Published : 26 Feb 2020 09:09 AM
Last Updated : 26 Feb 2020 09:09 AM
மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் நம்மைப் போல் தண்ணீர் அருந்துகின்றனவா, டிங்கு?
- சா. எழில் யாழினி, புனித இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை.
கடல்வாழ் உயிரினங்கள் நிலத்தில் வாழும் விலங்குகளைப் போல் தண்ணீர் அருந்துவதில்லை. அவற்றின் மீது நேரடியாகச் சூரியக் கதிர்கள் விழுவதில்லை. அதனால் உடலில் நீரிழப்பு ஏற்படுவதில்லை. சாப்பிடும் உணவிலிருந்தே தங்களுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பெற்றுக் கொள்கின்றன கடல்வாழ் உயிரினங்கள், எழில் யாழினி.
மனிதர்களுக்குத் தீமை செய்யும் கொசுக்கள் ஏன் இந்தப் பூமியில் இருக்கின்றன, டிங்கு?
- ஆர். வர்ஷிகா, 7-ம் வகுப்பு, செண்பகம் மெட்ரிக். பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.
இந்த அற்புதமான பூமி மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. பூமியில் இயற்கையாக உருவான லட்சக்கணக்கான உயிரினங்களில் மனித இனமும் ஒன்று. மனிதர்களுக்கு நன்மை செய்யும் உயிரினங்கள் மட்டுமே சிறந்தது, அவை மட்டுமே பூமியில் வாழ வேண்டும் என்று நினைப்பது தவறு. கொசுக்களின் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவுவது உண்மைதான்.
அதே நேரம் கொசுக்களின் பெருக்கத்துக்கு மனிதர்கள் செய்யும் மாசும் காரணம் அல்லவா! நம் நோக்கில் இருந்து பார்த்தால் கொசு தீங்கானது. தாவரங்களின் நோக்கில் இருந்து பார்த்தால் அது தாவரச் சாற்றை உறிஞ்சும்போது மகரந்தச் சேர்க்கைக்கு வழிவகுக்கிறது. பறவைகள், சிறு விலங்குகள் நோக்கில் இருந்து பார்த்தால் அது சிறந்த உணவு. கொசுவுக்கும் பூமியில் வாழ எல்லா உயிரினங்களையும் போல் உரிமை இருக்கிறதுதானே, வர்ஷிகா?
கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்காதே என்கிறார் அம்மா. ஏன், டிங்கு?
- து. நாகராஜ், 4-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
அம்மா சொல்வது சரிதான். கரும்பு காரத்தன்மையுள்ள (alkaline) பொருள். இதில் அதிக அளவில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. கரும்பைச் சாப்பிடும்போது கால்சியம் சத்து நம் வாயில் உள்ள உமிழ்நீருடன் வேதிவினை புரிகிறது.
அப்போது தாகம் எடுப்பது போல் தோன்றும். உடனே பலரும் தண்ணீரைக் குடித்துவிடுவார்கள். அப்படிக் குடிக்கும்போது வாயில் வெப்பம் உயர்கிறது. எரிச்சல், கொப்புளம் போன்றவை தோன்றுகின்றன. அதனால்தான் கரும்பைச் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது என்கிறார்கள். குறைந்தது 15 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடித்தால், எந்தப் பிரச்சினையும் ஏற்படாது, நாகராஜ்.
மீனவர்கள் எல்லை தாண்டி கடலில் மீன் பிடித்தால் கைது செய்கிறார்கள். எப்படி அந்த எல்லையைக் கணக்கிடுகிறார்கள், டிங்கு?
- ர. பரணிதா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி.
1982-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கடல் சட்டம் வரையறுக்கப்பட்டது. ஒரு நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட கடற்பரப்பு (Territorial Waters) என்பது கடல் அடித்தள மட்டத்திலிருந்து 22.2 கி.மீ.வரை உள்ள கடல் பரப்பு. இதைத் தாண்டும்போது பிரச்சினை வருகிறது. அடுத்த நாட்டின் கடல் ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததால் கைது செய்கிறது அந்த நாடு. இதே 22.2 கி.மீ. தூரம் வான் பகுதிக்கும் பொருந்தும், பரணிதா.
பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பது ஏன், டிங்கு?
- பிரியா, 11-ம் வகுப்பு, டி.வி.டி. மேல்நிலைப் பள்ளி, கோட்டார், நாகர்கோவில்.
சூரியனும் நிலாவும் பூமியை ஈர்க்கின்றன. பூமியும் நிலாவை ஈர்க்கிறது. பவுர்ணமி, அமாவாசை நாட்களில் நிலா பூமிக்கு அருகே வரும்போது இந்த ஈர்ப்பு விசை அதிகமாகிறது. இதனால் கடலில் உள்ள நீர் அளவுக்கு அதிகமாக உயர்கிறது. நிலத்துக்குள் பாய்கிறது. பேரிரைச்சலும் ஏற்படுகிறது. வான் பொருட்களின் ஈர்ப்பினால் பூமியில் ஏற்படும் இந்த நிகழ்வை ‘ஓதம்’ என்று அழைக்கிறார்கள், பிரியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT