Published : 12 Feb 2020 12:25 PM
Last Updated : 12 Feb 2020 12:25 PM

புதியதோர் உலகம் 02: இந்தியா என்றோர் அற்புதம்!

ஆதி

போன வாரம் நான் சொல்லியிருந்த இரண்டு புத்தகங்களைப் பத்தி படிச்சிருப்பீங்க. யாராவது அந்தப் புத்தகங்களைத் தேடினீங்களா, வாங்கிப் படிச்சீங்களா?

படிப்புதான் எந்தவொரு மனிதரையும் பெரிய ஆளாக்கும்னு நான் படிச்ச பல புத்தகங்கள் உணர்த்தியிருக்கு. அதனால நல்ல புத்தகங்களைத் தேடிப் படிங்க. அதுக்கு புத்தகப் புழுவான என்னோட உதவியும் உங்களுக்குத் தொடர்ந்து கிடைச்சுக்கிட்டே இருக்கும்.

இந்தியா என்ற நாடு உலகில் ரொம்பவும் வித்தியாசமானது, தனித்தன்மை கொண்டது. உலகில் வேறு எந்த நாட்டை விடவும் உணவு, உடை, பண்பாடு போன்றவற்றில் மிகவும் நெகிழ்வானது, பன்மைத்தன்மை கொண்டது இந்தியா. இந்தியாவை இஸ்லாமிய மன்னர்கள் கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கும், கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகளுக்கும் ஆட்சி புரிஞ்சிருக்காங்க. ஆனா, இந்தியாவுல அந்த மதங்களைப் பின்பற்றுபவர்களோட எண்ணிக்கை 15 சதவீதம்தான். இணக்கமான வாழ்க்கைதான் இந்தியாவோட அடையாளம். புகழ்பெற்ற சிறார் கதைகளும் இதை வெளிப்படுத்திருக்கு.

முதலை மகரன்

ஒரு காட்டுல ஆமை, பாம்பு, ஓணான், முதலை போன்ற ஊர்வன எல்லாம் வாழ்ந்துவந்தன. முதலை மகரன்தான் காட்டுக்குத் தலைவர். மகரனுக்குத் திடீரென்று ஒரு பைத்தியக்கார யோசனை. காட்டுலேர்ந்து ஆமையெல்லாம் வெளியேறணும்னு சட்டம் போடுது. மற்ற உயிரினங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, மகரன் அவற்றையெல்லாம் அடக்கிடுது. அடுத்து பாம்புகள் காட்டுக்கு வெளியே அனுப்பப்படுகின்றன.

கடைசியா ஓணான்களும் துரத்தப்படுகின்றன. முதலைகள் மட்டுமே வாழும் காடு நாறிப்போய் சின்னாபின்னமாயிடுது. கடைசியா முதலைகள் எல்லாம் மகரனை ஒதுக்கி வெச்சுட்டு, மற்ற உயிரினங்களைத் தங்கள் காட்டுக்குத் திரும்ப அழைக்கின்றன. அப்புறம்தான் அந்தக் காடு செழிப்பா மாறுது. உயிரினங்களை வைத்துச் சொல்லப்பட்டிருந்தாலும், மனிதர்களை மையப்படுத்திய இந்தக் கதையை எழுதியவர் பிரபல ஆங்கிலச் சிறார் எழுத்தாளர் ஸாய் விட்டேகர்.

சிங்கத்துக்கு உயிர்

அபூர்வ மந்திரத் திறமையால் நான்கு பேர் சிங்கத்துக்கு உயிர் கொடுத்த கதையைப் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க. அந்த நான்கு பேர்ல ஒருத்தர் மட்டும், ‘வேண்டாம் வேண்டாம், சிங்கத்துக்கு உயிர் கொடுக்காதீங்க’ன்னு சொல்லிட்டு மரத்துல ஏறிக்குவாரு. அது மாதிரி பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, மதிக்கப்பட்ட ஒரு மரபுச் சின்னத்தை-அடையாளத்தை இன்னைக்கு வலிஞ்சு போய் இடிக்கிறது, அதன் மூலமா சமூக அமைதிய சீர்குலைக்கிறது. இதுதான் இந்தியாவுல இன்னைக்கு நடந்துக்கிட்டிருக்கு. அனைவரையும் சமமாக மதிப்பதுதான் மனிதர்களுக்கு அழகு என்று சொல்கிறது கீதா ஹரிஹரன் எழுதியுள்ள இன்னொரு கதை.

கலவரம் புரியாத சிறுவன்

1984-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது வட மாநிலங்களில் சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரம் மூண்டது. பட்டாணி விற்கும் சீக்கியச் சிறுவன் தேஜிந்தருக்கோ இது புரியவில்லை. கலவரக்காரர்களிடமிருந்து எப்படியோ தப்பித்து வீடு சென்றுவிடுகிறான். அவன் குடிசை எரிக்கப்பட்டி ருக்கிறது, அவன் அம்மா இருக்கிறாரா இல்லையா எனத் தெரியவில்லை. அப்போது தாயற்ற ஒரு சிறுமி, அவனுக்கு ஆறுதல் சொல்லித் தன் வீட்டுக்கு அழைக்கிறாள். இந்தக் கதையை எழுதியவர் சாவன் தத்தா.

சாலிம் அலி பாகிஸ்தானியரா?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்துகொண்டிருந்த காலம். இந்தியாவின் ‘பறவை மனிதர்’ சாலிம் அலி, ஒரு முறை குழந்தைகளுடன் பறவைகளை நோக்கச் சென்றிருந்தார். பைனாகுலர் எனும் இருநோக்கியைக் கொண்டு சாலிம் அலியும் குழந்தைகளும் பறவைகளை அடையாளம் கண்டுகொண்டிருந்தார்கள். அப்போது சரட்டென்று வந்து நின்றது ஒரு காவல்துறை ஜீப்.

அதிலிருந்து இறங்கிய காவல்துறை அதிகாரி, அவர்கள் இருநோக்கி வைத்திருப்பதைப் பார்த்து பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கிறீர்களா என்று கேட்கிறார். பிறகு சாலிம் அலியின் பெயரைக் கேட்டவுடன், இது ஒரு பாகிஸ்தானியப் பெயராச்சே என்கிறார். இஸ்லாமியர்கள் என்றாலே எதிரிகள் என்ற மனோபாவம் பரவலாக நிலவுவதைப் பகடியாகக் கேள்விக்கு உட்படுத்துகிறது ஷாமா பதேஅலி எழுதியுள்ள இந்தக் கதை.

இந்தக் கதைகள் உள்ளிட்ட 10 கதைகள் ‘சாரி, பெஸ்ட் ஃபிரண்ட்’ என்ற தலைப்பில் ஆங்கில நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கீதா ஹரிஹரன், ஷாமா பதேஅலி தொகுத்த இந்த நூலை சென்னையைச் சேர்ந்த தூலிகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழிலும் இந்த நூலை வாசிக்கலாம். அ. குமரேசன் மொழிபெயர்த்துள்ளார், புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு.

மனிதர்களான உங்களுக்கு ஆறாம் அறிவும் இருக்கு. புழுவான எனக்கு அதைவிட அறிவு குறைவுதான். மனிதர்கள் தங்களுடைய அறிவைப் பயன்படுத்தி சக மனிதர்களைச் சமமாக மதிப்பது முக்கியம்னு உணர்ந்தா சரி. இந்தப் புத்தகமும் அதைத்தான் சொல்லுது.

ஒரே உலகம்

தூலிகா நிறுவனம் வெளியிட்டுள்ள இன்னொரு சிறந்த ஆங்கிலச் சிறார் கதைத்தொகுப்பு ‘One World’. செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலின் உரை, கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வெள்ளையர்கள் வெளிப்படுத்திய நிறவெறி, மரங்களைக் காக்க ராஜஸ்தான் பிஷ்னோய் மக்கள் உயிர் தந்த போராட்டம், ஒரு முதல் தலைமுறை சிறுமிக்குக் கல்வி எப்படிப் புதிய வெளிச்சம் தருகிறது என உலகின் பல வண்ணங்களை எடுத்துக் கூறுகிறது இந்த நூல்.

தமிழின் சிறந்த எழுத்தாளர்களான அசோகமித்திரன், அம்பை ஆகியோர் எழுதிய இளையோருக்கான இரண்டு கதைகளும் இந்த நூலில் உள்ளன.

இந்த நூலைத் தொகுத்தவர்கள் ராதிகா மேனன், சந்தியா ராவ். இந்த நூலையும் அ. குமரேசன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

சாரி, பெஸ்ட் ஃபிரெண்ட் / ஒரே உலகம்,
புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு,
தொடர்புக்கு: 044 - 24332924

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x