Published : 05 Feb 2020 11:30 AM
Last Updated : 05 Feb 2020 11:30 AM
கீர்த்தி
செண்பகக் காட்டில் கடந்த ஒரு வாரமாக விலங்குகள் அனைத்தும் கவலையோடு இருந்தன. காரணம், சிங்கராஜா குகையை விட்டு வெளியே வரவே இல்லை.
மலைப் பகுதியைச் சுற்றிப் பார்க்கச் சென்ற சிங்கம், கூழாங்கல் மீது கால் வைத்தபோது சுளுக்கிக்கொண்டது..
சிங்கத்தால் காலை ஊன்றக்கூட முடியவில்லை. வலியால் துடித்தது. தத்தித் தத்தி குகைக்குள் வந்து படுத்துக்கொண்டது.
தங்கள் ராஜா இப்படிப் படுத்தே கிடப்பது மற்ற விலங்குகளுக்குத் வருத்தமாக இருந்தது. காட்டு மருத்துவர் கரடி பச்சிலைச் சாற்றைச் சுளுக்கின் மீது தடவியது. வலி பொறுக்க முடியாத சிங்கம் கோபத்தில் கரடியை விரட்டியது.
அடுத்து புலி தனக்குத் தெரிந்த மருந்தை எடுத்துக்கொண்டு வந்தது. சிங்கத்தால் வலியைத் தாங்க முடியவில்லை. புலியை ஓங்கி உதைவிட்டது. தப்பித்தால் போதுமென்று ஓடிவிட்டது புலி.
“கால் சுளுக்கைக் குணமாக்க வேண்டும் என்று நாம் மருத்துவம் செய்யப் போறோம். ஆனால், ராஜா இப்படி நம்மை அடித்து விரட்டுகிறாரே” என்று கரடியும் புலியும் பேசிக்கொண்டன.
“ராஜா இப்படி மருத்துவம் செய்ய மறுத்தால், எப்படிச் சுளுக்கு நீங்கும்?” என்று விலங்குகள் பேசிக்கொண்டன. இனி எழுந்து நடப்பது கடினம்தான் என்ற முடிவுக்கு வந்தன.
காட்டில் இருந்த புத்திசாலியான குரங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தது. இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாகச் சிங்கத்தின் குகை வாயிலுக்குச் சென்றது.
“ராஜா, உங்களால் எழுந்து நடக்க முடியவில்லையாமே? உங்களைக் கண்டதும் வணக்கம் சொல்லவில்லை என்றால் என் மீது எப்படிக் கோபப்படுவீர்கள்? இன்று நான் உங்களுக்கு வணக்கம் சொல்லவில்லை பார்த்தீர்களா?” என்று கேட்டது குரங்கு.
குரங்கு சொன்னதைக் கேட்டு சிங்கத்துக்குக் கோபம் வந்தது. அது படுத்தபடியே, “என்ன குரங்கே, வாய் ரொம்பவும் நீள்கிறது? உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று கர்ஜித்தது.
அதைக் கேட்டு குரங்கு சிரித்தது.
“ராஜா, அந்தக் காலம் எல்லாம் போய்விட்டது. இப்போது என் வாய் மட்டுமல்ல, கைகூட நீளும். பார்க்கிறீங்களா? முன்பு நான் செய்த சிறு தவறுக்கும் எனக்குத் தண்டனை கொடுத்தீங்க. அதற்குப் பழிவாங்க இப்போதுதான் நல்ல நேரம்” என்ற குரங்கு, சிங்கத்தின் முன்னங்காலில் ஓர் அடி கொடுத்தது.
கோபம் அடைந்த சிங்கம், குரங்கை உதைப்பதற்காகக் காலை நீட்டியது. ஆனால், முழுவதுமாக நீட்ட முடியவில்லை.
“குரங்கே, என்னிடமே உன் வேலையைக் காட்டுகிறாயா? நான் எழுந்தேன் என்றால் உன்னை என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. இங்கிருந்து ஓடிப் போய்விடு” என்று கர்ஜித்தது சிங்கம்.
“என்ன சொன்னீங்க? எழுந்து வந்து என்னை அடிக்கப் போறீங்களா? முதலில் எழுந்து நிற்க முடியுமானு பாருங்க” என்று கேலியாகச் சொன்ன குரங்கு, மீண்டும் சிங்கத்தின் காலில் ஓர் அடி கொடுத்தது.
இனிமேல் பொறுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த சிங்கம், சிரமப்பட்டு எழுந்து நின்றது. குரங்கை நோக்கிக் காலை உதைத்தது. சுதாரித்துக்கொண்ட குரங்கு, சட்டென்று அங்கிருந்து ஓடிவிட்டது.
சிங்கம் எழுந்து நின்றபடியே இருந்தது. குரங்கு திரும்பி வந்தது.
“ராஜா, இனி உங்களால் என்னை ஒண்ணும் செய்ய முடியாது. இனி நான்தான் இந்தக் காட்டுக்கு ராஜா” என்று சிரித்துக்கொண்டே சொன்னது குரங்கு.
“இனி உன்னை விடமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே குரங்கை நோக்கிப் பாய்ந்தது சிங்கம்.
குரங்குச் சட்டென்று விலகி ஓடியது. கடுங்கோபத்திலிருந்த சிங்கம், குரங்கைத் துரத்தியது. குரங்கும் சிங்கத்தின் பிடியில் அகப்படாமல் ஓடியது. குரங்கைத் துரத்திய சிங்கமும் விடாமல் ஓடிக்கொண்டே சென்றது.
சற்றுத் தூரம் ஓடிய குரங்கு உயர்ந்த மரத்தின் மீது ஏறி, உச்சிக் கிளையில் அமர்ந்து கீழே பார்த்தது. சிங்கம் மரத்தடியில் நின்றபடியே, “குரங்கே, எப்படியும் கீழே இறங்கி வரத்தானே செய்வாய். அப்போது உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று கர்ஜித்தது.
“என்னை மன்னிக்க வேண்டும் ராஜா. உங்கள் காலில் சுளுக்கு ஏற்பட்டு ஒரு வாரமாகக் குகைக்குள்ளேயே படுத்துக் கிடந்தீங்க. இப்ப என்னைத் துரத்தியபடியே எவ்வளவு தூரம் ஓடி வந்திருக்கிறீங்க! உங்கள் காலிலுள்ள சுளுக்குக் குணமாகிவிட்டது என்று நினைக்கிறேன். அதுக்காகத்தான் உங்களை இப்படி வம்பிழுத்தேன்” என்று பணிவாகச் சொன்னது குரங்கு.
குரங்கு சொன்னதில் சிங்கத்துக்கு நம்பிக்கை இல்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு தன் காலை உதறிப் பார்த்தது. சுளுக்கு நீங்கியிருந்தது. வலி இல்லை.
‘ஆமாம்! சுளுக்கு நீங்கிவிட்டதே’ என்று நினைத்த சிங்கம் குரங்கை அண்ணாந்து பார்த்தது.
“உங்களை மதிக்காமல் பேசியதற்காக என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் எழுந்து நடமாட முடியாமல் படுத்துக் கிடந்தது வருத்தமாக இருந்தது. உங்களை நடக்க வைக்கவே இப்படி ஒரு திட்டம் போட்டேன். அது நன்றாக வேலை செய்துவிட்டது. இனி நீங்கள் முன்பு போல் கம்பீரமாக நடந்து செல்லலாம்” என்றது குரங்கு.
குரங்கின் நல்ல மனதைப் புரிந்துகொண்ட சிங்கம், “நீ எந்தத் தவறும் செய்யவில்லை. உண்மையைப் புரிந்துகொண்டேன். உன் மீது கோபம் இல்லை. உனக்கு நன்றிதான் சொல்லணும். ஒரு கூடை கொய்யாப்பழங்களை அனுப்பி வைக்கிறேன். என் அன்பை ஏற்றுக்கொள்” என்று கூறிவிட்டுச் சென்றது.
குரங்குக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT