Published : 04 Mar 2020 08:29 AM
Last Updated : 04 Mar 2020 08:29 AM

புதியதோர் உலகம் 05: சமைக்கும் ஆண்கள், போரிடும் பெண்கள்!

வணக்கம், என் சுட்டி நட்புகளே. மார்ச் 8-ம் தேதியோட சிறப்பு என்ன தெரியுமா? உலக உழைக்கும் மகளிர் நாளை அன்னைக்குக் கொண்டாடுறாங்க. அதையொட்டி சுல்தானாங்கிற ஒரு பெண்ணை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போறேன்.

சுல்தானா என்றால், அரபி மொழியில் அரசின்னு அர்த்தம். நான் சொல்லப் போற கதைல வரும் பெண்ணோட பேரும் சுல்தானாதான். கதைல வரும் உலகம் இப்போ நெஜத்துல இல்லைன்னாலும், எதிர்காலத்துல நிச்சயம் பார்க்கலாம்னு நம்புறேன்.

சுல்தானா ஒரு பெண்ணைச் சந்திக்கிறார். சுல்தானாவுக்கு ஏற்கெனவே தெரிந்த சிஸ்டர் சாராவைப் போல் அவர் இருக்கார். இருவரும் ஒரு புது உலகத்துக்குள் நடந்துசெல்கிறார்கள். அவர்கள் செல்லும் பாதை வெல்வெட்போல் மெத்துமெத்தென்று இருக்கிறது. அந்த ஊரில் பரபரப்பாக வேலை நடந்துகொண்டிருக்கிறது. வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் பெண்கள்! சுல்தானா, ஆண்களைப் போல் வெட்கி நாணத்துடன் இருப்பதாகக் கூறி அந்தப் பெண்கள் கிண்டல் செய்கிறார்கள்.

சமையல் செய்யும் ஆண்கள்

அது பெண்ணுலகம். அப்படியானால், ஆண்களெல்லாம் எங்கே என்று சுல்தானா கேட்கிறார். அவர்கள் அவர்களுக்குரிய இடத்தில், அதாவது வீட்டுக்குள் இருக்கிறார்கள்.

அந்த உலகத்தில் ஆண்கள் எல்லாம் வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சமையல் பிடித்திருக்கிறது. ஏனென்றால், உழைப்பைப் பிழிந்தெடுக்கும் நெருக்கடியான ஒன்றாக, சமையல் வேலை அந்த உலகத்தில் இல்லை. அதனால் அவர்கள் மகிழ்ச்சியாக அந்த வேலையைச் செய்துகொண்டிருக் கிறார்கள். சமையல் வேலை எப்படி எளிதானதாக மாறியது?

பெண்களின் கண்டுபிடிப்புகள்தாம். அடுப்பெரிப்பதற்குச் சூரிய ஆற்றலைச் சேகரித்துத் தரும் அதிநவீனக் கருவியைப் பெண்கள் கண்டுபிடித்துத் தந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல மேகங்களில் இருந்து தண்ணீரை நேரடியாக எடுத்துவருவதற்கான தொழில்நுணுக்கத்தையும் அவர்கள் கண்டறிந்துவிட்டதால், தண்ணீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவிடுகிறது.

இதையெல்லாம் கேட்டு ஆச்சரியப்படும் சுல்தானாவுக்கு, ஒரு கேள்விக்கு மட்டும் விடை தெரிந்தாக வேண்டும் என்ற ஆவல் மேலெழுகிறது. ஆண்களை எப்படி உங்களால் வீட்டுக்குள் அடைக்க முடிந்தது?

கதையா, நிஜமா?

அந்தக் கேள்விக்கும் அந்தப் பெண் பதில் சொல்கிறார். ஒரு முறை பக்கத்து நாடு பெண்ணுலகம் மீது போர் தொடுத்துவந்தது. ஆண்கள் எல்லாம் போரிட்டு மொத்தமாகத் தோற்றுப்போய் விட்டார்கள். கடைசியாக ஒரு வழி இருக்கிறது என்று ஒரு பெண் அறிஞர் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட பெண்ணுலகின் ராணி நாட்டின் தன்மானம், விடுதலையை நிலைநாட்ட ஆண்கள் எல்லாம் வீட்டுக்குள் போய்விட வேண்டுமென உத்தரவிட்டார்.

போரில் சண்டையிட்டு வலியுடனும் புண்களுடனும் இருந்த ஆண்கள், அதுதான் நல்லது என்று பேசாமல் வீட்டுக்குள் போய்விட்டார்கள். தங்கள் நாட்டை எப்பாடு பட்டாவது காப்பாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை ஆண்களுக்கு இல்லை. ஆனால், பெண்கள் சமயோசிதமாகச் செயல்பட்டு அந்தப் போரில் வென்றுவிட்டார்கள். இதுதான் ஆண்கள் வீட்டுக்குள் அடைபட்ட கதை.

இது எல்லாம் நெசமா கதையா என்கிற கேள்வி வருகிறது, இல்லையா? பெண்களைக் காலம்காலமாக வீட்டில் முடக்கிவைத்து அவர்களுடைய சிந்தனையும் வேலைத்திறனும் முடக்கப்பட்டுள்ளன. பெண்கள் வெளியுலகுக்கு வந்தால், அறிவியல் துறையில் மட்டுமல்லாமல் எல்லாத் துறைகளிலும் பெரும் சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்று ‘சுல்தானாவின் கனவு‘ என்கிற நூல் சொல்கிறது. அதுதானே நிஜம்.

இந்தக் கதை இன்றைக்கு முழுமையாக நிஜமாகவில்லை என்றாலும், சுல்தானாவின் கனவு பலிக்கத் தொடங்கிவிட்டது. பெண்கள் அந்தப் பாதையில்தான் நடைபயின்று வருகிறார்கள். சுல்தானாவின் கனவு நிச்சயம் ஒரு நாள் நனவாகும். இந்தக் குட்டிப் புழு சொல்றத குறிச்சு வெச்சுக்கோங்க!

லட்சியக் கனவு

இந்தியத் துணைக்கண்டத்தில் பெண்விடுதலை குறித்த சிந்தனைகளை முன்வைத்தவர்களில் வங்கத்தைச் சேர்ந்த ரொக்கையா சக்காவத் ஹுசைன் முக்கியமானவர்.

அவர் ஆங்கிலத்தில் எழுதிய இந்த முதல் குறுநாவல் 1905-ல் ‘மெட்ராஸ் ரெவ்யு‘ என்ற இதழில் வெளியானது. போர், வன்மம், ஆணதிகாரம் இல்லாத ஒரு லட்சிய உலகை இந்தக் கதை முன்னிறுத்துகிறது.

சாலை செல்வம், வ. கீதா மொழிபெயர்ப்பில் தாரா பதிப்பகம் வெளியீடாக இந்த நூல் தமிழுக்கு வந்துள்ளது.

இந்த நூலுக்கான ஓவியங்களை வரைந்தவர் கோண்ட் பழங்குடி இனத்தைச் சேர்ந்த துர்கா பாய். கதை சித்தரிக்கும் கற்பனை உலகுக்குத் தனித்துவ வடிவத்தை இவருடைய ஓவியங்கள் கொடுத்துள்ளன.

ரொக்கையா பெண்களுக்கான பள்ளியை நடத்தினார்; ஆண்-பெண் சமத்துவம், சமநீதி, பெண் விடுதலை போன்ற துறைகள் சார்ந்து தொடர்ந்து இயங்கிவந்தார்.

அதன் நீட்சியாகவே இந்தக் கதையை அவர் எழுதினார். அவர் கனவாகச் சித்தரித்தது நூறாண்டுகளைக் கடந்து இன்றைக்கும் பெருமளவு கனவாகவே இருப்பது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டியது.

‘சுல்தானாவின் கனவு’, தாரா வெளியீடு, தொடர்புக்கு: 044 24426696

ஆண் பிள்ளை யார், பெண் பிள்ளை யார்?

ஆண்-பெண் சமத்துவம், மகளிர் உரிமைகள், பெண்கள் மேம்பாடு குறித்து அனைவருக்கும் புரியும் வகையில் பல குறுநூல்களை எழுதியவர் கமலா பாசின்.

அவர் எழுதிய எளிமையான, குறிப்பிடத்தக்க நூல் ‘ஆண் பிள்ளை யார், பெண் பிள்ளை யார்?’ மலையாளம் வழியாக இதைத் தமிழில் தந்திருப்பவர் யூமா வாசுகி; புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு.

பெண் குழந்தைகளின் அடையாளங்களாக முன்னிறுத்தப் படுபவை: முடி வைத்திருப்பது, கழுத்துச் சங்கிலி-தோடு அணிந்திருப்பது, சமையலில் உதவுவது, அழகாக இருப்பது-அன்புடன் நடந்துகொள்வது…

ஆண் குழந்தைகளின் அடையாளங்களாக முன்னிறுத்தப் படுபவை: காற்சட்டை அணிவது, மரத்தில் ஏறுவது, கனமான பொருட்களைத் தூக்குவது, வயலில் வேலை செய்வது, கடை வைத்து வியாபாரம் செய்வது, பொறுப்பாகச் செயல்படுவது…

இவையெல்லாம் ஆண்கள்-பெண்கள் இடையிலான வேறுபாட்டுக்கு அடிப்படையா? இல்லை. உடல் உறுப்புரீதியிலான இயற்கையான அடிப்படை வேறுபாடுகளைத் தவிர ஆண்கள்-பெண்களிடையே வேறு எந்த வேறுபாடுகளும் இல்லை.

ஆண்கள் உழைப்பு கடுமையானது - பெண்கள் உழைப்புக்குப் பெரிய மதிப்பில்லை; ஆண்கள் ஆற்றல் மிகுந்தவர்கள் - பெண்கள் பலவீனமானவர்கள், ஆண்கள் பல வேலைகளில் சிறந்தவர்கள்-பெண்கள் திறமை குறைந்தவர்கள் என்ற போலித் தோற்றம் உலகில் நீண்டகாலமாக உருவாக்கப்பட்டு வந்துள்ளது.

இவையெல்லாம் சமூகம் செயற்கையாக உருவாக்கிய வேறுபாடுகள். இப்படி வலிந்து வேறுபாடுகளை உருவாக்கியதால் நம் குடும்பம், சமூகம், நாட்டு வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைக்குப் பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்பதை அனைவரும் வெளிப்படையாகவே பார்க்கிறோம். அவரவர் ஆர்வம், விருப்பம், தனித்தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் செயல்பட்டால் பெண்களோ ஆண்களோ எந்த ஒன்றையும் சாதிக்க முடியும் என்கிறார் கமலா பாசின். ஆண் பிள்ளை யார், பெண் பிள்ளை யார்?, புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044 - 24332924

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x