Published : 25 Mar 2020 08:18 AM
Last Updated : 25 Mar 2020 08:18 AM
சத்யஜித் ராயைத் திரைப்பட இயக்குநராக, ‘பதேர் பாஞ்சாலி’ போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியவராக அறிந்திருப்போம். ஆனால், சத்யஜித் ராய் ‘சந்தேஷ்’ என்ற சிறார் இலக்கிய இதழின் ஆசிரியராகச் செயல்பட்டது, ஃபெலூடா என்ற உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதை வரிசையை எழுதியது, குழந்தைகளுக்காக ஓவியம் வரைந்தது போன்றவற்றை பலரும் அறிந்திருக்க மாட்டோம். அவருடைய மற்ற படைப்புத்திறன்கள் அவருடைய திரைப்படங்கள் அளவுக்கு நம்மிடையே பிரபலமாக இல்லை.
அவர் எழுதிய பிரபல திகில் கதை ‘பசித்த மரம்’. காந்தி பாபு என்ற தாவரவியல் பேராசிரியர், தாவரவியலாளர்களால் இதுவரை வகைப்படுத்தப்படாத செப்டோபஸ் என்ற விநோதத் தாவரத்தை எடுத்து வந்து வளர்க்கிறார். அந்தத் தாவரம் ஓர் ஊனுண்ணி மரம், அது உயிரினங்களைக் கொல்ல முயல்கிறது. இதற்காக வசீகரமானதொரு நறுமணத்தையும் அது வெளியிடுகிறது, பசியுடன் அனைத்தையும் உண்ணத் தொடங்குகிறது. பரிமள், அபிஜித் ஆகியோரின் உதவியுடன் இந்தத் தாவரத்திடம் இருந்து காந்தி பாபு எப்படி மீள்கிறார் என்பதே இந்தத் திகில் கதை.
நேஷனல் புக் டிரஸ்ட் வெளி யிட்டுள்ள ‘சிறந்த கதைகள் பதிமூன்று’ என்ற தொகுப்பில் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது. ராயைத் தவிர, ரஸ்கின் பாண்ட், பீஷம் சாஹ்னி, சுந்தர ராமசாமி என இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் குஜராத்தி, மராட்டி, ஓடியா, பஞ்சாபி, உருது, அஸ்ஸாமி உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட இளையோருக்கான கதைகளும் அடங்கிய தொகுப்பு இது. ஓவியம் வரைந்தவர் மிக்கி பட்டேல். தமிழில் வல்லிக்கண்ணன் மொழிபெயர்த்துள்ளார்.
ஸ்டாம்பு சேகரிப்பில் போட்டி
பிரபல தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதியுள்ள ‘ஸ்டாம்பு ஆல்பம்’ கதையில் ராஜப்பா, நாகராஜன் ஆகிய இரண்டு சிறுவர்களிடையே ஸ்டாம்பு சேர்ப்பதில் போட்டி ஏற்படுகிறது. நாகராஜனுக்கு வெளிநாட்டிலிருந்து வந்துசேரும் ஸ்டாம்பு ஆல்பம் மேல் பொறாமைகொள்கிறான் ராஜப்பா. ஸ்டாம்பு சேகரிப்பதில் நாகராஜனை விஞ்சுவதற்காக ராஜப்பா செய்யும் விபரீதச் செயலும், அதன் தொடர்ச்சியாக நடப்பதும் இந்தக் கதையை முக்கியமாக்குகின்றன.
பிரபல ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் எழுதிய கதை ‘சீதாவும் ஆறும்’. சீதா எனும் சிறுமி ஓர் ஆற்றிடைத் தீவில் பெருவெள்ளத்தில் தனியாக மாட்டிக்கொள்கிறாள். அவள் தஞ்சமடையும் அரச மரமும் கடைசியில் வெள்ளத்தில் வீழ்ந்துவிடுகிறது. இந்தப் பின்னணியில் கிருஷ்ணா எனும் சிறுவனால் சீதா காப்பாற்றப்படுகிறாள். பாட்டிக்கு மருத்துவ சிகிச்சையளிப்பதற்காக அவளுடைய தாத்தா வேறு ஊருக்குச் சென்றிருந்தபோதுதான் இப்படி நடக்கிறது. கிருஷ்ணாவும் தன் ஊருக்குச் சென்றுவிடுகிறான். அடிப்படை மனிதத்துவத்தையும் அன்பு-உறவுப்பிணைப்பையும் இந்தக் கதையின் மூலமாக ரஸ்கின் பாண்ட் சிறப்பாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.
போதிராஜின் திடீர் மாற்றம்
பீஷம் ஸாஹ்னி எழுதிய ‘கவண் வைத்திருந்த சிறுவன்’ கதையில் வரும் போதிராஜ் என்ற வலுவான சிறுவன் எதையும் நாசம் செய்பவனாக, பறவைகளைத் தொந்தரவு செய்பவனாக அறியப்பட்டவன். தன் வீட்டில் பழைய தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டு வைக்கும் அறையைத் தூய்மைப்படுத்த அவனை அழைத்துச் செல்கிறான் மற்றொரு சிறுவன். அந்த அறையில் ஒரு மைனா கூடும், அதில் சிறு மைனா குஞ்சுகளும் இருக்கின்றன. குஞ்சுகளைக் கவணால் அடிக்க போதிராஜ் முயலும்போது, ஒரு பருந்து அங்கே வருகிறது. வழக்கமாகப் பறவைகளைத் தொந்தரவு செய்யும் போதிராஜ் அன்றைக்கு என்ன செய்கிறான் என்பதுதான், இந்தக் கதையின் சுவாரசியமான அம்சமே.
குழந்தைகளை நாம் எந்த அளவுக்குப் புரிந்துகொண்டி ருக்கிறோம்; இன்னும் புரிந்துகொள்ள வேண்டியது எவ்வளவு உள்ளது என்பதை இந்தக் கதைத் தொகுப்பு சிறப்பாக உணர்த்துகிறது. இந்த நான்கு கதைகள் மட்டுமல்லாமல், இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுமே குழந்தைகளும் பெரியவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய சிறந்த கதைகள். இந்தியாவைப் பற்றியும் இந்தியாவின் பல்வேறுபட்ட நிலங்கள் - அங்கு வாழும் மனிதர்களைப் பற்றியும் மேம்பட்ட ஒரு சித்திரத்தை இந்த நூல் தருகிறது.
கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT