Last Updated : 25 Mar, 2020 08:23 AM

 

Published : 25 Mar 2020 08:23 AM
Last Updated : 25 Mar 2020 08:23 AM

எட்டுத் திக்கும் சிறகடிக்கும் கதைகள் - திபெத்: அம்பே... ரம்பே...

ஓவியம்: தமிழ்

ஒரு பழைய வீட்டில் பூனையும் எலிகளும் வாழ்ந்து வந்தன. நிறைய எலிகள் இருந்ததால் பூனைக்குக் கொண்டாட்டமாக இருந்தது. அது தன் விருப்பப்படி எலிகளை வேட்டையாடி மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தது.

பூனை முதுமை அடைந்தது. முன்பு போல ஓடவோ எலிகளைப் பிடிக்கவோ முடியவில்லை. அதுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி, எலிகளை எல்லாம் அழைத்து ஒரு கூட்டம் போட்டது.

“நான் இனிமேல் எலிகளைத் தின்ன மாட்டேன்” என்று பூனை வாக்குக் கொடுத்திருந்ததால் எலிகள் நிம்மதியாகக் கூட்டத்துக்கு வந்தன.

“என் அன்பான எலி சகோதரர்களே, ஒரு முக்கியமான செய்தியைச் சொல்வதற்காகத்தான் நான் உங்களை எல்லாம் இங்கே அழைத்திருக்கிறேன். நான் இவ்வளவு காலம் மிகவும் மோசமான முறையில் வாழ்ந்துவந்தேன். தேவை இல்லாமல் உங்களைப் போன்ற நல்ல எலிகளைத் துன்புறுத்தினேன். கொல்லவும்கூடச் செய்தேன். அதற்காக நான் இப்போது வருந்துகிறேன். நான் உங்களுக்குச் செய்த தீமைகளுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.”

பூனையின் பேச்சை எலிகள் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தன.

“இன்று முதல் நான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க ஆசைப்படுகிறேன். எனக்கு வயதாகிவிட்டது. நான் பக்திமார்க்கத்தை விரும்புகிறேன். இனிமேல் எந்தப் பிராணியையும் நான் தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனால், நான் என்றும் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால், உங்கள் மீது எனக்கு அவ்வளவு அன்பு! அதனால் நீங்கள் எல்லோரும் தினமும் காலையிலும் மாலையிலும் என் முன்னால் வரிசையாக ஊர்வலம் செல்ல வேண்டும். என்னை மதித்து இந்த யோசனையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.”

பூனையின் பேச்சைக் கேட்டு எலிகள் ஆச்சரியமடைந்தன. இந்தப் பூனைதான் எவ்வளவு மாறிவிட்டது! இந்தப் பூனைக்குப் பயப்படாமல் வாழ முடியும் என்றால், அது எவ்வளவு அற்புதமானது!

எலிகள் தினமும் காலையிலும் மாலையிலும் அந்தப் பூனையின் முன்னால் அணிவகுத்துச் செல்வதாக ஒப்புக்கொண்டன.

பூனை அன்று மாலையில் தன் இருப்பிடத்தில் மிடுக்காக நின்றது. எலிகள் வரிசையாக வந்தன. ஒவ்வோர் எலியும் பூனைக்கு வணக்கம் சொல்லி முன்னால் சென்றது. ஆனால், அந்தத் தந்திரக்காரப் பூனை ஆரம்பத்தில் ஒழுங்காக நின்றது. அணிவகுப்பில் கடைசி எலி தன் முன்னால் வந்த நொடியில், அது மின்னல் எனப் பாய்ந்து பிடித்தது. இந்த விவரம் முன்னால் சென்ற எலிகளுக்குத் தெரியவில்லை. பிடித்த எலியை அந்தப் பூனை தின்றது.

பல நாட்கள் இந்தத் தந்திரம் தொடர்ந்தது.

எலிகளின் கூட்டத்தில் இரண்டு கெட்டிக்கார எலிகள் இருந்தன. ஓர் எலியின் பெயர் அம்பே. இன்னோர் எலியின் பெயர் ரம்பே. இந்த இரண்டு எலிகளும் நண்பர்கள். எலிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதைக் கண்டுபிடித்துவிட்டன. இது பூனையின் சதிவேலை என்று முடிவு செய்தன.

அம்பேவும் ரம்பேவும் கூடி ஆலோசித்து, அந்தப் பூனையின் கொடுமைக்கு முடிவுகட்டுவதற்கு ஒரு வழி கண்டுபிடித்தன. அதன்படி, எலி ஊர்வலத்தின் முன்னால் அம்பே நடந்தது. கடைசியில் ரம்பே நடந்தது.

அம்பே பூனை முன்னால் வந்தபோது, “நண்பா ரம்பே, நீ எங்கே இருக்கிறாய்?” என்று உரக்கக் கேட்டது.

கடைசியில் இருந்த ரம்பே, “நான் இங்கே இருக்கிறேன், நண்பா” என்று பதில் கொடுத்தது.

சிறிது நேரத்துக்குப் பிறகு அம்பே மீண்டும் அழைத்தது. ரம்பே முன்பு சொன்னது போலவே பதில் சொன்னது. இப்படி அந்த எலி ஊர்வலம் பூனையைக் கடந்து செல்லும்வரை இரண்டு எலிகளும் உரக்கப் பேசிக்கொண்டன. பூனையால் எதுவும் செய்ய முடியவில்லை. அன்று பட்டினி.

‘இன்று எப்படியோ இந்த எலிகளுக்கு இந்தத் தந்திரம் தோன்றிவிட்டது. ஆனால், நாளை இப்படி நடக்காது’ என்று பூனை நம்பியது. ஆயினும், மறுநாள் நடந்த எலி ஊர்வலத்திலும், “ரம்பே, நீ எங்கே இருக்கிறாய்?” என்று அம்பே கேட்டது.

“நான் கடைசியில் வந்துகொண்டிருக்கிறேன்” என்று ரம்பே பதில் சொன்னது. இப்படி முன்னாலும் பின்னாலும் இருந்து அடிக்கடி சத்தம் போட்டுக்கொண்டே அந்த எலிகள் பூனையைக் கடந்து சென்றன. இரண்டாவது நாளும் பட்டினி.

அடுத்த நாள் ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பு அம்பே, “இன்று எல்லா எலிகளும் கவனமாக இருக்க வேண்டும். அந்தப் பூனை நம்மை ஏமாற்றக்கூடும். ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் எல்லோரும் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்துவிட வேண்டும்” என்றது.

எலி ஊர்வலம் பூனையை நெருங்கியபோது அம்பே, “என் நண்பனே ரம்பே, நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டது.

“நான் கடைசியில் இருக்கிறேன், நண்பா” என்று ரம்பே பதில் சொன்னது.

அந்தப் பூனையால் இதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அது எலிகளின் இடையே ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது. இப்படி நடக்கலாம் என்று முன்பே எச்சரிக்கையாக இருந்த எலிகள், விரைவாகப் பாய்ந்தோடித் தப்பித்தன.

இனி ஒரு போதும் இந்தப் பூனையை நம்பக் கூடாது என்ற முடிவுக்கு எலிகள் வந்தன. உணவு கிடைக்காததால் பூனை வேறு இடத்துக்குச் சென்றுவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x