Published : 25 Sep 2019 11:45 AM
Last Updated : 25 Sep 2019 11:45 AM

மாய உலகம்! - கலிலியோவின் வாக்குமூலம்

மருதன்

“கலிலியோ கலிலியாகிய நான் 1633-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதியாகிய இன்று இந்தச் சபையின் முன்னால் எனது வாக்குமூலத்தை அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டிருக்கிறேன். மதிப்புக்குரிய நீதிபதிகளும் மரியாதைக்குரிய அதிகாரிகளும் கற்றறிந்த கணவான்களும் இந்த அரங்கில் குழுமியிருக்கிறீர்கள். உங்கள் முன்னால் இந்த எளிய கைதி மிகுந்த பணிவோடு ஒரு சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இது எனக்கு எதிரான வழக்கு மட்டுமல்ல. கடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் இங்கே மோதிக்கொள்கின்றன. சூரியனை எதிர்க்க பூமி திரண்டு வந்திருக்கிறது. பகுத்தறிவுக்கு எதிராகப் பரலோகம் களம் இறங்கியிருக்கிறது. தேவனோடு மனித குமாரன் ஒருவன் போராடிக்கொண்டிருக்கிறான்.

இந்தப் போராட்டம் எனக்குள்ளும் நிகழ்ந்திருக்கிறது. ஒரு நாள் கோப்பர்னி்கஸை வாசித்துக்கொண்டிருந்தேன். ‘பூமியே இந்தப் பிரபஞ்சத்தின் மையம். சூரியன் உட்பட வானிலுள்ள எல்லாக் கோள்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்னும் வாதம் தவறானது. உண்மையில் சூரியனே பிரபஞ்சத்தின் மையம். பூமி அசைவதில்லை என்பதும் தவறான கருத்து. பூமி அசைவதோடு நில்லாமல், சூரியனையும் சுற்றி வருகிறது. இந்தச் சுழற்சியே இரவையும் பகலையும் கொண்டுவருகிறது’ என்று அறிவித்திருந்தார் கோப்பர்னிகஸ்.

என் காலுக்குக் கீழுள்ள நிலம் என்னைவிட்டு விலகுவது போலிருந்தது. அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக இத்தனை கோடி மக்கள் உலகெங்கும் நம்பிக்கொண்டிருந்தது தவறா? அறிவுச்சுரங்கம் என்று கருதப்படும் அரிஸ்டாட்டிலின் சொல் தவறா? திருச்சபையின் வாசகம் தவறா? சிறு வயதிலிருந்தே இறைவனின் கரத்தைப் பற்றிக்கொண்டு நடைபோட்டுக்கொண்டிருந்த நான், கோப்பர்னிகஸால் பெரும் தவிப்புக்கு ஆளானேன். யார் சொல்வது உண்மை? அதை எப்படி உறுதி செய்துகொள்வது? மேலும் மேலும் வாசிக்கத் தொடங்கியபோது என்னை அறியாமல் என்னுடைய இன்னொரு கரத்தை அறிவியலிடம் ஒப்படைத்திருந்தேன்.

அந்தக் கரம் என் அம்மாவின் கரத்தைப்போல் இளஞ்சூட்டோடு இருந்தது. நான் கடவுளைவிட்டு விலகவில்லையே, பாதகமில்லையா என்று தயக்கத்தோடு கேட்டேன். இல்லை என்று புன்னகை செய்தது அறிவியல். அது அழைத்துச் செல்லும் இடம் எல்லாம் சென்றேன். நடக்க நடக்க என் முன் விரிந்திருக்கும் இருள் மெல்ல மெல்ல விலகுவதையும் நட்சத்திரம்போல் சின்னச் சின்ன வெளிச்சம் தோன்றி மின்னுவதையும் வியப்போடு கவனித்தேன்.

ஒவ்வொரு கணித சூத்திரமும் இயற்பியலின் ஒவ்வொரு விதியும் வானியலின் ஒவ்வோர் உண்மையும் என்னை மலை அளவு வளப்படுத்துவதை உணர்ந்தேன். நிலவும் மேகமும் சூரியனும் நட்சத்திரமும் கடலும் நிலமும் அப்போதுதான் படைக்கப்பட்டதைப்போல் புத்தம் புது மெருகோடு எழுந்தருளி நின்றன.

கோப்பர்னிகஸை இன்னொருமுறை வாசித்தபோது குதூகலம் தோன்றியிருந்தது. ’கலிலியோ, அவசரப்படாதே. எதையும் பரிசோதிக்காமல் ஏற்காதே’ என்று அப்போதும் ஆற்றுப்படுத்தியது அறிவியல். இரவு, பகலாக உழைத்து ஒரு தொலைநோக்கியைக் கண்டுபிடித்தேன். நட்சத்திரங்கள் நிறைந்திருந்த ஓர் இரவில், நல்ல குளிரில் என் தொலைநோக்கியை வானத்தை நோக்கித் திருப்பினேன். அந்த ஒரு கணத்தில் ஒரு லட்சம் கோடி கண்கள் என்னைக் கனிவோடு குனிந்து பார்ப்பதைப் போலிருந்தது. என் உடல் எங்கும் பரவிய சிலிர்ப்பை ஒன்றுகுவித்து இதயத்தில் நிரப்பிக்கொண்டேன்.

வானத்தின் இருப்பை ஆராயத் துடித்த எனக்கு என்னுடைய இருப்பு என்னவென்பதை ஒரு விநாடியில் உணர்த்திவிட்டது அந்தக் காட்சி. ஒட்டுமொத்த பூமியும், ஒட்டுமொத்த மனித குலமும், ஒட்டுமொத்த பிரபஞ்சமும் வானத்தின் கண்களுக்கு சிறு தூசியைப் போல்தான் இருந்திருக்கும், இல்லையா? நாம் கட்டி எழுப்பும் பேரரசுகள், நாம் பெருமிதம் கொள்ளும் பதவிகள், நாம் குவித்து வைத்திருக்கும் செல்வம், நாம் ஏற்றிப் போற்றும் மதங்கள், நாம் மேற்கொள்ளும் போர்கள் அனைத்தையும் கண்டு நட்சத்திரங்கள் நகைத்திருக்கும், அல்லவா?

என்னுடைய ஒரே ஒரு விரலைப் பற்றிக்கொள், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்கிறது அறிவியல். நீ எங்கும் செல்லலாம்; எதையும் பரிசோதிக்கலாம்; ஒருவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. நீ யார், உன் தகுதி என்ன, நீ எங்கிருந்து வருகிறாய் என எதுவும் கேட்க மாட்டேன். உனக்கு மட்டுமல்ல, உன் கடவுளுக்கும் இங்கே இடம் உண்டு என்று அகலமாகத் தன் கரங்களையும் இதயத்தையும் திறந்து அரவணைத்துக்கொள்கிறது அறிவியல்.

அளவற்ற கருணையைப் போதிக்கும் மதமோ கோப்பர்னிகஸுக்கும் எனக்கும் இடமில்லை என்று கதவுகளை மூடிக்கொண்டுவிட்டது. எங்களை ஏற்காவிட்டால் பரவாயில்லை, இந்தக் கருவியில் உங்கள் கண்களைப் பொருத்தி வானுலகைப் பாருங்கள் என்று என் தொலைநோக்கியை எடுத்துக்கொண்டு எல்லாப் பெரிய மனிதர்களிடமும் ஓடினேன். நாம் நம்மை மகத்தானவர்களாகக் கருதிக்கொள்வதால்தான் நம் பூமியும் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்ப விரும்புகிறோம். பிரபஞ்சம் எத்தனை பெரியது என்பதை நீங்களே பாருங்கள் என்று இறைஞ்சினேன். பலனில்லை.

மரியாதைக்குரிய சபையினரே, உங்களுடைய நம்பிக்கைகளை நகர்த்தி வைத்துவிட்டு, திறந்த மனதோடு ஒரே ஒருமுறை என் தொலைநோக்கியில் உங்கள் கண்களைப் பொருத்தி வானைப் பாருங்கள். நான் கண்ட காட்சியை நீங்களும் காண்பீர்கள். எனக்குக் கிடைத்த வெளிச்சம் உங்களுக்கும் சாத்தியமாகும். என் மனம்போல் உங்கள் மனமும் படர்ந்து விரியும். இயன்றால் ஒரே ஒரு விரலை உயர்த்துங்கள். கதகதப்பூட்டும் மென்மையான கரம் ஒன்று உங்களைப் பற்றிக்கொள்ள காத்துக்கொண்டிருக்கிறது. இந்த மாய உலகின் புதிர்களில் ஒன்றை விடுவிப்பதற்கான ஆற்றலை அந்தக் கரம் உங்களுக்கும் அருளும்.

அளவற்ற ஆற்றல் இருந்தும் எதையும் எவர்மீதும் திணிக்கும் விருப்பமோ பலமோ அறிவியலுக்கு இல்லை. எனவே, உங்களை நோக்கி நீண்டு வரும் அதன் மெல்லிய கரத்தைப் பிடித்து முறுக்கி, விலங்கு மாட்டினாலும் அது கலங்கப் போவதில்லை. அறிவியல் என்னைக் கைவிடுவதாக இல்லை. என் விரல்களை அது இன்னமும் பற்றிக்கொண்டு இங்கே நின்றுகொண்டிருக்கிறது. நானும் அதைவிட்டுப் பிரிவதாக இல்லை. உங்கள் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.”

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x