Published : 19 Feb 2020 08:13 AM
Last Updated : 19 Feb 2020 08:13 AM
ஜோதி ரவிசுகுமார்
கவனம் சிதறாமல் இலக்கு நோக்கி, துல்லியமாக வாள் வீசும் பிரித்திவர்ஷினி, புவனேஸ்வரி, மோனிகா மூவரையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்! இவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகளில் பதக்கங்களை வாங்காமல் திரும்பியதில்லை.
ஓசூர் புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார்கள் பிரித்திவர்ஷ்னியும் புவனேஸ்வரியும். 6-ம் வகுப்பு படிக்கிறார் மோனிகா.
”என் அம்மா ஒரு பள்ளியில் கடைநிலை ஊழியர். அப்பா ஒப்பந்தத் தொழிலாளர். வசதி இல்லாவிட்டாலும் என்னையும் தங்கை மோனிகாவை யும் படிக்க வைக்கிறார்கள். வாள் சண்டையில் சிறந்த வீராங்கனைகளாக உருவாக ஊக்குவிக்கிறார்கள். 5-ம் வகுப்பு படிக்கும்போதுதான் வாள் சண்டையில் ஆர்வம் வந்து, பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன்.
அடுத்த ஆண்டே ஆந்திராவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான தேசிய வாள் சண்டை போட்டியில் தங்கம் வென்றேன். இந்தப் பதக்கத்தை வென்றதன் மூலமாக மத்திய அரசின் கேல் இந்தியா விளையாட்டு ஊக்கத்தொகை பெற்று வருகிறேன். சென்ற ஆண்டு தமிழக முதல்வரிடம் 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை பெற்றேன்” என்கிறார் பிரித்திவர்ஷினி.
சென்ற ஆண்டு மணிப்பூர் தேசிய வாள் சண்டைப் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள், ஒடிசா தேசிய வாள் சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம், மகாராஷ்டிரா தேசிய வாள் சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் என ஒரே ஆண்டில் 4 பதக்கங்களை வென்றுள்ளார் பிரித்திவர்ஷினி. இந்த ஆண்டு 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று, மொத்தம் 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். மோனிகா மாநில அளவில் நடைபெற்ற வாள் சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
புவனேஸ்வரி, “நானும் 5-வது படிக்கும்போதுதான் வாள் சண்டை பயிற்சியை எடுக்க ஆரம்பித்தேன். அடுத்த ஆண்டே தேசியப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றேன். இதுவரை மாநில அளவில் 6 பதக்கங்களை வாங்கியிருக்கிறேன். நானும் பிரித்திவர்ஷினியும் குஜராத்தில் நடைபெற உள்ள தேசிய வாள் சண்டை போட்டிக்குத் தேர்வாகி இருக்கிறோம்.
தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஒலிம்பிக் பதக்கம் வென்று, நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதே எங்கள் மூவரின் லட்சியமாக இருக்கிறது. எங்களுடைய முன்னேற்றத்துக்குச் சிறந்த ஒத்துழைப்பை கொடுத்து வரும் பள்ளிக்கு நன்றி” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT