Published : 25 Sep 2019 10:30 AM
Last Updated : 25 Sep 2019 10:30 AM
ஆதி
நீங்கள் சிறு குழந்தையாக இருந்தபோது தீயை முதன்முதலில் பார்த்தபோது, ஆர்வமாக இருந்திருக்கும். சுடர்விட்டு எரியும் தீ எப்படிப்பட்டது, அதைத் தொட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் தோன்றியிருக்கும். இதற்காக மெழுகுவர்த்தியையோ அடுப்பு தீச்சுடரையோ தொட்டுப் பார்க்க முயன்றிருப்போம். அப்படித் தீயைத் தொட்டவுடன் என்ன ஆகிறது? சட்டென்று தீயைத் தொட்ட விரலை பின்னால் இழுத்துக்கொள்கிறோம்.
முதல்முறையாக இதுபோன்ற ஓர் அனுபவம் நமக்குக் கிடைக்கும்போது, நடந்த சம்பவத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவையும் நமது மூளை நினைவாகச் சேமித்து வைத்துக்கொள்கிறது. இதற்குப் பெயர்தான் அனுபவம். அடுத்த முறை ஒரு தீச்சுடரையோ வெப்பமான பொருளையோ பார்க்கும்போது, மறந்தும்கூட அதைத் தொடுவதற்கு நாம் முயலுவதில்லை. முந்தைய முறை கிடைத்த அனுபவத்தால், அதன்மூலம் பெற்ற அறிவால், மீண்டும் அதே போன்ற ஒரு செயல்பாட்டைச் செய்யக் கூடாது என்று நமது மூளை அறிவுறுத்துகிறது. அதன் கட்டளையைக் கேட்டு நாமும் தீயைத் தொடுவதில்லை.
இயற்கை நுண்ணறிவு
இப்படிப் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளுதல், முந்தைய அனுபவத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தல், முடிவெடுத்தல், அந்த முடிவின்படி நடத்தல் ஆகிய தொடர் சங்கிலிதான் மனித அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை. இதுபோன்ற நம்முடைய முந்தைய அனுபவங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் கிடைத்த கற்றலின் அடிப்படையில், மேலும் மேலும் சிக்கலான பிரச்சினைகளுக்குக்கூட தீர்வைக் கண்டுவிடுகிறோம்.
இயற்கை நுண்ணறிவு, அதாவது ஒன்றை பகுத்தாராய்ந்து முடிவெடுக்கும் பகுத்தறிவு, மனிதர்களான நமக்கு மட்டுமே உள்ளது. அறிவியலாளர்கள் புதுப்புதுக் கருவிகளைக் கண்டறிந்தபோது, ஏன் மனிதர்களைப் போலவே அந்தக் கருவிகளும் கற்றுக்கொண்டு, புத்திசாலித்தனமான செயல்பாடுகளை முன்னெடுக்க வைக்கக் கூடாது என்ற கனவைக் கண்டனர்.
இந்தப் பின்னணியில் மனிதர்களைப் போலவே கருவிகளைச் சிந்திக்க வைக்க முயன்றுவரும் அறிவியல் துறைதான் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence). செயற்கை நுண்ணறிவுக் கருவிகளும் ஒருவகை கணினிகளே. இந்தக் கணினிகள் பெருமளவு தகவல்களைத் தம் சேகரிப்பில் கொண்டிருக்கும், இந்தத் தகவல்களை அதிவேகத்திலும் துல்லியமாகவும் பகுத்தாராய்ந்து செயல்படும். இதுவரை கணினிகளை நாம்தான் இயக்கிக்கொண்டிருக்கிறோம். கற்றுக்கொள்வது, புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பது போன்றவற்றைத் தன்னிச்சையாக அவற்றால் முழுமையாகச் செய்ய வைக்க முடியவில்லை.
செயற்கை நுண்ணறிவு
சரி, ஒரு புத்திசாலித்தனமான கருவியை உருவாக்க என்னவெல்லாம் தேவை? தகவல்களைச் சேமிக்கத் தேவையான சேகரிப்பிடம், புதிய செயல்பாடுகளின்போது சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பயன்படுத்துதல், பழைய-புதிய செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்து தர்க்கரீதியிலான முடிவுக்கு வருதல் - இந்த அம்சங்கள் இருந்தால் புத்திசாலித்தனமான ஒரு கருவியை உருவாக்கிவிடலாம்.
சுடும் பொருளை நேரடியாகக் கையால் நாம் தொடுவதில்லை. ஆனால், அதைத் தொட்டுத்தான் ஆக வேண்டுமென்றால், வெப்பத்தைக் கடத்தாத இடுக்கி, துணி, கையுறை போன்றவற்றை அடுத்த முறை பயன்படுத்துகிறோம் இல்லையா, அதுபோல இந்தப் புத்திசாலித்தனமான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளும் செயல்படும்.
எது நுண்ணறிவு?
சில வகை அயர்ன் பாக்ஸ், ஹீட்டர் போன்றவை குறிப்பிட்ட அளவு வெப்பத்தை எட்டிவிட்டால் தானாக அணைந்துவிடுகின்றன. ஆனால், இவை செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படவில்லை.
குறிப்பிட்ட வெப்பநிலைக்குப் பிறகு, சூடேறாத வகையில் இந்தக் கருவிகளில் மின்சாரம் தடைசெய்யப்பட்டு விடுகிறது. அதனால் அதற்கு மேல் அவை சூடேறுவதில்லை. இந்தக் கருவிகள் முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் ஒன்றைக் கற்றுக்கொண்டு செயல்படவில்லை. எனவே, இது செயற்கை நுண்ணறிவு இல்லை.
நியூரான் கூட்டம்
அப்படியானால் செயற்கை நுண்ணறிவு எது? மனிதர்களைப் போலவே கற்றுக்கொள்ளக்கூடிய, சிந்திக்கக்கூடிய கணினிகளை உருவாக்குவதற்கான மென்பொருள் நிரல்களை உருவாக்க அறிவியலாளர்கள் முயன்று வருகிறார்கள். இந்த நிரல்கள் மனித மூளையின் செயல்பாடுகளை பிரதியெடுக்க முயலுகின்றன. அந்த வகையில் அவை பிரதியெடுக்க முயலும் ஒன்று நரம்புக் கட்டமைப்பு.
நமது மூளை என்பது நியூரான்கள் எனும் லட்சக்கணக்கான, அடர்த்தியான செல் கூட்டத்தால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு நியூரானும் ஒரு தனி ‘ஸ்விட்ச்’ போன்றது. நியூரான்கள் அனைத்தும் கோடிக்கணக்கான மற்ற நியூரான்களுடன் தொடர்புகொண்டுள்ளன. நமது கணினிக்கான கடவுச்சொல், ஒருவருடைய வீட்டுக்கான பாதை, ஒருவருடைய அடையாளம் போன்றவை குறித்த தகவல் நமது மூளைக்குச் செல்லும்போது நியூரான்களில் சிலவற்றை ஒளிரச் செய்தும், சிலவற்றை அணைத்தும் ஒரு படத்தை நமது மூளை உருவாக்கிக்கொள்கிறது (இதை நம்மால் பார்க்க முடியாது).
பல்பு எரிகிறதா?
திருவிழாக்களில் சீரியல் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். இந்த சீரியல் விளக்குகள் பல்வேறு வெளிச்ச வடிவங்களை உருவாக்கும். வட்ட வடிவ ஒளி, பூக்களைப் போன்ற ஒளி, பட்டாசு வெடிப்பது போன்ற ஒளி, அடுத்தடுத்து ஒன்று அணைந்து ஒன்று எரிவது போன்ற ஒளி போன்ற வடிவங்களை உருவாக்குவதைப் பார்த்திருக்கலாம்.
நரம்பு வலைப்பின்னலும் இதுபோன்று குறிப்பிட்ட வடிவங்களையே உருவாக்குகிறது. மூளைக்குள் செல்லும் ஒவ்வொரு தகவலும் இப்படி மாறுபட்ட வடிவங்களை உருவாக்குகிறது. நமது மூளையில் உள்ள ஒவ்வொரு நரம்பு செல் அல்லது நியூரான் சிறுவிளக்கைப் போலச் செயல்பட்டு, ஒவ்வொரு தகவலும் குறிப்பிட்ட ஒரு வடிவத்தை ஒளிரச் செய்கிறது.
இப்படியாக ஒரு கடவுச்சொல்லையோ ஒரு பாதையையோ நினைவில் வைத்துக்கொள்ள நமது மூளையில் ஒரு குறிப்பிட்ட வடிவம் உருவாக்கப்பட்டிருக்கும் அல்லது ஒளிரச் செய்திருக்கும், இல்லையா? அதே கடவுச்சொல்லை, பாதையை திரும்ப நினைவுக்குக் கொண்டுவர வேண்டும் எனும்போது, அதே வடிவத்தை-ஒளிர்தலை நமது மூளை திரும்ப உருவாக்கியே நினைவுக்குக் கொண்டுவருகிறது.
ஓட்டுநர் இல்லா கார்
மனித மூளையின் இந்த நரம்பு வலைப்பின்னலை ஒரு மென்பொருள் மூலம் கணினியில் உருவாக்க முயற்சி நடக்கிறது. நியூரான்களைப் போலவே குறிப்பிட்ட வடிவங்களை அங்கீகாரம் காண இந்த மென்பொருள் முயலும். இந்த வகையில் ஒரு மென்பொருள் மேலும் மேலும் செம்மைப்படுத்தப்படும்போது, அது பேரளவு தகவலை வகைப்படுத்திப் பிரித்தறியும், அடையாளமும் காணும். இந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் நொடிப் பொழுதில், ஏன் மனிதர்களைவிடவும் வேகமாகக்கூட அவை செய்துவிடும்.
இந்த வகையில்தான் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உருவாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஓட்டுநர் இல்லா கார்கள் போன்றவை இந்த வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு உலகை ஆளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம்: பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘நான்காம் தமிழ்’ என்ற இயலின்கீழ் ‘செயற்கை நுண்ணறிவு’ என்ற உரைநடை உலகம் பகுதி. |
நன்றி: Pitara
கட்டுரையாளர் தொடர்புக்கு:
valliappan.k@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT