Published : 11 Mar 2020 11:52 AM
Last Updated : 11 Mar 2020 11:52 AM
இன்றைக்கு நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வியின் எல்லை என்பது வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் சுருங்கிவிட்டது. ‘ஸ்மார்ட் கிளாஸ்’ என்பன போன்ற நவீன முறைகள் கற்றலுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், இயற்கை சார்ந்த உலக விஷயங்கள் அனைத்தும் அவர்களுக்கு புத்தகத்தோடு நின்றுவிடுகின்றன.
நமக்கு உணவு எங்கிருந்து கிடைக்கிறது என்ற கேள்விக்கு இன்றைய குழந்தைகளில் பெரும்பாலோர், ‘கடையில் இருந்து’ என்று வெகுளியாகச் சொல்லக்கூடும்.
இந்த நிலையைக் களைய இயற்கை, உழவு, வேளாண்மை, உணவு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் ஒரு சிறுவர் பள்ளி ஈடுபட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்பிரவுட்ஸ் மாண்டிசோரி பள்ளி, ‘செம்புலம் - நீடித்த வளர்ச்சி’ அமைப்புடன் இணைந்து மாணவர்களுக்கான உழவுத் திட்டத்தைக் 2017-ல் தொடங்கியது.
11 முதல் 14 வயதுவரை வளரிளம் பருவத்தின் தொடக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு மண்ணுடன் பிணைப்பை உருவாக்கும் நோக்கில் உழவு, கால்நடை பராமரிப்பு, பறவை நோக்குதல், மண்பானை வனைதல், விளைவித்த உணவைச் சமைத்தல் ஆகியவை இத்திட்டத்தின் முதன்மைச் செயல்பாடுகள்.
மார்ச் 6 அன்று சென்னை ராகசுதா அரங்கில் நடைபெற்ற இத்திட்டத்தின் 2019-2020க்கான நிறைவு விழா நடைபெற்றது. சிறப்பாக செயல்பட்ட குழந்தைகளுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மிகச் சிறுவயதிலேயே குழந்தைகளின் சிந்தனைமுறையில், இயற்கை, உழவு குறித்த புரிதலை ஏற்படுத்துவது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்; உணவின் முக்கியத்துவம் குறித்த அக்கறையுடன் வளர்வதற்கு இது அவர்களுக்கு உதவும்!
- அபி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT