Published : 12 Aug 2015 11:53 AM
Last Updated : 12 Aug 2015 11:53 AM
எனிட் பிளைடன் பிறந்த நாள்: ஆகஸ்ட் 11
ரொம்ப தூரத்தில் இருக்கும் மந்திர மரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு மாயாஜாலக் காட்டுக்குள் இருக்கிறது. அந்தக் காட்டில் இருக்கும் மரங்கள் வழக்கத்துக்கு மாறாக அடர்ந்த பச்சை நிறத்தில் இருந்தன. ரகசியம் பேசுவது போன்ற குரலில் ‘விஷ் விஷ் விஷ்' என்று குரலுடன் அந்த மரங்களின் இலைகள் காற்றை ஊதுகின்றன. அந்தக் காட்டின் ஒரு மூலையில் ரொம்ப தூரத்தில் இருக்கும் ஒரு மரம் மட்டும் பிரம்மாண்டமாகவும் உலகில் இருக்கும் அனைத்து பழங்களுடனும் வித்தியாசமாக இருக்கிறது.
அதுதான் மந்திர மரம். அந்த மரம் மிகவும் உயரமானது. எவ்வளவு உயரம் என்றால், மேகங்களையே தொடும் அளவுக்கு அம்மாம் உயரம். அந்த மரம் மிகவும் அகலமானது. எவ்வளவு அகலம் என்றால், அதன் கிளைகளைக் குடைந்து குட்டிக்குட்டி வீடுகள் கட்டி பலர் வசிக்கும் அளவுக்கு பரந்து விரிந்த கிளைகள்.
அந்தக் காட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் வீட்டுக்கு ஜோ, பெஸ்ஸி, ஃபேன்னி என்ற மூன்று சகோதர - சகோதரிகள் புதிதாகக் குடிவருகிறார்கள். ஃபேன்னி தங்கை, பெஸ்ஸி அவளுடைய அக்கா, ஜோ இவர்கள் இருவருடைய அண்ணன். கால்நடையாக அந்த மாயாஜால காட்டுக்குள் வரும் அவர்கள், ஒவ்வொரு மரமாக பார்த்துக்கொண்டே வருகிறார்கள். அதிசயங்கள் நிரம்பிய மந்திர மரத்தை அவர்கள் கண்டறிகிறார்கள். அதன் பிறகு இந்தப் பிரம்மாண்ட மரத்தின் மீது ஏறுவதும், அங்கே நடக்கும் சாகசங்களில் இவர்கள் பங்குபெறுவதும் வழக்கமாகிவிடுகிறது.
அந்த மரத்தின் உச்சியில் விநோதமான அபூர்வ மனிதர்கள் சிலர் வசிக்கிறார்கள். நிலவு முகம் கொண்டவர், சில்க்கி என்ற தேவதை, வீட்டில் எங்கே பார்த்தாலும் தேநீர் குடுவையும் பாத்திரங்களுமாக அடுக்கி வைத்திருப்பதுடன், அவற்றைக் கையிலும் சுமந்து திரியும் பாத்திர மனிதன், துவைத்துக்கொண்டே இருக்கும் வாஷ் அ லாட் என்ற அம்மா, மரத்தில் ஏறி வருபவர்கள் மீது ஏதாவது ஒரு திரவத்தை ஊற்றி விரட்டும் ஆங்க்ரி பிக்ஸீ உள்ளிட்டோர் அங்கே வாழ்கிறார்கள்.
நிலவைப் போன்று வட்டமான முகத்தைப் பெற்றதால் நிலவு முகம் என்ற பெயரைப் பெற்றவரின் வீடும் உருண்டை வடிவம், அவர் வீட்டிலிருக்கும் பொருட்களும்கூட வட்டமாகவே இருக்கின்றன. இவருடைய வீட்டில் இருக்கும் ஒரு சறுக்கலில் இறங்கினால், பிரம்மாண்ட மரத்திலிருந்து நேரடியாகக் கீழே வந்துவிடலாம். பட்டு போன்ற நீண்ட தங்க நிறக் கூந்தலைக் கொண்டவள் சில்க்கி எனப்படும் தேவதை.
இவர்கள் இருவரும் மூவர் அணிக்கு நல்ல நண்பர்கள். அவர்களுடன் கூகுள் பன், பாப் பிஸ்கட் போன்றவற்றைச் சாப்பிட்டு ஜாலியாக இருந்துவிட்டு, நடு மரத்தில் இருக்கும் சுழலும் சறுக்குப் படியில் உட்கார்ந்து மூன்று பேரும் சறுக்கிக்கொண்டே கீழே வந்துவிடுவார்கள்.
ஆனால், மரத்தில் ஏறும்போது மூவர் அணி ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்நியர்கள் மரத்தில் ஏறுவது தெரிந்துவிட்டால் ஆங்க்ரி பிக்ஸீ கையில் கிடைத்த திரவத்தை அவர்கள் மீது ஊற்றிவிடுவார். அதேபோல எப்போது பார்த்தாலும் துவைத்துக் கொண்டே இருக்கும் வாஷ் அ லாட், மரத்தில் ஏறுபவர்கள் மீது துவைத்த தண்ணீரை ஊற்றிவிடுவார். இதில் எல்லாம் சிக்காமல் மேலே ஏறி வந்தால் நிலவு முகம், சில்க்கி தேவதையைப் பார்க்க முடியும்.
அது மட்டுமில்லாமல் இந்த மரம், மேகங்களுக்கு மேலே, அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் அதிசய பூமிக்கும் போகலாம். அந்த மரத்தின் உச்சியில் ஒரு ஏணி இருக்கிறது. அதில் ஏறிச் சென்றால், அதிசய பூமிக்குள் நுழைந்துவிடலாம். ஒவ்வொரு முறையும் புது வடிவம் எடுக்கும் பூமி அது. ஏனென்றால், அது நகர்ந்துகொண்டே இருக்கக்கூடியது.
மூவரும் ஒவ்வொரு முறை செல்லும்போது, புதுப்புது நிலங்கள் அங்கே இருக்கும். எப்படியென்றால் ஒரு முறை எங்கே பார்த்தாலும் பிறந்தநாள் விழாக்களாக இருக்கும், மற்றொன்றில் இனிப்புப் பலகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும். இன்னொன்றில் நமக்குப் பிடித்ததை எல்லாம் எடுத்துக்கொள்ளலாம், வேறொன்றில் பிடித்ததை எல்லாம் செய்யலாம், எல்லாமே தலைகீழாகக் கிடக்கும் நிலப் பகுதி, கனவுகள் நிரம்பிய நிலப் பகுதி என மேகத்துக்கு மேலே வரும் ஒவ்வொரு புதிய பகுதியும் ஜாலியாக, குதூகல அனுபவத்தைத் தரும் பகுதிகளாக அமைகின்றன.
மூவர் அணியும் அபூர்வ மனிதர்களும், மேகங்களுக்கு மேலே இருக்கும் அந்த அபூர்வ பூமிக்கு அடிக்கடி போகிறார்கள். ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய சாகசமாக அமைகிறது. ஆனால், ஒரே ஒரு கட்டுப்பாடு. புதிய நிலப் பகுதி அங்கிருந்து நகர்வதற்குள் மந்திர மரத்தில் கீழே இறங்கிவிட வேண்டும். இல்லையென்றால், அந்தப் பகுதி குழந்தைகளுடன் அப்படியே நகர்ந்து போய்விடும், ஒரு சுற்று வந்த பின்னர்தான் கீழே இறங்க முடியும்.
(எனிட் பிளைடன் எழுதிய ‘தி ஃபாரவே டிரீ' கதைவரிசையின் கதைச் சுருக்கம்)
புறக்கணிப்பும் உலக அங்கீகாரமும்
‘தி ஃபாரவே ட்ரீ' என்ற கதை வரிசையை எழுதியவர் புகழ்பெற்ற குழந்தைகளுக்கான ஆங்கில எழுத்தாளர் எனிட் பிளைடன். இவருடைய புத்தகங்களை அந்தக் கால ஹாரி பாட்டர் என்று சொல்லலாம். கதைகள் ஹாரி பாட்டரைப் போலிருக்காவிட்டாலும், குழந்தைகளால் தீவிரமாக வாசிக்கப்பட்டன. மூன்று பாகங்களும், ஒரு படக்கதைப் புத்தகத்தையும் கொண்ட ‘தி ஃபாரவே ட்ரீ' வரிசை புத்தகங்கள் மொத்தம் 5 கோடி விற்பனையாகியுள்ளன.
லண்டனில் உள்ள கிழக்கு டல்விச்சில் பிறந்தவர் எனிட் பிளைடனின் அப்பாவுக்கு இயற்கை மீது அலாதி பிரியம். அதன் அடிப்படையிலேயே எனிட் பிளைடன் பல கதைகளை அமைத்திருப்பார். 1911-லேயே கவிதை எழுத ஆரம்பித்தார். ‘சைல்ட் விஸ்பர்ஸ்' என்ற முதல் குழந்தைப் பாடல் புத்தகம் 1922-ல் வெளியானது. அவருடைய புகழ்பெற்ற முதல் புத்தகம் 'தி ஃபாரவே டிரீ'யின் முதல் பகுதி ‘என்சான்டட் வுட்'.
ஆனால், எனிட் பிளைடன் எழுத ஆரம்பித்தபோது, அவருடைய அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் பிளைடனின் ஆரம்ப காலப் புத்தகங்களை பதிப்பாளர்கள் ஏற்கவில்லை. அதன் பிறகு மனவுறுதியுடன், "தீர்மான உணர்வு, தனித்தன்மை, சுயசார்புடன் எழுத ஆரம்பித்தேன். அதுவே என் எழுத்துக்கு அடிப்படை" என்றார் பிளைடன். பிற்காலத்தில் உலகம் போற்றும் எழுத்தாளரும் ஆனார்.
தேவதைக் கதைகள், மாயாஜாலக் கதைகள், புராணக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், சாகசக் கதைகள், பள்ளிக் கதைகள் என எல்லாவிதமான கதைகளையும் பிளைடன் எழுதியுள்ளார். ஒரே ஆண்டில் அவருடைய 50 புத்தகங்கள்கூட வெளிவந்துள்ளன.
உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நான்காவது எழுத்தாளர் அவர். அவருடைய புத்தகங்கள் 90 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT