Published : 26 Feb 2020 09:48 AM
Last Updated : 26 Feb 2020 09:48 AM
மருதன்
நான் விஞ்ஞானி அல்ல, சுண்டெலி விஞ்ஞானி என்றால் வெள்ளை வெளேர் என்று பளிச்சிடும் அங்கி அணிந்துகொண்டு பரிசோதனைச் சாலையில் அமைதியாக ஆய்வுகளை மேற்கொள்பவர் என்று நம்பிக்கொண்டிருந்தால் ஸ்காட்டிஷ் விஞ்ஞானி ஜே.எஸ். ஹால்டேனை இதுவரை நீங்கள் பார்த்ததில்லை என்று பொருள்.
வாரம் மூன்று நாட்கள் தலை முதல் கால்வரை புழுதியோடு வீதியில் நடந்து போவார். சில நேரம் சட்டை கிழிந்திருக்கும். அடுத்த மூன்று நாட்கள் கழிவு நீர் எங்கு பெருக்கெடுத்து ஓடுகிறதோ அதற்குப் பக்கத்தில் மணிக்கணக்கில் அமர்ந்துகொண்டு, அடிக்கடி குனிந்து மோப்பம் பிடித்தபடி குறிப்பு எடுத்துக்கொண்டிருப்பார். இன்னும் ஒரு நாள் பாக்கி இருக்கிறது அல்லவா? அன்று அவரை வீட்டிலுள்ள ஒரு பெரிய பெட்டிக்குள் பார்க்கலாம். தும்மிக்கொண்டோ இருமிக்கொண்டோ அரை மயக்கத்தோடோ உள்ளே படுத்துக் கிடப்பார்.
‘‘என்ன செய்கிறீர்கள் ஹால்டேன்” என்று கலவரத்தோடு கேட்டால், ‘‘பார்த்தால் தெரியவில்லையா? ஆராய்ச்சி செய்கிறேன்” என்பார். ‘‘விதவிதமான வாயுக்களை ஆராய்வது எனக்குப் பிடிக்கும். பூமிக்கு அடியில் குடைந்து பாதாள ரயில் பாதை அமைத்தால் மக்களால் தடையில்லாமல் சுவாசிக்க முடியுமா என்று லண்டன் ரயில்வே அதிகாரிகள் கேட்டார்கள். அவர்கள் வெட்டி வைத்திருக்கும் விதவிதமான பள்ளங்களுக்குள் சென்று அங்கே என்னென்ன வாயுக்கள் உலாவுகின்றன என்று ஆய்வு செய்கிறேன்.
கழிவு நீருக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு எந்த மாதிரியான உடல் கோளாறுகள் வரும் என்று சுகாதாரத் துறையினர் கேட்டனர். அவர்களுக்காக விதவிதமான சாக்கடைகளை ஆராய்ந்துவருகிறேன். ஆழ்கடல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு நேரம் சுவாசிக்காமல் இருக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகப் பெட்டிக்குள் படுத்துக்கொள்கிறேன். இந்த விளக்கம் போதுமா?”
ஓர் ஆய்வு முடிந்தால் உடனே வேறு எங்கிருந்தாவது அழைப்பு வரும். ஒரு நாள் சுரங்கத் துறை அதிகாரிகள் அவசரமாகத் தொடர்புகொண்டார்கள். ‘‘ஹால்டேன், உடனடியாகக் கிளம்பி வாருங்கள். சுரங்கத்தில் விபத்து நடந்துவிட்டது. தொழிலாளர்கள் கொத்துக் கொத்தாக மயங்கி விழுந்துவிட்டனர். சிலர் இறந்தேவிட்டனர். என்ன நடக்கிறது என்று புரியவில்லை.”
அடுத்த அரை மணி நேரத்துக்குள் வந்துவிட்டார் ஹால்டேன். அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரங்கத்துக்குள் இறங்கி ஆராய்ச்சியை தொடங்கிவிட்டார். முதல் காரியமாக, காற்று, மண், புழுதி, அழுக்கு அனைத்தையும் தனித்தனியே சேகரித்துக்கொண்டார். தரையில் இறைந்து கிடந்த தொழிலாளர்களின் பொருட்களை எல்லாம் குறித்துக்கொண்டார். பல மணி நேரம் உள்ளேயே அமர்ந்திருந்து அங்கும் இங்கும் மோப்பம் பிடித்தார். பிறகு உடல் முழுக்கப் புழுதியோடு வீட்டுக்கு ஓடினார்.
முதல்கட்ட குறிப்புகள் தயார். ‘‘நான் கீழே இறங்கியபோது என் கையிலிருந்த விளக்கு அணையவில்லை. தொழிலாளர்கள் விட்டுச் சென்ற விளக்குகளும் எரிந்துகொண்டுதான் இருந்தன. ஆக்சிஜன் குறைவாக இருந்திருந்தால் எண்ணெய் விளக்குகள் அணைந்திருக்கும். எனவே, தொழிலாளர்கள் ஆக்சிஜன் குறைப்பாட்டால் மயங்கவில்லை. ஏதோ நச்சு வாயுதான் தொழிலாளர்களைத் தாக்கியிருக்க வேண்டும். அது என்ன?”
சுரங்கத்திலிருந்து கொண்டுவந்த வாயுவை ஆராய்ந்தார் ஹால்டேன். கார்பன் மோனாக்சைடு என்று தெரிந்தது. உடனே ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் சுண்டெலியை அடைத்து கார்பன் மோனாக்சைடைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செலுத்த ஆரம்பித்தார். எந்தக் கட்டம் வரை எலி சிக்கலின்றி சுவாசிக்கிறது, எப்போது திணற ஆரம்பிக்கிறது என்று குறித்துக்கொண்டார்.
ஒரு நச்சு வாயு என்னவெல்லாம் செய்யும் என்பதைத் தெரிந்துகொள்ள சுண்டெலி போதும். ஆனால், என் நோக்கம் நச்சு வாயு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதைத் தெரிந்துகொள்வது. தன் உதவியாளரை வரவழைத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவரிடம் விளக்கினார். பிறகு சுண்டெலியை வெளியில் அனுப்பிவிட்டு, கண்ணாடிப் பெட்டிக்குள் நுழைந்துகொண்டார். அவர் கை காட்டியதும் உதவியாளர் கொஞ்சம் கொஞ்சமாக நச்சு வாயுவை உள்ளே செலுத்த ஆரம்பித்தார்.
கண்கள் எப்போது எரிய ஆரம்பிக்கின்றன? படிப்படியாக எப்படி மூச்சிரைப்பு அதிகரிக்கிறது? எப்போது வயிற்றில் குமட்டல் உண்டாகிறது? எப்போது இமைகள் கனத்துப் போகின்றன? கால் எப்போது நடுங்க ஆரம்பிக்கிறது? நிற்க முடியாமல் எப்போது உடல் சரிய ஆரம்பிக்கிறது? எப்போது நினைவு மந்தமாகிறது? நினைவு மந்தமாகும்போது எனக்கு என்ன நேர்கிறது? எப்போது என் உலகம் இருட்டாக மாறுகிறது?
சக்கை போல் வெளியில் வந்து விழுந்தார் ஹால்டேன். அனைத்தையும் அவசர அவசரமாக குறித்துக்கொண்டார். சுங்க அதிகாரிகளை உடனே கூப்பிடு என்றார். அவர்கள் வந்து சேர்வதற்குள் பரிசோதனை முடிவு தயார்!
‘‘நண்பர்களே, பூமிக்கு அடியிலுள்ள கார்பன் மோனாக்சைடுதான் தொழிலாளர்களைப் பாதித்திருக்கிறது. அவர்களுக்கு என்னவெல்லாம் பாதிப்பு நடந்திருக்கும் என்பதை இதில் குறித்து வைத்திருக்கிறேன். இனி கவனமாக இருக்கச் சொல்லுங்கள். சுரங்கத்தில் எப்போது, எங்கே நச்சு வாயு தாக்கும் என்று சொல்ல முடியாது. எனில், எப்படி முன்னெச்சரிக்கையோடு இருப்பது? அதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன்.”
மூச்சு விடக்கூட நேரமில்லாமல் தொடர்ந்தார். ‘‘நச்சு வாயுவால் ஒரு சுண்டெலி மயங்கி விழுவதற்கு 15 விநாடிகள் தேவை என்றால் மனிதனுக்கு 1 நிமிடம் ஆகும். இனி தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் இறங்கும்போது ஒரு கூண்டில் எலிகளையும் எடுத்துச் செல்லச் சொல்லுங்கள். எலிகள் மீது எப்போதும் ஒரு கண் இருக்கட்டும். எலிகள் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும்வரை தொழிலாளர்கள் நிம்மதியாகப் பணியாற்றலாம். ஒரு எலி மயங்கி விழுந்தாலும் உடனே சுதாரித்துக்கொண்டு அனைவரும் வெளியேறிவிட வேண்டும்.”
‘‘ரொம்ப நன்றி ஹால்டேன். ஆனால் ஒரு சந்தேகம். மனிதனால் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” ஹால்டேன் தன் பெரிய மீசையைத் தடவிவிட்டுக்கொண்டார். ‘‘ஒரு மனித சுண்டெலியை நான் வளர்த்து வருகிறேன். நான் எப்போது அழைத்தாலும் அது சமர்த்தாக வரும். என்ன சொன்னாலும் தட்டாமல் செய்யும். அறிவியலுக்காக எதை வேண்டுமானாலும் அது தாங்கிக்கொள்ளும். மனிதர்களுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருக்கும். அந்தச் சுண்டெலிதான் எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறது!”
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT