Published : 12 Feb 2020 12:48 PM
Last Updated : 12 Feb 2020 12:48 PM
விழுந்த பல்லை எடுத்து, தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்கினால், ‘பல் தேவதை' வந்து பரிசு கொடுக்கும் என்பது உண்மையா, டிங்கு?
- மு. பவித்ரா, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.
மேற்குலக நாடுகளில் பால் பற்கள் விழும் குழந்தைகளிடம் இந்தப் ‘பல் தேவதை’ கதையைச் சொல்வார்கள். பல் விழுந்தால் குழந்தை பயந்துவிடும், வலியில் அழவும் செய்யலாம். அதனால் விழுந்த பல்லை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டுத் தூங்கினால், பல் தேவதை வந்து பல்லை எடுத்துக்கொண்டு பணமோ பரிசோ கொடுக்கும் என்று சொல்வார்கள். பயத்தையும் வலியையும் மறந்து குழந்தை நம்பிக்கையுடன் தூங்கும்.
‘பெற்றோர்’ என்ற தேவதைகள்தான் பல்லை எடுத்துவிட்டு, பணத்தை வைப்பார்கள். காலையில் எழுந்து பார்க்கும் குழந்தை, தேவதைதான் பரிசு கொடுத்ததாக நம்பிவிடும். இந்தப் பல் தேவதையை ‘கதை’ என்று சற்று வளர்ந்த பிறகு குழந்தைகள் புரிந்துகொள்வார்கள், பவித்ரா!
என் பாடப் புத்தகத்தில் ‘80 gsm தாளில் அச்சிடப்பட்டிருக்கிறது’ என்று இருக்கிறது. ஜிஎஸ்எம் என்றால் என்ன, டிங்கு?
- பி. ஷாலினி, 7-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, அசோகபுரம், கோவை.
GSM என்பது Grams per Square Meter என்பதன் சுருக்கம். காகிதத்தின் அடர்த்தியை இது குறிக்கிறது. 35–55 ஜிஎஸ்எம் காகிதங்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும்.
செய்தித்தாள்கள் பெரும்பாலும் இவற்றில்தான் அச்சடிக்கப்படுகின்றன. 120-140 ஜிஎஸ்எம் காகிதங்களில் போஸ்டர்கள் அச்சடிக்கப்படுகின்றன. 210–300 ஜிஎஸ்எம் காகிதங்களில் பத்திரிகைகளின் அட்டைகள் அச்சடிக்கப்படுகின்றன. இப்படி ஜிஎஸ்எம் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, காகிதத்தின் அடர்த்தியும் அதிகரிக்கும், ஷாலினி.
‘இதயம் நினைத்துக்கொண்டிருக்கிறது’ என்று சொல்கிறார்களே, நினைவுகள் இதயத்தில் இருக்கின்றனவா, மூளையில் இருக்கின்றனவா, டிங்கு?
- கிருபா ஆனந்தி, 10-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை.
மூளையைப் பற்றி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. இதுவரை அறிந்ததில் பெரும்பாலான நினைவுகள் பெருமூளையில்தான் பதிவாகின்றன என்பது தெரியவந்திருக்கிறது. ’குறுகிய நினைவாற்றல்’, ’நீண்ட கால நினைவாற்றல்’, ‘திறமை சார்ந்த நினைவாற்றல்’ என்று மூன்று வகை நினைவாற்றல்கள் இருக்கின்றன.
நம்முடைய புலன்களிலிருந்து வரும் செய்திகளை லிம்பிக் சிஸ்டம் பெருமூளையின் முன் பகுதிக்கு அனுப்பி வைக்கிறது. ஒலியாகவோ காட்சியாகவோ உணர்வாகவோ பெருமூளை இவற்றைச் சேமித்துக்கொள்கிறது. அன்றாடம் ஏராளமான செய்திகளை மூளை சேமித்து வைக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை புதிய செய்திகள் வரும்போது அழிந்துவிடுகின்றன.
மறக்கக் கூடாது என்று திரும்பத் திரும்ப நினைவில் வைக்கப்படும் செய்திகள் ’நீண்ட கால’ நினைவாற்றலாக நின்றுவிடுகின்றன. வாகனங்களை ஓட்டுவது, இசைக் கருவிகளை வாசிப்பது போன்றவை திறமை சார்ந்த நினைவாற்றலாக இருக்கின்றன. எனவே நினைவாற்றலுக்குக் காரணம், மூளைதான் கிருபா ஆனந்தி.
பிறகு எப்படி இதயம் அந்த இடத்துக்கு வந்தது என்றால், ஆரம்பக் காலத்தில் எகிப்தியர்களும் கிரேக்கர்களும் சிந்தனையையும் உணர்ச்சியையும் இதயம் கட்டுப்படுத்துவதாகக் கருதினர். அது அப்படியே பரவிவிட்டது. இன்று அறிவியல் எவ்வளவோ வளர்ந்து, மூளைதான் மனித உடலின் அனைத்து இயக்கத்துக்கும் காரணம் என்று தெரிந்துவிட்டாலும் இதயத்தை மனிதர்கள் விட்டுவிடுவதாக இல்லை. மூளையைவிட இதயத்தின் அமைப்பு கவரக்கூடியதாக இருப்பதும் ஒரு காரணம்.
நம் தேசத் தந்தை காந்தியை ஏன் சுட்டுக் கொன்றார்கள், டிங்கு?
- த. பாண்டீஸ்வரி, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
இந்தியாவில் பல மதங்களைச் சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். அனைத்து மதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதுதான் நியாயமானது. காந்தி இந்து மத நம்பிக்கையுடையவராக இருந்தாலும் பிற மதங்களையும் மதித்தார். மத நல்லிணக்கத்தில் மிகுந்த நம்பிக்கைகொண்டிருந்தார்.
இது இந்து மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றக்கூடியதாகச் சொல்லிக்கொண்ட சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்களில் நாதுராம் கோட்ஸேவும் ஒருவர். அவரது கோபம் காந்தியைச் சுட்டுக் கொன்றுவிட்டது. தன் வாழ்நாள் முழுவதும் அகிம்சையை விரும்பிய, அகிம்சையைப் பரப்பிய, இன்று வரை அகிம்சையின் அடையாளமாக இருக்கும் ஓர் அற்புதமான மனிதரை மதத் தீவிரவாதம் பலி வாங்கிவிட்டது, பாண்டீஸ்வரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT