Published : 25 Mar 2020 08:20 AM
Last Updated : 25 Mar 2020 08:20 AM

முறிந்த சிறகு

தங்கள் தந்தை இறந்த பிறகு இரண்டு சகோதரர்கள், தங்கள் கடைசி சகோதரனைக் காட்டுக்குத் துரத்திவிடுகிறார்கள். காட்டுக்குச் செல்லும் அவன் சிறகு முறிந்த ஒரு பறவைக்கு உதவுகிறான். அது மந்திரப் பறவை. எதுவுமில்லாமல் இருக்கும் அவன் வளம் பெறுவதற்கு அந்தப் பறவை உதவுகிறது.

இதைப் போன்ற கதைகளை நிறைய கேட்டிருப்போம், படித்திருப்போம். ஆனாலும் திகட்டாத கதைகள்தாம் இவை. இந்தக் கதைகளின் அடிப்படை ஒன்றுதான். உழைக்காதவர்களுக்கும் மற்றவர்களை மதிக்காதவர்களுக்கும் எதுவும் கிடைக்காது என்பதே இந்தக் கதைகள் கடத்தும் சேதி.

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ‘முறிந்த சிறகு – முதலிய ஆசியக் கதைகள்’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள தலைப்புக் கதை இது. பெலிந்தர் தனோவா எழுதிய இந்தப் புத்தகத்துக்கு ஓவியம் வரைந்திருப்பவர் பாலின் தனோவா. தமிழில் தந்தவர் சிறார் எழுத்தாளர் பூவண்ணன்.

திகட்டாத கதைகள்

தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஜப்பானியக் கதையில் ஒடோகோ என்ற சோம்பேறி, தெங்கு என்ற பூதத்திடம் குறும்பு செய்கிறான். அந்த பூதத்தின் வைக்கோல் போர்வையை ஏமாற்றி வாங்கிக்கொண்டு, பிறர் கண்ணுக்குத் தெரியாமல் அவன் மறைந்து போகிறான். ஊரிலிருப்பவர்களின் கண்களுக்குப் புலப்படாமல் தன் குறும்பு வேலைகளையும் காட்டுகிறான். கடைசியில் அவன் எப்படி ஊர் மக்களிடம் பிடிபடுகிறான் என்பது இந்தக் கதையில் வேடிக்கையாகச் சொல்லப்பட்டுள்ளது.

இலங்கைக் கதையில் புகழ்பெற்ற பண்டைய கிரேக்கக் காவியமான ‘ஒடிசி’யில் வரும் ட்ரோஜான் மரக் குதிரையைப் போல், மர யானை வருகிறது. இலங்கைப் பண்பாட்டில் யானைகள் முக்கிய இடம்பிடித்தவை என்பது நினைவுகூரத்தக்கது. எரிமலை ஏன் புகைகிறது என்பது பற்றிய பிலிப்பைன்ஸ் கதை, வழிபோக்கர்களைக் கழுதைகளாக மாற்றிவிடும் மந்திரக் கிழவி பற்றிய சீனக் கதை என இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் சுவாரசியமாக இருக்கிறது.

மறைந்த சிறார் எழுத்தாளர் பூவண்ணனின் மொழிபெயர்ப்பு எளிமையான நடையுடன், சிறந்த வாசிப்பு அனுவத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது. கதையைத் தாண்டி, மொழியைக் குழந்தைகள் கற்றுக்கொள்ளவும் இதுபோன்ற நூல்கள் கைகொடுக்கும்.

முறிந்த சிறகு முதலிய ஆசியக் கதைகள்,
பெலிந்தர் தனோவா (தமிழில்: பூவண்ணன்)
இரண்டு நூல்களும் நேஷனல் புக் டிரஸ்ட்
(என்.பி.டி.) வெளியீடு, தொடர்புக்கு: 044-28252663

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x