Published : 09 Oct 2019 12:34 PM
Last Updated : 09 Oct 2019 12:34 PM

கதை: யார் இசைத்த புல்லாங்குழல்?

கொ.மா.கோ. இளங்கோ

ஓரிரு செடிகள் அசைந்தாடின. பறக்கும்போது பட்டாம்பூச்சிகள் இறகை விரித்து மடித்துக்கொள்வதைப்போல் பச்சை இலைகள் திறந்து மூடிக்கொண்டன. சட்டென்று செடிகளுக்கு இடையிலிருந்து இளங்காற்று வெளியேறியது. சிறிது நேரம் சிறு வண்டுகளுடன் உரையாடிய காற்று, “கொஞ்ச நேரம் கடைத்தெருவைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்புகிறேன்” என்றது. வண்டுகள் விடை கொடுத்து அனுப்பி வைத்தன.

கடலில் மிகப் பெரிய அலை மேலே எழுவதைப்போல் உயர எழுந்தது, இளங்காற்று. கடைத்தெருவில் புகுந்து சுற்றியது. மரங்களோ பறவைகளோ இல்லாத கடைத் தெருவைப் பார்த்து, தவறான பகுதிக்கு வந்துவிட்டோமோ என்று கவலை அடைந்தது. கடைசியில் அந்தக் காற்று, கதவுகள் திறக்கப்பட்டிருந்த ஒரு ஜன்னலைக் கண்டது. அதில் நுழைந்து தப்பித்து விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளே புகுந்து சென்றது. அது, ஒரு பொம்மை விற்பனைக் கடைக்குள் நுழைந்திருந்தது. கடைக்குள் நிறைய சிறுவர்கள் இருந்தார்கள்.

கண்ணாடி பொம்மைகள், ரப்பர் பொம்மைகள், பீங்கான் பொம்மைகள், விதவிதமான சீன பொம்மைகள் என்று பிரித்து வைக்கப்பட்டிருந்த எல்லா இடங்களிலும் கூட்டம். கடைசியில் ஓர் ஓரமாக ஒதுங்கியது இளங்காற்று. திடீரென்று தனக்கு அருகில் யாரோ முணுமுணுக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தது. அருகில் ஒரு புல்லாங்குழல் தொங்கிக்கொண்டிருந்தது.

“வணக்கம் இளங்காற்றே. புல்லாங்குழல் பேசுகிறேன். நீண்ட நாட்களாகக் கடைக்காரர் என்னை இந்த மூலையில் தொங்கவிட்டிருக்கிறார்” என்றது வருத்தத்துடன். ”உன்னை ஏன் இப்படி மூலையில் வைத்திருக்கிறார்? இசையை விரும்பும் குழந்தைகள் ஏராளமாக இருக்கிறார்கள். உன்னைப் பார்த்தால் உடனே வாங்கிவிடுவார்களே?” என்றது இளங்காற்று.

”குழந்தைகள் வாங்குவதற்கு விருப்பமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், என்னை வாசித்துப் பார்த்து வாங்க நினைக்கிறார்கள். கடைக்காரர் அதற்குச் சம்மதிப்பதில்லை. என்னைத் தொடக்கூட அவர் விடுவதில்லை. அதனால் பயனில்லாமல் மூலையில் தொங்கிக்கொண்டிருக்கிறேன்” என்று தொண்டை அடைக்கச் சொன்னது புல்லாங்குழல்.

”உன் பிரச்சினையை உடனே தீர்த்து வைக்கிறேன்” என்று சொன்ன இளங்காற்று, புல்லாங்குழலின் ஒரு முனையில் நுழைந்து, ஏழு துளைகள் வழியாக மாறி மாறி வெளியே வந்தது. பாம்பு நடனம் ஆடுவதைப்போல நெளிந்து நெளிந்து சுற்றி வந்தது. வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் புல்லாங்குழலுக்குள் விளையாடியது.
இனிமையான இசை எல்லோரின் காதுகளையும் இன்பமாகத் தீண்டியது. கடையில் இருந்த அனைவரும் இசையைக் கேட்டு மயங்கினர்.

“ஓ… இது மோகனராகத்தில் அமைந்த இசை” என்று விளக்கினான், தங்கைக்காக பொம்மை வாங்க வந்த ஒரு சிறுவன். குழந்தைகள் இசையை ரசித்தபடி நடனம் ஆடினார்கள். கடைக்காரர் என்ன நடக்கிறது என்று புரியாமல் தலையை உயர்த்திப் பார்த்தார். அவர் தொங்கவிட்ட அதே இடத்தில்தான் புல்லாங்குழல் இருந்தது. ஆனால், அதிலிருந்து எப்படி இசை வருகிறது என்று தெரியாமல் திகைத்துப் போனார். எல்லோருடைய கவனமும் புல்லாங்குழல் பக்கம் திரும்பியது. சட்டென்று இசை நின்றது. அனைவரும் புல்லாங்குழல் வேண்டும் என்று கடைகாரரிடம் கேட்டார்கள்.

புல்லாங்குழல் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. இளங்காற்றுக்கு நன்றி சொன்னது. “கடையில் இருப்பது ஒரே ஒரு புல்லாங்குழல்தான். இரண்டு நாட்களில் உங்கள் தேவையைச் சரிசெய்துவிடுகிறேன். இந்தப் புல்லாங்குழலைத் தன் தங்கைக்காக பொம்மை வாங்க வந்த அன்புச் சிறுவனுக்குக் கொடுக்கிறேன்” என்றார் கடைக்காரர். எல்லோரும் சிறுவனிடம் இருந்த அந்தப் புல்லாங்குழலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இளங்காற்று நிம்மதியாகக் கடையைவிட்டுக் கிளம்பிச் சென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x