Published : 19 Feb 2020 08:22 AM
Last Updated : 19 Feb 2020 08:22 AM
கு. அசோகன்
அழகிய சிங்கம் புணரி கிராமத்தின் எல்லையில் அடர்ந்த காடு இருந்தது.
அங்கே பல்வேறு விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்துவந்தன. பெரிய குகை ஒன்றில் சிங்கராஜா தன் குடும்பத்துடன் வசித்துவந்தது.
குகைக்கு அருகே இருந்த பெரிய மரத்தில் கழுகு ஒன்று, இளைப்பாறுவதற்காக அமர்ந்தது. சுற்றும் முற்றும் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக்கொண்டிருந்தது.
அப்போது சிங்கராஜாவின் கம்பீரமான கர்ஜனை கேட்டது. குரல் வந்த திசையைப் பார்த்தது கழுகு. குகையில் இருந்து சிங்கராஜா கம்பீரமாக வெளியே வந்தது. மீண்டும் ஒரு முறை கர்ஜித்தது. அருகில் மேய்ந்துகொண்டிருந்த மான்களும் முயல்களும் வேகமாக ஓடி மறைந்தன.
கழுகுக்கு இந்தக் காட்சி கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது. “சிங்கராஜா நலமா?” என்று கேட்டது.
சிங்கராஜா சுற்றும் முற்றும் பார்த்தது. ஒரு சிட்டுக்குருவிகூட அருகில் இல்லை. அழைத்தது யார் என்று யோசித்தது.
“கீழே மட்டும் பார்க்காதீங்க, கொஞ்சம் நிமிர்ந்தும் பாருங்க” என்றது கழுகு.
சிங்கராஜா சட்டென்று நிமிர்ந்தது. “ஓ... நீதானா? எதற்காக என்னை அழைத்தாய்? ராஜா என்ற மரியாதை கொஞ்சமாவது உனக்கு இருக்கிறதா?”
“கோபப்படாதீங்க சிங்கராஜா. இன்று முதல் நாம் இருவரும் நண்பர்கள். நீங்களும் என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் நம் இருவருக்குமே நல்லது. நான் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய ஆர்வமாக இருக்கிறேன்” என்றது கழுகு.
“கழுகே, நீயோ வானத்தில் வாழ்பவன். நானோ நிலத்தில் உலா வருபவன். உன்னால் எந்த விதத்தில் எனக்கு உதவி செய்ய முடியும்?” என்று கேட்டது சிங்கராஜா.
“வேட்டையாடிய விலங்கை சிங்கராணி கஷ்டப்பட்டு உங்களுக்காகவும் குட்டிகளுக்காகவும் இழுத்து வருவதைப் பார்த்திருக்கிறேன். அந்த இரையை என்னுடைய நீண்ட உறுதியான கால்களால் தூக்கி வந்து உங்கள் குகை வாசலிலேயே போட்டு விடுகிறேன்.”
“இதைச் செய்வதால் உனக்கென்ன பயன்?”
“நீங்கள் வேட்டையாடும் விலங்கின் இறைச்சியை நானும் சிறிதளவு சாப்பிட்டுக்கொள்வேன். அவ்வளவுதான்” என்றது கழுகு.
சிங்கராஜா யோசித்தது. ராணியும் வேட்டையாடிவிட்டு, மிகுந்த களைப்போடு இரையை இழுத்து வரும்போது பாவமாகத்தான் இருக்கிறது. இப்படி ஒரு நண்பன் இருப்பது நமக்கு நல்லது என்று நினைத்தது.
“சரி, இன்று முதல் நாம் இருவரும் நண்பர்கள்” என்றது சிங்கராஜா.
“நன்றி சிங்கராஜா. சில நேரம் ராணியால் வேட்டையாட முடியாவிட்டால், உங்களுக்காக நானே இரையைத் தேடி எடுத்துட்டு வந்து, உங்கள் குகையின் வாசலில் போட்டு விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பறந்தது கழுகு.
மறுநாள் முதல் சிங்கராணி வேட்டையாடி சாப்பிட்டுவிட்டு, மீதம் இருந்த இறைச்சியை எடுத்துக்கொண்டு வந்து குகை வாசலில் போட ஆரம்பித்தது கழுகு. சிங்கராஜாவும் கழுகும் விரைவிலேயே நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.
ஒரு நாள் சிங்கராணி நோய்வாய்ப்பட்டது. வேட்டைக்குச் செல்லவில்லை. அப்போதும் கழுகு இரையை எடுத்துக்கொண்டு வந்து குகை வாசலில் போட்டது. தினமும் உழைக்காமலே உணவு குகைக்கு வருவதைக் கண்டு மகிழ்ந்தது சிங்கராஜா.
“ராணி, இனிமேல் நீ வேட்டைக்குச் செல்ல வேண்டாம். நமக்கான உணவைக் கழுகு கொண்டுவந்துவிடும்” என்று சொல்லிவிட்டது சிங்கராஜா.
நாட்கள் சென்றன. கழுகுக்குச் சந்தேகம் வந்தது.
“சிங்கராஜா, ராணிக்கு இன்னும் குணமாகவில்லையா?”
“அதை ஏன் கேட்கிறே? உடல் நலமாக இருந்தால், உன்னிடம் வாங்கிச் சாப்பிடுவோமா?” என்றது சிங்கராஜா.
கழுகும் அதை உண்மை என்று நம்பி, இரையைக் கொண்டுவந்து கொடுத்தது. மறுநாள் சிங்கராஜா, சிங்கராணி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டது கழுகு. தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை அறிந்து கோபமடைந்தது.
சிங்கராஜா தன் குடும்பத்துடன் கழுகு கொண்டுவரும் இரைக்காக ஆவலுடன் காத்திருந்தது. வெகு நேரமாகியும் உணவு வரவில்லை. குட்டிகள் பசியில் ரகளை செய்தன.
“கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இன்னும் சற்று நேரத்தில் நமக்கான இரையைக் கழுகு கொண்டுவந்து கொடுத்துவிடும்” என்று அமைதிப்படுத்தியது சிங்கம்.
நேரம் கடந்தது. மதியம் வந்தது. மாலை வந்தது. பசியில் குட்டிகள் சோர்ந்து, தூங்க ஆரம்பித்துவிட்டன. கழுகு வரவேயில்லை.
“இந்தக் கழுகுக்கு என்ன ஆனது? ஏன் வரவில்லை?”
“ஒருவேளை, நாம் ஏமாற்றுகிறோம் என்பதை அறிந்திருக்குமோ? மனிதர்கள்தான் பிறரின் உழைப்பைச் சுரண்டி பிழைப்பார்கள். நாம் அவர்களைப்போல் நடந்துகொண்டது மிகப் பெரிய தவறு. நான் அதிகாலை வேட்டைக்குச் சென்றுவிடுகிறேன். குழந்தைகள் விழிப்பதற்குள் உணவுடன் வருகிறேன்” என்றது சிங்கராணி.
“நீ சொல்வது சரிதான். இப்போதே இரை தேடி வேட்டைக்குச் செல்கிறேன். கழுகைப் பார்த்தால் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு, வேகமாக வேட்டையாடக் கிளம்பியது சிங்கராஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT