Published : 27 Nov 2019 09:33 AM
Last Updated : 27 Nov 2019 09:33 AM
சேவல் அதிகாலையில் சரியாகக் கூவுவது எப்படி, டிங்கு?
– ஸ்ரீகணேஷ், 10-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, ஆளூர், குமரி.
பெரும்பாலான பறவைகள் அதிகாலையில் குரல் கொடுக்கின்றன. இது தங்கள் எல்லை என்பதையும் உணவு தேடிச் செல்வதைப் பிறருக்குத் தெரியப்படுத்தும் நோக்கிலும் குரல் எழுப்புகின்றன. அதேபோல்தான் சேவலும் அதிகாலையில் கூவுகிறது. எல்லோரும் சொல்வதுபோல் சேவல் அதிகாலையில் மட்டும் கூவுவதில்லை. பகல், மாலை நேரத்திலும் கூவுகிறது. ஆனால், அதிகாலை கூவும்போது அதிக டெசிபலில் கூவல் இருப்பதால், நமக்கு அது அதிகாலை மட்டும் கூவுவதாகத் தெரிகிறது.
ஜப்பானியப் பல்கலைக்கழகத்தில் ஒரு சேவலை 14 நாட்கள் 24 மணி நேரமும் வெளிச்சத்திலேயே வைத்திருந்தார்கள். அப்போதும் சரியாக அதிகாலை நேரம் சேவல் கூவியது. பிறகு 14 நாட்கள் குறைவான வெளிச்சத்தில் (இரவு சூழ்நிலையில்) வைத்திருந்தார்கள். அப்போதும் சரியாக அதிகாலை நேரம் கூவியது. இந்த ஆய்வின் முடிவில் சேவலின் கூவலுக்கு வெளிச்சமோ இருளோ காரணம் இல்லை என்பதையும் சேவலுக்குள் இருக்கும் உயிர்க்கடிகாரமே (Biological Clock) காரணம் என்பதையும் தெரிவித்தனர், ஸ்ரீகணேஷ்.
இயற்கை வளங்கள் நமக்கு வரம்தானே? பிறகு ஏன் கோசி போன்ற ஆறுகளைத் துயரம் என்று அழைக்கிறார்கள், டிங்கு?
– ச. ஓவியா, 10-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
நல்ல கேள்வி, ஓவியா. இயற்கை வளங்கள் அனைத்தும் வரம்தான். ஆனால், மனிதர்கள் தங்களுக்கு நன்மையோ பயனோ தராத விஷயங்களை எல்லாம் வீண், துயரம் என்று அழைத்துவிடுகிறார்கள். கங்கையின் மிகப் பெரிய துணை ஆறுகளில் ஒன்று கோசி ஆறு. இது பிஹார் மாநிலத்தில் பாய்கிறது. வண்டல் மண் தன்மை காரணமாக பண்டைக் காலத்திலிருந்தே அடிக்கடித் தடம் மாறிப் பாய்ந்துவிடுகிறது.
இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மனிதர்கள் துன்பத்துக்கு உள்ளாகிறார்கள். அதேபோல் சீனாவில் மஞ்சள் ஆற்றில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் சீனாவின் துயரம் மஞ்சள் ஆறு என்று அழைக்கிறார்கள். இது ஆறுகளின் குற்றம் அல்ல. ஆறுகள் பாயும் இடங்களுக்கு அருகில் மனிதர்கள் வசிப்பதும் ஆற்றின் தடங்களை ஆக்கிரமித்ததும்தான் காரணம்.
நிலா எப்போதும் குளிர்ச்சியாக இருக்குமா? இரவில் மட்டும் தெரிகிறது. பகலில் எங்கே மறைந்திருக்கிறது, டிங்கு?
– பா. தனுஷ், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.
சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன் எல்லாம் எங்கும் எப்போதும் மறைந்திருப்பதில்லை, தனுஷ். பகலில் நட்சத்திரங்கள் ஏன் நம் கண்களுக்குத் தெரிவதில்லை? சூரிய ஒளியின் காரணமாக நட்சத்திரங்கள் மின்னுவது நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்று படித்திருப்பீர்கள். அதேபோல்தான் சந்திரனின் ஒளியையும் பகலில் நம்மால் பார்க்க முடிவதில்லை. நட்சத்திரங்களைவிட அருகில் இருப்பதால் பகலிலும் சில நேரத்தில் சந்திரனைப் பார்க்க முடிகிறது. சந்திரனில் ஒரு நாள் என்பது பூமியில் 28 நாட்கள். சந்திரன், பூமியைச் சுற்றி வர 28 பூமி நாட்களை எடுத்துக்கொள்கிறது.
அதனால் 14 நாட்கள் பகலாகவும் 14 நாட்கள் இரவாகவும் இருக்கிறது. பகல் நேரத்தில் அளவுக்கு அதிகமான வெப்பமாகவும் (125 டிகிரி செல்சியஸ்) இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமான குளிராகவும் (மைனஸ் 150 டிகிரி செல்சியஸ்) சந்திரனில் இருக்கும். இதற்குக் காரணம் சந்திரனில் காற்று மண்டலம் இல்லை என்பதுதான். இந்தக் காற்று மண்டலம் இல்லாததால் பகல் நேரத்தில் சந்திரனுக்கு மேலே பார்த்தால் கரிய நிறமாக இருக்கும். சூரியனும் மற்ற நட்சத்திரங்களும் பிரகாசமாகத் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT