Published : 18 Sep 2019 01:13 PM
Last Updated : 18 Sep 2019 01:13 PM

இந்தப் பாடம் இனிக்கும் 12: எளியோர் உருவாக்கும் தமிழக அடையாளங்கள்

டெரகோட்டா எனப்படும் சுடுமண் சிற்பங்கள், பனைப் பொருட்கள், மரப்பாச்சி பொம்மைகள், பத்தமடை பாய்கள் போன்ற கைவினைப் பொருட்களைப் பெரும்பாலோர் சாதாரணமாக நினைக்கிறார்கள். ஆனால், தமிழகத்துக்கு வந்துசெல்லும் வெளிநாட்டவரும் பிற மாநிலத்தவரும் ஆச்சரியத்தோடு இந்தக் கலைப்பொருட்களை ரசிக்கிறார்கள். அத்துடன் தமிழக அடையாளங்களாக இவற்றை வாங்கியும் செல்கிறார்கள்.

இந்தக் கைவினைக் கலைகள் காலம்காலமாக எளிய மக்களால், கலை உணர்வுடன், அன்றாடம் பயன்படுத்துவதற்கேற்ற தன்மையுடன் உருவாக்கப்பட்டவை. இயற்கைக்கு இணக்கமான பண்பைக் கொண்ட இவற்றின் விலை குறைவு, அதேநேரம் கலைத்தன்மையுடனும் உருவாக்கப்பட்டுள்ளன. மண், தாவரம், மரம் போன்ற இயற்கை மூலப்பொருட்களில் இருந்து இவை தயாரிக்கப்படுவதால் இயற்கை பெரிதும் சீர்கெடுக்கப்படாமல், தொடர்ந்து வளர்க்கவும் மேம்படுத்தவும் படுகிறது. அத்துடன் கலைப்பொருட்களைத் தயாரிக்கும் எளிய கலைஞர்களுக்கு இவை வாழ்வாதாரமாகவும் திகழ்கின்றன.

மண் சார்ந்த கலைகள்

தமிழகத்தின் மண்பாண்டக் கலை மிகவும் பழைமை வாய்ந்தது. சிந்து சமவெளி நாகரிகக் காலத்திலேயே மண்பாண்டங்கள் இருந்துள்ளன. கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளிலும் மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன.

அடுப்பு, சட்டி, பானை, குளுமை (தானியங்களைப் பாதுகாக்கும் மண்கலம்), பூத்தொட்டி, அகல் என்று பலவகையான மண்ணாலான புழங்கு பொருட்கள் கலைத் தன்மையுடன் உருவாக்கப்படுகின்றன. இவற்றைச் செய்பவர்கள் வேளார்கள் அல்லது குயவர்கள் எனப்படுகின்றனர்.

பானைகள் ஏழைகளின் குளிர்சாதனப் பெட்டியாகத் திகழ்கின்றன. மண் பாண்டத்தில் சமைக்கும் உணவு தனிச்சுவை கொண்டது.

சுடுமண் சிற்பங்கள்

சிறுதெய்வக் கோயில்களில் கம்பீரமாக அமைந்துள்ள அய்யனார், முனியப்பன், மதுரை வீரன், மாரியம்மன் போன்ற தெய்வ உருவங்களும், குதிரை, யானை, காளை போன்ற தெய்வ வாகனங்களும் கலை நேர்த்தி மிக்கவை. இப்படித் தெய்வங்களுக்கு மண் சிலை வடித்தும் நேர்த்திக் கடன் செலுத்தியும் வழிபடுவது தமிழகத்தில் தொன்றுதொட்டு வரும் வழக்கம்.

களிமண்ணால் செய்யப்படும் இந்த உருவங்கள் நெருப்பில் இடப்பட்டு சுடுமண் சிற்பங்களாக மாற்றப்படுகின்றன. இந்த மண் சிற்பங்களில் விதவிதமான ஆபரணங்கள், முக பாவங்கள் கலை நுட்பத்துடன் உருவாக்கப்படுகின்றன. இன்றைக்கு அலங்காரக் கலைப்பொருட்களாகவும் சுடுமண் சிற்பங்கள் மாறியுள்ளன.

மரம் சார்ந்த கலைகள்

கோயில் ஊர்வலங்களுக்கான தேர், சப்பரம், வீட்டுக்கு வேண்டிய நிலை, கதவு, உத்திரம், நாற்காலி, கட்டில், உழவுக் கருவிகள், வீணை, மேளம், நாகஸ்வரம், மரப்பாச்சிப் பொம்மைகள், மீனவர் பயன்படுத்தும் கட்டு மரங்கள், படகுகள், வள்ளம், தோணி உள்ளிட்ட அனைத்தும் மரப்பொருட்களே.

பழங்கால அரண்மனைகள், திருவாரூர் தேர், வில்லிப்புத்தூர் போன்ற புகழ்பெற்ற தேர்கள், செட்டிநாட்டு மாளிகைகள், வீட்டு நிலைகளி்ல் நேர்த்தியான கைத்திறன் மிக்க மர வேலைப்பாடுகளைக் காணலாம். மரம் சார்ந்த கலைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் கம்மாளர், தச்சர், ஆசாரி எனப்படுகின்றனர்.

மரப்பாச்சி என்பது ஒரு வகை மரப் பொம்மை. குழந்தைகள் விளையாடுவதற்கெனக் குதிரை, யானை, ஆண், பெண் வடிவங்களில் மரப்பாச்சிப் பொம்மைகள் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்படுகின்றன.

ஓலை சார்ந்த கலைகள்

தமிழக கிராமப் பண்பாட்டுக்கும் மரபுக்கும் சிறப்பு சேர்க்கும் தொழில்களில் முதன்மையானது பனை ஓலைத் தொழில். பனை ஓலைகளால் விசிறி, கொட்டான், சுளகு, கூடை, ஓலைப் பெட்டி போன்றவற்றை உருவாக்கும் கைவினைத் தொழில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகம் நடைபெறுகிறது. குழந்தைகள் விளையாடும் கிலுகிலுப்பை, கிளி, மயில், பூனை, யானை போன்ற பொம்மைகளும் ஓலையால் உருவாக்கப்படுகின்றன.

பனை ஓலைத் தொப்பிகள், பனை நாரால் முடையப்படும் பெட்டி, கயிற்றுக் கட்டில் போன்றவை பல ஆண்டுகளுக்கு உழைக்கும் உறுதிகொண்டவை. பனை ஓலைகளுக்கு இயற்கையாகவே உள்ள உறுதியும் குளிர்ச்சியும் ஆரோக்கியமும் பனைப் பொருட்கள் விரும்பப்படுவதற்கு அடிப்படை.

கோரைப் பாய்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் இஸ்லாமியர்களால் தயாரிக்கப்படும் கோரைப் பாய்கள் உலகப் புகழ்பெற்றவை. இந்தப் பாயில் படங்கள் வரையவும் எழுத்துகளை முடையவும் தனித் திறமை வேண்டும். ஒற்றைப் பல் பாய், இரட்டைப் பல் பாய், பட்டுப் பாய் எனப்படும் திருமணப் பாய், தடுக்குப் பாய், பந்திப் பாய் எனப் பல்வேறு வகைப் பாய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தைப்பொங்கல் திருநாளின்போது புதிய பாய் வாங்கும் வழக்கம் கிராம மக்களிடம் உள்ளது. பாய் வெப்பத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது

காகிதம் சார்ந்த கலைகள்

பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், காளையாட்டம் போன்ற தமிழகத்தின் பிரபல நிகழ்த்துக் கலைகளில் குதிரை, மயில், காளை ஆகியவற்றின் கூடுகளை ஆட்டக் கலைஞர்கள் சுமந்துகொண்டு ஆடுவார்கள். இந்தக் கூடுகள் காகிதங்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

களிமண்ணைக் கொண்டு கூட்டுக்கான அச்சு முதலில் உருவாக்கப்படுகிறது. அதன்மேல் காகிதம், துணி ஒட்டப்பட்டு கலையழகுடன் வண்ணம் தீட்டப்படுகிறது. ஆட்டக் கலைஞர்கள் கூடுகளைச் சுமந்துகொண்டு நீண்ட நேரம் ஆட வேண்டியிருப்பதால், அவை அதிக எடையின்றி இருப்பதற்காக காகிதத்தால் இந்தக் கூடுகள் உருவாக்கப்படுகின்றன.

தசரா முகமூடிகள்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா புகழ்பெற்றது. இந்த விழாவுக்கான முகமூடிகளை உருவாக்கும் கலைஞர்கள் பாணர் எனப்படுகின்றனர். புராண தெய்விக அவதாரங்கள், காளி, சுடலை மாடன் போன்ற தெய்வங்கள், புலி, குரங்கு, கரடி, மாடு போன்ற முகமூடிகள் தசரா விழாவுக்காகக் காகிதத்தால் செய்யப்படுகின்றன.

இந்த வாரம்: எட்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘கலை, அழகியல், பண்பாடு’ என்ற இயலின்கீழ் ‘நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்’ என்ற உரைநடை உலகம் பகுதி.

- ஆதி, தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x