Published : 29 Apr 2020 09:20 AM
Last Updated : 29 Apr 2020 09:20 AM

வாசிக்க ஆயிரம் உண்டு

ஆதி

கடந்த தலைமுறைக் குழந்தைகளுக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பு ஒன்று, இந்தத் தலைமுறையினருக்குக் கிடைக்காமல் போயிருக்கிறது என்றால், அந்தப் பட்டியலில் வாசிப்பும் முதல் இடங்களில் இருக்கும்.

தமிழ் சிறார் எழுத்தாளர்கள், சிறார் இதழ்கள், சிறார் புத்தகங்கள் அந்தக் காலத்தில் புதிது புதிதாக வந்து குவிந்தன. ஒன்றைப் பிரித்தால் விரியும் ஆச்சரியம் குறையும்முன், இன்னுமொன்று வந்து காத்திருக்கும். இன்றைக்கு டிவி, இணையம், காட்சி ஊடகம் என்று காட்சி வழியாகவே பெரும்பாலான அனுபவத்தைப் பெறும் குழந்தைகளால், வாசிப்பு இன்பத்தை முழுமையாக உணர முடிவதில்லை.

கரோனா ஊரடங்குக் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளை எப்படிச் சமாளிப்பது என்று பெற்றோர் ஒவ்வொரு நாளும் புதிதாக யோசிக்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். காட்சி ஊடகத்துக்குக் கைகொடுக்கும் இணையம், வாசிப்புக்கும் சேர்த்தே கைகொடுக்கிறது. வாசிப்பு சார்ந்த வளங்களுக்கு வழிகாட்டுதல் மட்டும் இருந்தால் போதும்.

குறைந்தபட்சம் காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் வாசிப்புக்கு ஒதுக்கினால், புதுப் புது உலகங்களைத் தெரிந்துகொள்ள நிச்சயம் வாய்ப்பு பிறக்கும். வாசிக்கத் தெரிந்த குழந்தைகள் நூல்களைத் தேர்ந்தெடுக்க பெற்றோர் உதவலாம். வாசிக்கத் தெரியாத குழந்தைகளுக்கு, இந்தக் காலத்தில் வாசிக்கக் கற்றுத்தந்தும் விடலாம்.

சரி, தமிழில் வாசிப்பது என்றால் எப்படித் தொடங்குவது?

* மகாகவி பாரதியாரின் புகழ்பெற்ற பாடல்கள், குறிப்பாக ‘பாப்பா பாட்டு' இணையத்தில் எழுத்து வடிவம், கேட்கக்கூடிய பாடல் வடிவம், காணொலி வடிவம் ஆகியவற்றில் கிடைக்கிறது.

* ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு, அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி' உள்ளிட்ட புகழ்பெற்ற பாடல்களை எழுதிய கவிமணி தேசிக விநாயகத்தின் குழந்தைப் பாடல்கள் அனைத்தையும் தமிழ் இணையக் கல்விக் கழக இணையதளத்தில் வாசிக்கலாம்: http://www.tamilvu.org/library/l9302/html/l9302top.htm

* ‘அம்மா இங்கே வா வா', ‘தோசையம்மா தோசை', 'மாம்பழமாம் மாம்பழம்' உள்ளிட்ட பாடல்களை எழுதிய ‘குழந்தைக் கவிஞர்' அழ.வள்ளியப்பாவின் பெரும்பாலான நூல்களை இந்த இணையதளத்தில் வாசிக்கலாம்: https://bit.ly/2XD99nx

அத்துடன் யூடியூப் தளத்தில் அவருடைய பாடல்களில் சிலவற்றை அனிமேஷன் படங்களாகப் பார்த்தும் கேட்டும் மகிழலாம்.

* குழந்தைகளுக்காக அதிகம் எழுதிய முந்தைய தலைமுறை எழுத்தாளர் பெ. தூரனின் கதைகள், பாடல்களை இந்த இணையதளத்தில் வாசிக்கலாம்: https://bit.ly/2Va6Ars

* குழந்தைகளுக்காகத் தமிழில் தொகுக்கப்பட்ட 10 தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியத்தை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்: https://bit.ly/2XECU7B

கணக்கற்ற கதைகள்

பெங்களூருவை மையமாகக் கொண்ட ‘பிரதம் புக்ஸ்' என்ற தன்னார்வ நிறுவனம் இந்திய, உலக மொழிகளில் ஆயிரக்கணக்கான நூல்களை, அழகான ஓவியங்களுடன் வெளியிட்டுவருகிறது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கணக்கற்ற நூல்கள் இந்த இணையதளத்தில் குவிந்து கிடக்கின்றன: https://storyweaver.org.in

இந்த இணையதளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்க் கதைகள், பிரிவு சார்ந்து தொகுக்கவும்பட்டுள்ளன: https://bit.ly/2VcuVwZ

* நாடறிந்த கல்வி, அறிவியல் செயல்பாட்டாளர் அரவிந்த் குப்தா. இவர் நடத்திவரும் இணையதளத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் உள்ளன. இந்த நூல்களில் பெரும்பாலானவை பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டவை: www.arvindguptatoys.com

* உலக அளவிலான பல்வேறு அரிய நூல்கள், புகழ்பெற்ற நூல்கள், தற்போது அச்சில் இல்லாதவை, பொதுப் பயன்பாட்டுக்காகக் காப்புரிமை துறந்த நூல்கள் Archive என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நேஷனல் புக் டிரஸ்ட் நூல்கள், புகழ்பெற்ற ரஷ்ய சிறார் நூல்கள் உள்ளிட்டவற்றை இந்த இணையதளத்தில் வாசிக்கலாம்: https://bit.ly/3cjDHPt

* தேசிய அளவில் குழந்தைகளுக்காக அதிக நூல்களை வெளியிட்டுள்ள நிறுவனம் நேஷனல் புக் டிரஸ்ட் (NBT). தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி நூல்களை இந்த நிறுவனம் இலவசமாகப் படிக்கக் கொடுக்கிறது: https://bit.ly/3eq5K1w

* சென்னையைச் சேர்ந்த தூலிகா நிறுவனம் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தேசிய அளவில் கவனம் பெற்ற பல நூல்களை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில நூல்களை இந்த நிறுவனம் இலவசமாக வழங்குகிறது: https://bit.ly/2XHlWFA

சிறார் இதழ்

* தமிழில் சமீபக் காலத்தில் வெளியாகி கவனம்பெற்ற தமிழ் சிறார் இதழ் ‘றெக்கை'. இதன் பழைய இதழ்களை கீழ்க்கண்ட முகவரியில் பதிவிறக்கி வாசிக்கலாம்: https://bit.ly/2zfMjsa

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x