Published : 25 Sep 2019 10:14 AM
Last Updated : 25 Sep 2019 10:14 AM
கீர்த்தி
பூஞ்சோலை கிராமத்துக்கு அருகில் இருந்த காட்டில் கரடி, நரி, குரங்கு மூன்றும் நண்பர்களாக இருந்தன. கரடி நல்ல உழைப்பாளி. எப்பேரதும் உழைத்தே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டது. ஆனால், குரங்கும் நரியும் உழைக்காமல் உண்டு வாழ விரும்பின. கரடி பலமுறை தன் முயற்சியில் தேடிய தேன், கிழங்குகளை எல்லாம் நரிக்கும் குரங்குக்கும் கொடுத்து உதவியது. ஆனால், நரியும் குரங்கும் சுயநலவாதிகளாக இருந்தன.
ஒருநாள் கரடிக்கு வெள்ளரிப்பழம் கிடைத்தது. ‘இதன் விதைகளைப் பயிரிட்டால் நிறைய வெள்ளரிக்காய்கள் விளையுமே! நண்பர்களுக்கும் எனக்கும் சில மாதங்களுக்கு உணவுக்குத் தட்டுப்பாடே இருக்காதே’ என்று நினைத்தது கரடி.
தன் எண்ணத்தை நரியிடமும் குரங்கிடமும் சொன்னது கரடி. கூடவே, மூன்று பேரும் சேர்ந்து தோட்டம் அமைக்கலாம் என்றும் சொன்னது. ஆனால், சோம்பேறிகளான நரியும் குரங்கும் முகத்தைச் சுளித்தன.
"நண்பா, வெள்ளரிப்பழத்தை இப்போதே சாப்பிடலாம். விதைகளை உடைத்தால் உள்ளே பருப்பு இருக்கும். அது மிகவும் ருசியாக இருக்கும். அதை விட்டுவிட்டுத் தோட்டம் போடுவது எல்லாம் வீண் வேலை" என்றன.
நரியும் குரங்கும் சொன்னதைக் கேட்ட கரடி, இவர்களை நம்பினால் வேலை நடக்காது என்று முடிவு செய்தது. குளக்கரைக்கு வந்து, அங்கு கிடந்த கல்லையும் முள்ளையும் வெட்டி சீர்செய்தது. மண்ணை நன்றாகக் கிளறி, பதப்படுத்தியது. அந்த இடத்தில் வெள்ளரி விதைகளை விதைத்தது. தினமும் குளத்திலிருந்து தண்ணீர் கொண்டுவந்து விதைகளுக்கு ஊற்றியது.
வெள்ளரிக் கொடிகள் முளைத்து வளரத் தொடங்கின. நன்றாக வளர்ந்த வெள்ளரிக் கொடிகளில் சிறிய வெள்ளரிப் பிஞ்சுகள் வெளிவந்தன. கரடி தோட்டத்துக்குச் சென்று தினமும் தண்ணீர் ஊற்றி வந்தது.
சில நாட்களிலேயே வெள்ளரிப் பிஞ்சுகள் நன்றாக விளைந்து பருக்கத் தெரடங்கின. இன்னும் ஒரு வாரம் கழிந்தால் வெள்ளரிக்காய்களைப் பறிக்கலாம் என்று நினைத்தது கரடி.
ஆனால், மறுநாளே கரடிக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. காலையில் தன் வெள்ளரித் தோட்டத்துக்குச் சென்று பார்த்தபோது, ஆங்காங்கே சில வெள்ளரிக்காய்கள் காணாமல் போயிருந்தன.
‘யார் எடுத்திருப்பார்கள்?’ என்று யோசித்தது கரடி. அது தன் வருத்தத்தை நரியிடமும் குரங்கிடமும் சொன்னது. தனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்றும் கேட்டது கரடி.
"நண்பா, நாங்கள்தான் ஏற்கெனவே சொன்னோமே... வெள்ளரித் தோட்டம் போடுவது எளிதான வேலை இல்லை என்று." கரடியும் நண்பர்களின் பேச்சிலிருந்த ஏளனத்தைக் கவனித்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? கரடி அன்று இரவு தானே வெள்ளரித் தேரட்டத்துக்குச் சென்று காவல் காத்தது. மறுநாள் பார்த்தபோது, தோட்டத்தின் மறுபக்கத்திலிருந்த சில வெள்ளரிக்காய்கள் காணாமல் போயிருந்தன. கரடி தன் நண்பர்களான நரியிடமும் குரங்கிடமும் அதைப் பற்றிச் சொன்னது.
"நண்பா, என்ன செய்ய முடியும்? நாங்கள் பகல் எல்லாம் உணவு தேடிப் பல இடங்களுக்கும் சென்று வருகிறோம். அந்தக் களைப்பில் இரவு உறங்கிவிடுகிறோம். உன்னுடன் காவலுக்கு வர முடியாதே" என்ற நரி, குரங்கைப் பார்த்துச் சிரித்துக்கொண்டது. "ஆமாம். திருடனைக் கண்டுபிடித்தால் அவனைச் சிங்கராஜாவிடம் நிறுத்தி, தண்டனை வாங்கிக் கொடுத்து, முகத்தில் கரியைப் பூசலாம். ஆனால், எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லையே" என்ற குரங்கு நரியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டது. பிறகு நரியும் குரங்கும் அங்கிருந்து சென்றுவிட்டன.
‘உதவியும் செய்யவில்லை. இப்போது கேலி வேறு செய்கிறார்களே’ என்று நினைத்த கரடிக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. இரவில் பூஞ்சோலை கிராமத்துக்கு வந்த கரடி, அங்கிருந்த சில பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் காட்டுக்குப் போய்விட்டது. மறுநாள், "என்ன நண்பா, நேற்று இரவு காவலுக்குப் போனாயா? திருடனைக் கண்டுபிடித்தாயா?" என்று ஏளனமாகக் கேட்டபடியே கரடியைத் தேடி வந்தன நரியும் குரங்கும்.
நரியையும் குரங்கையும் ஏறிட்டுப் பார்த்த கரடி, "ஓ… ஒரு திருடன் அல்ல. இரு திருடர்கள் என் வெள்ளரிக்காய்களைத் திருடித் தின்றிருக்கிறார்கள். இப்போதுதான் அவர்களைக் கண்டுபிடித்தேன். இப்போதே அரசரிடம் சொல்லி இருவருக்கும் சரியான தண்டனை வாங்கித் தரப் போகிறேன்" என்றது. "இரண்டு திருடர்களா?! யார் அவர்கள்?!" என்று அதிர்ச்சியோடு கேட்டன நரியும் குரங்கும்."இருவரும் என்னுடன் வாருங்கள். திருடர்களைக் காட்டுகிறேன்" என்று சொன்ன கரடி, நரியையும் குரங்கையும் குளக்கரைக்கு அழைத்துச் சென்றது.
"இதோ, குளத்து நீரில் எட்டிப் பாருங்கள்" என்று கரடி செரன்னதும், நரியும் குரங்கும் எட்டிப் பார்த்தன. குளத்து நீரில் கறுப்பாகத் தெரிந்த தங்கள் முகத்தின் பிம்பங்களைப் பார்த்து நரியும் குரங்கும் அதிர்ச்சி அடைந்தன. "என்ன நண்பர்களே, திருடர்களைப் பார்த்தீர்களா? நேற்று திருடனைப் பிடித்து முகத்தில் கரி பூச வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா! அதன்படி கிராமத்துக்குச் சென்று கரிக்கட்டைகளை எடுத்துப் பொடித்து, வெள்ளரிக்காய்களைச் சுற்றிப் போட்டு வைத்தேன்.
அவற்றைத் திருடித் திங்கப் போன திருடர்களின் முகத்தில் கரி அப்பிக்கொண்டது! இனி நம் சிங்கராஜாவிடம் சொல்லி அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டியதுதான்" என்று சிரித்துக்கொண்டே சொன்னது கரடி.
நரியும் குரங்கும் அவமானத்தால் தலை குனிந்தன.
"நண்பா, தெரியாமல் தவறு செய்துவிட்டோம். அரசரிடம் சொல்லிவிடாதே. எங்கள் இருவருக்கும் கடுமையான தண்டனை கொடுத்துவிடுவார். எங்களை மன்னித்துவிடு. இனி இப்படிச் செய்ய மாட்டோம்" என்று நரியும் குரங்கும் கெஞ்சின. "நண்பர்களே, உழைத்து உண்ணுங்கள். நண்பருக்குத் துரோகம் செய்யாதீர்கள்" என்று சொல்லி, நரியையும் குரங்கையும் மன்னித்து அனுப்பியது, கரடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT