Published : 08 Jan 2020 02:15 PM
Last Updated : 08 Jan 2020 02:15 PM
கொ.மா. கோதண்டம்
மலையடிவாரத்தில் இருந்த அந்த வனத்துக்குள் ஆதிவாசிச் சிறுவன் நீலனுடன் நான்கு மாணவர்கள் நடந்து சென்றனர். தூரத்திலிருந்து வந்த விலங்குகளின் சத்தமும் பூச்சிகளின் ரீங்காரமும் கொஞ்சம் பயத்தை அளித்துக்கொண்டிருந்தன.
நீலன் கையில் ஓர் அரிவாளையும் தீப்பெட்டியையும் பாதுகாப்புக்காக வைத்திருந்தான். பாதை இல்லாத வனத்துக்குள் நடந்து செல்லும்போது பல வண்ண வண்ணத்துப்பூச்சிகள் முகத்தில் மோதின. மாணவர்களுக்குப் புது அனுபவமாக இருந்தது. மகிழ்ச்சியோடு நீலனுடன் நடந்துகொண்டிருந்தார்கள்.
“வண்ணத்துப்பூச்சிகள் வரவேற்கின்றன. சில்வண்டுகள் இசையால் நனைய வைக்கின்றன” என்று மாணவர்களில் ஒருவர் சொன்னார். “ஆமாம்ப்பா. ரொம்ப நல்லா ரசிக்கிறே! யானைகளைப் பார்க்கணும்னு சொன்னீங்களே, அதோ அந்தப் பாறைச் சரிவுக்குப் போனால் நிறைய யானைகள் இருப்பதைப் பார்க்கலாம்” என்று சிரித்தான் நீலன். “ஓ... நாங்கள் தயார். போன தடவை அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கலை, இந்தத் தடவை அந்த வாய்ப்பை விட மாட்டோம்” என்றார்கள் மாணவர்கள் நால்வரும்.
”யானை இருக்கும் சரி, புலியும் இருக்குமா?” என்று சந்தேகம் கேட்டர் ஒரு மாணவர். “யானைகள் அதிகமாக இருக்கிற இடத்தில் புலிகள் அதிகம் இருக்காது. புலிகள் அதிகம் இருந்தால் யானைகள் அதிகம் இருக்காது. புலிக்கு யானையும் யானைக்குப் புலியும் பயப்படும்” என்றான் நீலன்.
“என்னப்பா யானைகூட புலிக்குப் பயப்படுமா?”
”புலி யானையின் எதிரில் வந்தால், தும்பிக்கையால் தூக்கித் தூர வீசிடும். அதனால் புலி பயப்படும். புலி யானைக்குப் பின்னால் வந்தால் யானையால் தப்பிப்பது கடினம். அதனால் யானை பயப்படும். பொதுவா விலங்குகள் பிற விலங்குகளுக்குத் துன்பம் தராமல் விலகிப் போய்விடுவதால் வனம் நல்லா இருக்கு.”
அவர்கள் ஐந்து பேரும் ஒரு மலையைக் கடந்துகொண்டிருந்தனர். அப்போது ஏதோ சத்தம் வந்தது. நீலன் நின்று உற்றுக் கேட்டான். மாணவர்களுக்குத் திக்திக் என்றிருந்தது. நீலன் காட்டிய திசையில் எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.
ஒரு யானை பலா மரத்திலுள்ள பழத்தைத் தும்பிக்கையால் பறித்தது. சட்டென்று அந்தப் பழத்தை வீசியடித்தது. சிதறிய பழத்துண்டுகளை விழுங்கிவிட்டு நகர்ந்தது. நீலன் அங்கே சென்று, கீழே கிடந்த பலாச்சுளைகளை எடுத்து எல்லோருக்கும் கொடுத்தான். “அடடா! இப்படி ஒரு ருசியான பலாப்பழத்தை இதுவரை சாப்பிட்டதில்லை” என்றார் ஒரு மாணவர். ”தேனடையில் தொட்டுச் சாப்பிட்டால் இன்னும் ருசியா இருக்கும்” என்ற நீலன், அருகிலிருந்த ஓடைக்கு அழைத்துச் சென்றான். எல்லோரும் தாகம் தீர தண்ணீர் குடித்தனர். மீண்டும் நடக்க ஆரம்பித்தனர்.
தூரத்தில் ஒரு யானை சென்று கொண்டிருந்தது. அவர்கள் அமைதியாக நின்றனர்.“நீலா, யானை முதுகில் எப்படிப் புல் முளைத்திருக்கு!” என்று வியப்போடு கேட்டார் ஒரு மாணவர். “யானை மண்ணை வாரி முதுகில் போடும்போது கொஞ்சம் மண் அப்படியே நின்றுவிடும். மழையில் நனையும்போது அந்த மண்ணிலிருந்து புல் முளைத்துவிடும். கனத்த மழை பெய்தால் மண்ணோடு புல்லும் கீழே விழுந்துவிடும்” என்றான் நீலன். ”அங்கே பார் நீலா, அந்த யானை மீது கொடியே படந்திருக்கு” என்றார் ஒரு மாணவர்.
“யானை கிளையிலிருந்து இலைகளைப் பறிக்கும்போது இந்தக் கொடி மேலே விழுந்திருக்கும்” என்றவன் வேகமாக அந்த இடத்தை விட்டுச் சென்றான். இரு மலைகளுக்கு இடையே பச்சைப்பசேல் என்ற தாவரங்களைக் கண்டதும் எல்லோரும் அதன் அழகில் மயங்கி, சிலையாக நின்றனர்.
நீலன் நால்வரையும் ஒரு பாறையில் உட்காரச் சொன்னான். ஈச்சம்பழங்களைப் பறித்து வந்து சாப்பிடக் கொடுத்தான். அப்போது பக்கத்து மரத்திலிருந்த இரண்டு குரங்குகள் ஏதோ பழங்களைப் பறித்து, இவர்களை நோக்கி வீசின. “பயப்படாமல் சாப்பிடுங்க, ருசியா இருக்கும்” என்றான் நீலன். நால்வரும் தைரியமாகச் சாப்பிட்டனர். திடீரென்று தூரத்தில் ஏதோ பயங்கரச் சத்தம் கேட்டது. நீலன் உற்றுக் கவனித்தான்.
“உங்க நாலு பேருக்கும் மரம் ஏறத் தெரியுமா? மதம் பிடிச்ச யானை ஒண்ணு வந்துட்டு இருக்கு” என்றதும் நால்வருக்கும் பயமாகிவிட்டது. சட்டென்று ஒரு பெரிய மரத்தில் ஏறினார்கள். அப்போது மதம் பிடித்த யானை அங்கு வந்து சேர்ந்தது. மாணவர்களைக் கண்டதும் கோபத்தோடு பிளிறியது. மரத்தைப் பிடித்து உலுக்கியது. “எல்லோரும் பயப்படாமல் கிளைகளை நல்லா பிடிச்சுக்கோங்க. கீழே விழுந்தால் காப்பாத்துறது கஷ்டம்” என்று நீலன் சொன்னவுடன், அவர்களின் பயம் இன்னும் அதிகமானது.
“நீலா, ரொம்ப நேரம் தொங்க முடியலை” என்றார் ஒரு மாணவர். “நீங்க நாலு பேரும் இருக்கிற கிளையை வெட்டி விடறேன். அது அந்தப் பாறையில் விழும்போது, பாறையில் நின்றுவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு, அரிவாளால் கிளையை வெட்டினான் நீலன். மரக்கிளை ஒடியும் சத்தம் கேட்டதும் மதம் கொண்ட யானை அங்கிருந்து வேகமாக அகன்றது.
நீலன் மெதுவாக மரத்தை விட்டுக் கீழே வந்து, மாணவர்களைப் பாறையிலிருந்து இறக்கினான். “நல்லவேளை, உயிர் பிழைச்சோம். கொஞ்ச நேரத்தில் ஆடிப் போயிட்டோம். நீலா, உனக்குதான் நன்றி சொல்லணும்” என்றார்கள் மாணவர்கள். ”இன்னிக்கு இவ்வளவு பார்த்தது போதும்” என்று நால்வரையும் பத்திரமாக மலையடிவாரத்தில் விட்டுவிட்டுச் சென்றான் நீலன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT