Published : 18 Sep 2019 01:13 PM
Last Updated : 18 Sep 2019 01:13 PM
‘‘இதோ, ஓநாய்’’ என்று வாயைக் குவித்து ஊளையிட்டான் மாக்ஸ். ‘‘ஓடுங்கள், ஓடுங்கள். உயிர் பிழைக்க வேண்டுமானால் தப்பி ஓடுங்கள்.’’ பொம்மைகள் அனைத்தையும் அலமாரியோடு சேர்த்துக் கீழே தள்ளினான். புத்தகங்களைக் கலைத்தால் அம்மாவுக்குப் பிடிக்காது என்பது நினைவுக்கு வந்ததும் புத்தகங்களைக் கீழே கொட்டி மேலே ஏறி நின்றான். ‘‘ஓநாய்க்குப் பசிக்கிறது. நான் எதைச் சாப்பிடுவது?’’
திபுதிபுவென்று மாடியிலிருந்து கீழே இறங்கினான். நீண்ட காதுகள், கூர்மையான மூக்கு, வால், புசுபுசு முடியோடு கூடிய உடல் ஆகியவற்றைப் பார்த்த குட்டி நாய் நிஜமாகவே ஓநாய் வந்துவிட்டதோ என்று அஞ்சி, குரைத்தபடி வெளியில் பாய்ந்தோடியது. அதன் கண்களில் தெரிந்த பயத்தைக் கண்டதும் மாக்ஸின் உற்சாகம் அதிகரித்தது.
நாற்காலி, பாத்திரங்கள் என்று அனைத்தையும் உருட்டித் தள்ளினான். பாய்ந்து வந்த அம்மா மாக்ஸின் வேடத்தைக் கண்டதும், ‘‘மிருகமாகவே மாறிவிட்டாயா?’’ என்று கத்தினார். ‘‘ஆம், பயங்கரமான மிருகம். உங்களை விழுங்கப் போகிறேன்’’ என்று மாக்ஸ் அலறியதும், ‘‘அப்படியானால் இன்று உனக்கு இரவு உணவு கிடையாது’’ என்று பதிலுக்குக் கத்திவிட்டு நகர்ந்தார் அம்மா.
மாக்ஸ் கோபத்தோடு தன் அறைக்கு ஓடினான். அவன் அறை ஒரு காடாக மாற ஆரம்பித்தது. இது என்ன விந்தை என்று மாக்ஸ் விழிக்கும்போது ஒரு கப்பல் வந்து நின்றது. மாக்ஸ் அதில் ஏறி அமர்ந்ததும் கப்பல் கடலில் மிதக்க ஆரம்பித்தது. இரவு, பகல், வாரம், மாதம், ஆண்டு என்று காலம் நீண்டு சென்ற பிறகே கப்பல் நின்றது. மாக்ஸ் இறங்கினான்.
கும்மிருட்டு. கிலியூட்டும் சத்தம். மாக்ஸ் நடக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் விநோதமான விலங்குகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்ற ஆரம்பித்தன. நீண்ட கழுத்தும் கூரான கொம்புகளும் ஓரடி நீள நகங்களும் கொண்டிருக்கும் இதன் பெயர் என்ன? கரடி போன்ற உடலும் மூக்கில் ஒரு கொம்பும் கொண்டு கைகளை நீட்டும் இது என்ன? ஆஊவென்று கத்தியபடி அனைத்தும் தன்னை நெருங்குவதைக் கண்டதும் மாக்ஸ் சுதாரித்துக்கொண்டான்.
‘‘யாராவது என்னை நெருங்கினால், வாரிச் சுருட்டி விழுங்கிவிடுவேன், புரிகிறதா?’’
விநோத விலங்குகள் கண்களை உருட்டி அவனைப் பார்த்தன. மனிதன் மாதிரி இருக்கிறான், அதே நேரம் ஓநாயின் தோலும் ஓநாயின் பற்களும் அடர்த்தியான வாலும் கொண்டிருக்கிறான். நம்மை எல்லாம்விட பயங்கரமான கலவையாக இருப்போனோ? நிஜமாகவே நம்மைப் பிடித்துத் தின்றுவிடுவானோ? தன்னைப் பார்த்து ஒவ்வொரு விலங்கும் அச்சத்தோடு பின்வாங்குவதைப் பார்த்த மாக்ஸ், குரலெடுத்து முழங்கினான். ‘‘இனி இந்தக் காட்டில் நான் சொல்வதைத்தான் நீங்கள் எல்லாம் கேட்டு நடக்க வேண்டும்.’’
விலங்குகள் சட்டென்று கைகளைக் கட்டிக்கொண்டன. பயங்கரமான கரடிகூடப் பணிவோடு குனிந்து, ‘என்மீது ஏறிக்கொள்ளுங்கள் மன்னா’ என்றது. பூச்சி முதல் பூதம்வரை அனைத்தும் மாக்ஸைக் கண்டதும் தலையைத் தாழ்த்திக்கொண்டன. மாலை நேரம் அனைத்தும் ஒன்றுதிரண்டு பாட்டுப் பாடியும் நடனமாடியும் மாக்ஸை மகிழ்வித்தன.
இரவு, பகல், வாரம், மாதம், ஆண்டு என்று காலம் நீண்டு செல்லச் செல்ல மாக்ஸுக்கு அலுப்பு ஏற்பட ஆரம்பித்தது. இங்கே ஏதோ ஒன்று குறைவதுபோல் இல்லை? ஏன் என்னால் உறுத்தல் இன்றி இங்கே இருக்க முடியவில்லை? எல்லாம் இருந்தும் ஏன் மகிழ்ச்சி கிடைக்கவில்லை? கன்னத்தில் கை வைத்துக்கொண்டு மாக்ஸ் உடகார்வதற்கும் கப்பல் அவனை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது. மாக்ஸ் தாவி ஏறிக்கொண்டான். இது என்னை எங்கே அழைத்துச் செல்லும் என்று தெரிந்தும் ஏன் இதில் அமர்ந்திருக்கிறேன்? என்னைக் கண்டு அஞ்சி நடுங்கும் ஓர் உலகைவிட்டு, என்னை அதட்டி, உருட்டும் ஓர் உலகுக்கு ஏன் செல்ல வேண்டும் நான்?
கப்பல் விடைபெற்றுக்கொண்டது. அறையிலிருந்து காடும் காணாமல் போயிருந்தது. கீழே குனிந்து கலைந்து கிடந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி வைக்கும்போது மாக்ஸுக்குப் புரிந்தது. என் கோபம்தான் என்னிடமிருந்து இறங்கிவந்து காடாக வளர்ந்திருக்கிறது. அச்சமூட்டும் விநோத விலங்குகளை என்னுடைய காடுதான் உருவாக்கியிருக்கிறது.
நான் உருவாக்கிய விலங்குகளே என்னைக் கண்டு அஞ்சுகின்றன என்றால் என் கோபம் எத்தனை பெரிதாக இருந்திருக்க வேண்டும்? அதனால்தானே, என்னிடமிருந்து வெளிப்பட்ட காட்டிடமிருந்தும் என்னிடமிருந்து குதித்து வந்த விலங்குகளிடமிருந்தும் நான் தப்பி ஓடி வந்திருக்கிறேன்?
மாக்ஸ் தன் ஓநாய் தோலையும் நகங்களையும் உதிர்த்து, கீழே போட்டான். அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. என்னை அடையாளம் கண்டுகொள்வாரா? சொல்லாமல் எங்கே ஓடிப் போனாய் என்று கேட்பாரா?
மாடியிலிருந்து மெதுவாகக் கீழே இறங்கிவந்தான் மாக்ஸ். அவனை அடையாளம் கண்டுகொண்ட மகிழ்ச்சியில் குதித்தபடி ஓடிவந்தது குட்டி நாய். தான் உருட்டிய நாற்காலிகளும் உடைத்துப் போட்ட பாத்திரங்களும் சீராக வைக்கப்பட்டிருந்ததை மாக்ஸ் கவனித்தான். மேஜையின் மீது ஒரு கிண்ணம் மூடி வைக்கப்பட்டிருந்ததையும் அதிலிருந்து அற்புதமான மணம் கசிந்து வருவதையும் கண்டு கண்களை விரித்தான் மாக்ஸ். முதுகின் மீது ஒரு கை வந்து விழுந்தது. ‘‘எவ்வளவு நேரம், போ போய்ச் சாப்பிடு. பயங்கர ஓநாய்க்குப் பயங்கர பசி எடுத்திருக்குமே இந்நேரம்!’’
அம்மாவை அழுத்தமாகக் கட்டிக்கொண்டான் மாக்ஸ். ‘‘எப்படி அம்மா இத்தனை ஆண்டுகள் கழிந்தும் என் உணவை இன்னமும் சூடாகப் பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள்?’’ அம்மா விழித்தார். ‘‘இனி என் அறைக்குள் காடு வராது அம்மா’’ என்றான் மாக்ஸ்.
‘‘முதலில் உன் வாலைக் கழற்றிப் போட்டுவிட்டு வா!’’ என்றார் அம்மா.
(மாரிஸ் செண்டாக் எழுதிய Where The Wild Things Are என்னும் உலகப் புகழ்பெற்ற படக்கதையை அடிப்படையாக வைத்து எழுதியது).
- மருதன்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியம்: லலிதா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT