் கலங்கிவிட்டன. என் அம்மா ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால் அவரோ அல்லது அப்பா என்று ஒருவர் எனக்கு இருப்பதாகச் சொல்வார்களே அவரோ இருந்திருந்தால் இப்படித்தானே எனக்கும் பாடம் எடுத்திருப்பார்கள் இல்லையா?
“இதென்ன பிரெட்ரிக், நாலு எழுத்து தாண்டுவதற்குள் கலங்கிவிட்டாயா? ’’ என்று திருமதி சோஃபியா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தவுடன் மிகுந்த வெட்கத்தோடு “அப்படி எல்லாம் இல்லை, நீங்கள் கற்றுக் கொடுங்கள்’’ என்று கண்களைத் துடைத்துக்கொண்டேன். அவர் எப்போது புத்தகத்தோடு வருவார், எப்போது வகுப்பு எடுக்க ஆரம்பிப்பார் என்று ஒவ்வொரு நாளும் காத்துக்கிடந்தேன். “பரவாயில்லை, வர வர நன்றாக எழுத்துக்கூட்டிப் படிக்கிறாயே?’’ என்று ஒருநாள் அவர் என் சுருள்முடி தலையைத் தட்டிக்கொடுத்தபோது, நிலாவின் மீது மோதுமளவுக்குத் துள்ளிக்குதித்தேன்.
அப்படிக் குதித்தது தவறு போலிருக்கிறது. மறுநாளே விறுவிறுவென்று நடந்துவந்து நான் மெய்மறந்து படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை என் கையிலிருந்து சட்டென்று பறித்து கசக்கி எறிந்ததோடு, “படித்தது போதும்.இனி போய் வேலையைப் பார்’’ என்று கத்தினார். மிரண்டு போனேன். “நான் என்ன தவறு செய்தேன் திருமதி சோஃபியா? ஏன் என்னைத் திட்டுகிறீர்கள்?’’ என்று கேட்டதுதான் தாமதம். “அவர் சொன்னது சரிதான் போல. என்னையே கேள்வி கேட்கிறாயா? உங்களை எல்லாம் எப்படி நடத்த வேண்டுமோ அப்படித்தான் நடத்த வேண்டும் போலிருக்கிறது’’ என்று சிடுசிடுப்போடு முறைத்தார்.
திருமதி சோஃபியா குறிப்பிட்ட அந்த ‘அவர்’ அவருடைய கணவர் என்பது பின்னரே தெரியவந்தது. “சோஃபியா, நமக்காக வேலை செய்யவந்த அடிமைச் சிறுவனுக்கு எழுதப் படிக்க கற்றுக்கொடுத்தால் நமக்கே எதிராகப் போய் முடியும் என்று உனக்குத் தெரியாதா? தவிரவும், நீ செய்வது சட்டவிரோதமான வேலை என்பதையாவது அறிவாயா?’’என்று கணவர் கடிந்துகொண்டதைத் தொடர்ந்து முற்றிலும் வேறான ஒரு புதிய திருமதி சோஃபியாவை நான் பார்க்க ஆரம்பித்தேன். அம்மா இல்லாது போனாலும் இவரே அம்மா போல்தானே இருக்கிறார் என்று எல்லாம் உள்ளுக்குள் நினைத்துப் பூரித்துப் போயிருந்த நான் துவண்டு போனது நிஜம்.
ஆனால், விரைவில் சுதாரித்துக்கொண்டேன். வீட்டுக்கு அருகில் சில வெள்ளைச் சிறுவர்கள் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். நாங்கள் எல்லோரும் ஒன்றாக விளையாடுவோம், கதை பேசுவோம். ஒருநாள் அவர்களிடம் சென்று பேசினேன்.“நீங்கள் எல்லோரும் பள்ளிக்குப் போய்ப் பாடம் படிக்கிறீர்கள். பிறகு வந்து விளையாடுகிறீர்கள். எனக்குப் பள்ளியோ படிப்போ கிடையாது. நாம் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம். தினமும் நீங்கள் சொல்வதுவரை உங்களோடு விளையாடுகிறேன். நீங்கள் விரும்பும் வேடிக்கைக் கதைகள் சொல்கிறேன். எனக்குக் கிடைக்கும் தின்பண்டங்களையும் எடுத்துவந்து தருகிறேன். பதிலுக்கு நீங்கள் தினமும் எனக்கு வகுப்பு எடுக்க வேண்டும். சம்மதமா?’’
இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு என் வாழ்க்கையை நான் பதிவு செய்ய முடிவெடுத்த போது திருமதி சோஃபியாவிடம் இருந்துதான் என் கதையைத் தொடங்கினேன். ஒரு ‘பையனாக’ தன் வீட்டுக்குள் நுழைந்த என்னை பிரெட்ரிக் டக்ளஸாக வளர்த்து எடுத்தவர் அவர். ஆம், அவர் மாறிப் போனதில் இன்றளவும் வேதனைதான். ஆனால், அவர் என்னையும் அல்லவா மாற்றியிருக்கிறார்?
அவருடைய எழுத்துகள் அல்லவா என்னைச் சிந்திக்க வைத்தன? அவருடைய எழுத்துகளைக் கொண்டல்லவா என் சங்கிலியை நான் உடைத்து எறிந்தேன்? நீ மீண்டால் போதாது, உன் மக்கள் மீளும்வரை குரல் கொடுத்துக்கொண்டே இரு, இயங்கிக்கொண்டே இரு, உழைத்துக்கொண்டே இரு என்று அவர் போதித்த எழுத்துகள் அல்லவா இந்த நிமிடம் வரை என்னை உந்தித் தள்ளிக்கொண்டிருக்கின்றன? இப்படித்தான் நடக்கும் என்று திருமதி சோஃபியாவின் கணவர் அன்றே யூகித்துவிட்டது விந்தைதான், இல்லையா?
“டக்ளஸ், நீ ஏன் உன் புத்தகத்தின் தலைப்பை மாற்றக் கூடாது?’’என்று நண்பர்கள் கேட்டபோது மறுத்துவிட்டேன். நான் என்னவாக இருந்தேன் என்பதைத் தெரிந்துகொண்டால்தான் இன்று என்னவாக மாறியிருக்கிறேன் என்பதும், எது என்னை அவ்வாறு மாற்றியிருக்கிறது என்பதும் புரியும். என்னுடைய கதை என்பது அடிப்படையில் ஓர் அடிமையின் கதைதான். அதை நான் என்றும் மறக்க மாட்டேன்.
(பிரெட்ரிக் டக்ளஸ்: அமெரிக்க அடிமை ஒழிப்புப் போராளி, எழுத்தாளர், சீர்திருத்தவாதி.)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT