Published : 19 Feb 2020 03:45 PM
Last Updated : 19 Feb 2020 03:45 PM

ரப்பர் பந்தான முட்டை!

மிது கார்த்தி

ஒரு முட்டையை ரப்பர் பந்தாக மாற்றுவோமா?

என்னென்ன தேவை?

கண்ணாடி டம்ளர்

முட்டை

சமையலுக்குப் பயன்படும் வினிகர்

எப்படிச் செய்வது?

# கண்ணாடி டம்ளரில் முட்டையை எடுத்து மெதுவாக வையுங்கள்.

# முட்டை மூழ்கும் அளவுக்கு வினிகரை ஊற்றுங்கள்.

# முட்டையைச் சுற்றிச் சிறுசிறு குமிழ்கள் தோன்றியிருக்கும். அந்தக் கண்ணாடி டம்ளரை நான்கு நாட்களுக்குத் தனியாக வைத்துவிடுங்கள்.

# நான்கு நாட்கள் கழித்து கண்ணாடி டம்ளரிலிருந்து முட்டையை எடுத்து வெளியே வையுங்கள்.

# அந்த முட்டை இப்போது ரப்பர் பந்தைப் போல மாறியிருக்கும். அதை லேசாக அழுத்திப் பார்த்தால் அமுங்கும்.

# முட்டை, ரப்பர் பந்தாக மாறியது எப்படி?

காரணம்

முட்டையில் வினிகரை ஊற்றியவுடனேயே முட்டை ஓட்டிலிருந்து சிறுசிறு குமிழ்கள் வருகின்றன. அவை கார்பன் டை ஆக்சைடு குமிழ்கள். முட்டை ஓடானது கால்சியம் கார்பனேட்டால் ஆனது. அது வினிகரில் உள்ள அசிடிக் அமிலத்துடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு வாயுவை உருவாக்குகிறது.

நான்கு நாட்கள் முட்டையை வினிகரில் மூழ்க வைக்கும்போது முட்டையின் ஓடு வினிகருடன் வேதிவினை புரிந்து முழுவதுமாகக் கரைந்துப் போய்விட்டது. ஓடு கரைந்து முட்டையைச் சுற்றி ஒரு சவ்வு போன்ற படலம் உருவாகிவிடுகிறது. அதனால்தான் முட்டையானது, ரப்பர் பந்தைப்போல காட்சி அளிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x