Published : 18 Dec 2019 10:22 AM
Last Updated : 18 Dec 2019 10:22 AM
மிது கார்த்தி
திராட்சைப் பழங்களை உங்களால் நடனமாட வைக்க முடியுமா? ஒரு சோதனை செய்து பார்க்கலாமா?
என்னென்ன தேவை?
# கண்ணாடி டம்ளர்
# சோடா
# திராட்சைப் பழங்கள் அல்லது உலர் திராட்சைகள்
எப்படிச் செய்வது?
# சோடா பாட்டிலைத் திறந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றுங்கள்.
# கண்ணாடி டம்ளரில் மூன்று அல்லது நான்கு திராட்சைப் பழங்களைப் போடுங்கள்.
# என்ன நடக்கிறது என்று கவனியுங்கள்.
# சோடாவில் திராட்சை பழங்களைப் போட்டவுடன் கண்ணாடி டம்ளரின் அடியில் மூழ்கும். பிறகு திராட்சைகள் மெதுவாக மேல் மட்டத்துக்கு வரும்.
# மேல் மட்டத்தில் திராட்சைப் பழங்கள் திடீரென சுழல ஆரம்பிக்கும். பின்னர் மீண்டும் கீழே செல்லும். பிறகு மீண்டும் மேலே வரும். இந்தக் காட்சி, திராட்சைப் பழங்கள் நடனம் ஆடுவதைப் போல நமக்குத் தோன்றும்.
# திராட்சைப் பழங்கள் சோடாவில் மிதக்கவும் மூழ்கவும் என்ன காரணம்?
காரணம்
அதிக அழுத்தத்தில் கார்பன் டை ஆக்ஸைடு வாயு கலந்த நீர்தான் சோடா. ஒரு பொருளின் அடர்த்தியானது திரவத்தின் அடர்த்தியைவிட அதிகமானால் அந்தப் பொருள் மூழ்கும். அதேபோல பொருளின் அடர்த்தி திரவத்தின் அடர்த்தியைவிடக் குறைவாக இருந்தால் அந்தப் பொருள் மிதக்கும். ஆர்க்கிமிடிஸின் இந்த விதிதான் இந்தச் சோதனையில் செயல்படுகிறது.
சோடா பாட்டிலைத் திறக்கும்போது கார்பன் டை ஆக்ஸைடு வாயு வேகமாக வெளியே வரும். அதில் திராட்சைகளைப் போட்டவுடன் டம்ளரின் அடிப்பாகத்துக்கு வருகின்றன. அப்போது அவற்றின் மீது கார்பன் டைஆக்ஸைடு வாயுக் குமிழ்கள் ஒட்டிக்கொள்ளும். இதனால் திராட்சைப் பழங்களின் நிகர அடர்த்தி குறைந்துவிடுகிறது. இதனால், அவற்றின் மீது செயல்படும் மேல் நோக்கிய விசை அதிகமாகிவிடுவதால் சோடாவின் மேல் மட்டத்துக்கு திராட்சைகள் வருகின்றன.
மேல் மட்டத்துக்கு வந்தவுடன் திராட்சைகளில் ஒட்டியுள்ள கார்பன் டை ஆக்ஸைடு குமிழகள் மீது வெளிக்காற்று படுகிறது. இதனால், குமிழ்கள் உடைந்துவிடுகின்றன. அப்போது சோடாவைவிடப் பழங்களின் அடர்த்தி அதிகமாகிறது. இதனால், திராட்சைகள் மீண்டும் மூழ்குகின்றன. கண்ணாடி டம்ளரின் அடிப்பாகத்தில் பழங்கள் மீது குமிழ்கள் ஒட்டுவதும் மேல் மட்டத்தில் குமிழ்கள் உடைவதுமே பழங்களின் அடர்த்தி மாறி திராட்சைகள் நடனமாடுவதைப் போலத் தெரியக் காரணம்.
ஓவியம்: வாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT