Published : 22 Jan 2020 12:23 PM
Last Updated : 22 Jan 2020 12:23 PM

டிங்குவிடம் கேளுங்கள்: ஒட்டகத்தின் பால் தயிராகுமா?

மாட்டின் பால் தயிராக மாறுவது போல் ஒட்டகத்தின் பாலும் தயிராகுமா, டிங்கு?

- ஆ. நிவாஷ், 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

ஒட்டகத்தின் பாலும் தயிராக மாறும் நிவாஷ். பாலைவனப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒட்டகத்தின் பாலைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒட்டகப் பாலில் இருந்து தயிர் (யோகர்ட்), பாலாடைக் கட்டி போன்றவற்றையும் உருவாக்குகிறார்கள். மாட்டின் பாலைப் போல் ஒட்டகத்தின் பாலும் சத்துகள் நிறைந்தது. மாட்டின் பாலைவிட ஒட்டகத்தின் பாலில் கொழுப்புச் சத்து குறைவு.

கிறிஸ்துவுக்கு முன்னால் உள்ள ஆண்டுகளைப் பின்னோக்கியும் கிறிஸ்துவுக்குப் பின்னால் உள்ள ஆண்டுகளை முன்னோக்கியும் குறிப்பிடுவது ஏன், டிங்கு?

- ந. சீனு, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.

ஆண்டுகளை எளிதாகக் கணக்கிடும் வசதிக்காகவே கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறை கி.பி. 6-ம் நூற்றாண்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை போப் அங்கீகரித்ததால் மெதுவாக உலக நாடுகளுக்கும் பரவியது. கிறிஸ்துவுக்கு முன் உள்ள ஆண்டுகளை நம்மால் இவ்வளவுதான் என்று கணக்கிட இயலாது. 1 என்று வைத்துக்கொண்டு முடிவில்லாமல் போகுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவுக்கு முன்பு என்று சொல்லப்படும் ஓர் ஆண்டு 1 என்ற முடிவை நோக்கி வரும் விதத்தில் எதிர்க்காலவரிசைப்படி கணக்கிடப்படுகிறது. உதாரணமாகச் சீனப் பெருஞ்சுவர் கி.மு. 220 – 200 காலகட்டத்தில் கட்டப்பட்டதாகச் சொல்கிறோம். 200-220 என்றால் அது கி.பி. ஆண்டாக மாறிவிடும், சீனு.

தொடர்ச்சியாக சுடோகு விளையாடினால் மூளையின் திறன் அதிகரிக்கும் என்கிறார்களே உண்மையா, டிங்கு?

- அ. பிரியதர்சினி, 8-ம் வகுப்பு, சேதுலெட்குமிபாய் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி, ராசாக்கமங்கலம், குமரி.

சுடோகு போன்று மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளால், மூளையின் திறன் அதிகரிக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், சமீப ஆய்வுகளின்படி சுடோகு போன்ற விளையாட்டுகளால் மூளையின் திறன் அதிகரிப்பதில்லை என்கிறார்கள் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம், நடைப் பயிற்சி, மூளைக்கு வேலை என்று இருந்தால் மூளையின் திறன் அதிகரிக்கும் என்கிறார்கள், பிரியதர்ஷினி.

என்னுடன் படிப்பவர்களும் எங்கள் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களும் வசதியானவர்கள். அவர்களைப் பார்க்கும்போது நாமும் வசதியாக இல்லையே என்ற ஏக்கம் வருகிறது. சில நேரம் கோபமாக வெளிப்படுகிறது. சக்திக்கு மீறிப் படிக்க வைப்பதாக அம்மாவும் அப்பாவும் சொல்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று அடிக்கடித் தோன்றுகிறது. என்ன செய்வது, டிங்கு?

- ஆர். நிர்மலா ராணி, நாமக்கல்.

உங்களைப் போல் வசதி இல்லாதவர்கள்தான் இந்த நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். நீங்கள் மட்டும் வசதி இல்லாதவர் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தாங்கள் கஷ்டப்பட்டாலும் தங்கள் மகள் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே பணம் செலவு செய்து பெற்றோர் படிக்க வைக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாமும் வசதியாக வாழ வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அதை உங்கள் பெற்றோர்தான் செய்ய வேண்டும் என்று நினைப்பதுதான் தவறு. நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் சென்று, உங்கள் வசதியைப் பெருக்கிக்கொள்ளுங்கள். உங்கள் பெற்றோரையும் நல்ல நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் ஆரோக்கியமான, நேர்மறையான எண்ணம்.

மற்றவர்களைப் பார்த்து நாமும் இப்படி இல்லையே என்ற நினைப்பை வளர்த்துக்கொண்டால், அதற்கு ஓர் எல்லையே கிடையாது. அது வசதி கிடைத்த பிறகும் நம்மைவிட வசதியானவர்களை நினைத்து ஏங்க வைக்கும். மனம் அமைதி அடையாது. எவ்வளவு குழந்தைகளுக்கு உங்களைப்போல் நல்ல பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை யோசித்தால், நீங்கள் எவ்வளவு நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்பதை உணர்வீர்கள். அவரவர் வாழ்க்கையை அவரவர்தான் வாழ முடியும். நமக்கு இருக்கும் படிப்பு, வாய்ப்பை வைத்து, நாம் எவ்வாறு நம் வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக்கொள்கிறோம் என்பதில்தானே நமது திறமை இருக்கிறது, நிர்மலா ராணி?

கம்பளிப்பூச்சி நம் மீது பட்டவுடன் அரிப்பது ஏன், டிங்கு?

- கோபிகா, 9-ம் வகுப்பு, அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தக்கலை, குமரி.

கம்பளிப்பூச்சியின் உடல் மென்மை யானது. எளிதில் பறவைகள், விலங்குகளுக்கு இரையாகிவிடும். கம்பளிப்பூச்சியின் உடலைப் பாதுகாக்கும் விதத்தில் உடல் முழுவதும் தூவிகள் அமைந்துள்ளன. எதிரி மீது இந்தத் தூவிகள் படும்போது, அதிலிருந்து வேதிப்பொருள் வெளியேறுவதால், அரிப்பு ஏற்படுகிறது, கோபிகா. கம்பளிப்பூச்சிகளுக்கு இது இயற்கை கொடுத்த பாதுகாப்புத் தகவமைப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x