Published : 11 Sep 2019 11:05 AM
Last Updated : 11 Sep 2019 11:05 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: ஒரு மனிதனுக்குள் என்ன இருக்கிறது?

- மருதன்

எனக்கு ஏதேனும் அறிவுரை கூறுங்களேன் என்று சின்னக் குழந்தைபோல் ஒருவர் என்னை அணுகி கேட்டபோது கூச்சமாக இருந்தது. இப்படி என்னிடம் கேட்பவர்கள் இப்போது பெருகிவிட்டார்கள். விரிந்த வெண்தாடியும் உலர்ந்த உடலும் கொண்டிருப்பதால் நான் வாழ்வின் நீள அகலங்களை எல்லாம் கற்றிருப்பேன் என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. மகனே, எனக்குத் தெரிந்ததை எல்லாம் புத்தகங்களில் எழுதியிருக்கிறேனே. நீயே ஏன் படித்துக்கொள்ளக் கூடாது என்றதும் அவர் மறுத்தார். ‘ஆ, என்னால் ஆயிரக்கணக்கான பக்கங்களைப் படிக்க முடியாது டால்ஸ்டாய். நீங்கள் சொல்லுங்கள், கேட்போம்!’

ஒரு கதை சொல்லத் தொடங்கினேன். பனி பொழியும் இரவு ஒன்றில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் தன் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அவர் பெயர் சைமன். அன்று அவருக்கு வருமானம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர் முகம் வருத்தத்தில் தோய்ந்திருந்தது. இன்று இரவு நிச்சயம் நல்ல தடிமனான ஒரு தோல் ஆடையை வாங்கிக்கொண்டுதான் வீடு திரும்புவேன் என்று காலை மனைவியிடம் வாக்குறுதி அளித்திருந்ததும் நினைவுக்கு வந்தது. பாவம், மனைவி ஆசையோடு காத்துக்கொண்டிருப்பார்!

ஒரு திருப்பத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது சட்டென்று நின்றார் சைமன். தொலைவில் மரத்தடியில் ஒரு மனிதர் இரு கைகளையும் கட்டிக்கொண்டு வெடவெடவென்று குளிரில் நடுங்கியபடி நின்றுகொண்டிருந்தார். சைமன் பார்வையை விலக்கிக்கொண்டு தன் வழியில் நடக்கத் தொடங்கினார். ஆனால், மனம் கேட்கவில்லை. மீண்டும் திரும்பி வந்து அந்த மனிதரை நெருங்கினார். பதில் அளிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருந்த அவருக்குத் தன்னுடைய மேலங்கியைக் கழற்றிக் கொடுத்தார் சைமன். இப்போது அவர் நடுக்கம் சற்று குறைந்திருந்தது என்றாலும் அவர் முகத்தில் களையே இல்லை. ஓ, ஒழுங்கான ஆடைகூட இல்லாத இவர் எப்போது கடைசியாக உண்டிருப்பாரோ தெரியவில்லையே என்று முணுமுணுத்தபடி அவரையும் தன்னோடு வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சைமன்.

தன் கணவர் நடந்து வருவதை வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மத்ரியோனா சிடுசிடுத்தார். இன்றும் அவர் தோல் ஆடை வாங்கி வரவில்லை என்பதோடு, யாரையோ அழைத்துக்கொண்டும் அல்லவா வருகிறார்? உணவு உண்ணும் வேளையில் இப்படியா விருந்தினரை அழைத்து வருவது? பொருமியபடி வாசலுக்கு வந்து நின்றார். இருவரும் உள்ளே நுழையும்போது, மத்ரியோனாவின் முகம் மேலும் சுருங்கிவிட்டது. இது என்ன, இந்த சைமன் தன்னுடைய அங்கியையும் கழற்றிக் கொடுத்துவிட்டாரா? கோபத்தை அடக்கிக்கொண்டு இரண்டு தட்டுகளைக் கொண்டுவந்து வைத்தார் மத்ரியோனா. இருக்கும் ரொட்டியை இருவருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு அவர்கள் முன்பு அமர்ந்துகொண்டார். அவர் உதடுகள் ஏமாற்றத்திலும் பசியிலும் துடிக்க ஆரம்பித்தன. சைமன் அவரைக் கவனித்துவிட்டார் என்றாலும் எப்படி ஆற்றுப்படுத்தவது என்று தெரியவில்லை.

அந்த மனிதரோ எந்தக் கவலையும் இன்றித் தன் முன் வைக்கப்பட்ட தட்டை ஆர்வத்தோடு கையில் எடுத்து, ரொட்டியை விண்டு வாயில் போட்டுக்கொண்டார். அதுவரை அவரை வருத்திக் கொண்டிருந்த நடுக்கம், அந்தக் கணமே நின்றுவிட்டது. அவர் தன் கண்களை மூடிக்கொண்டார். வாயில் விழுந்த விள்ளல் அவருடைய நாவில் நெகிழ்ந்து கரைய ஆரம்பித்தது. ‘ஆஹா’ என்றார் அவர். அவருடைய கண்களின் ஓரங்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் புறப்பட்டு வருவதை மத்ரியோனா கவனித்தார். அது அவரை ஏதோ செய்தது. கோபமும் ஆற்றாமையும் இருந்த இடத்தை வேறு ஏதோ நிரப்புவதை உணர்ந்தார். கொல்லும் குளிர் விலகி, இதமான வெப்பக் காற்று அணைத்துக்கொண்டது போலிருந்தது. மத்ரியோனாவின் முகத்தில் ஒரு புன்னகை அரும்பியது.

மகனே, இந்த இடத்தில் நான் எழுதுவதை நிறுத்திவிட்டு மத்ரியோனாவின் புன்னகையைக் கவனமாகச் சேகரித்து, என் உள்ளங்கையில் வைத்துப் பரிசோதித்தேன். மத்ரியோனா ஏன் புன்னகை செய்தார்? அந்தப் புன்னகைக்கு என்ன பொருள்? நான் அதுவரை திரட்டிய அனுபவங்கள், எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், கரைத்துக் குடித்த தத்துவ விசாரணைகள், மேற்கொண்ட நீண்ட பயணங்கள், மலைபோல் சேர்த்து வைத்திருந்த செல்வம் அனைத்தையும் ஒன்று திரட்டி அந்தப் புன்னகையின் மீது பாய்ச்சினேன். என்னை அணுக இவை எதுவும் தேவை இல்லை என்றது புன்னகை. 'நான் பனியின் தூய்மை. கதிரவனின் ஒளி. மலரின் வாசம். மழையின் சிலிர்ப்பு. குழந்தையின் இதயம். உன் இரு கைகளில் என்னை அள்ளி எடுத்துப் பருகு. நான் உன்னை நிறைவு செய்வேன்.'

சைமனின் வீட்டில் ஏன் ரொட்டி இல்லை என்பதை உணர்ந்தேன். குப்பைக் கூளங்களைக் கிளறும் குழந்தைகளின் கைகளை விரித்து என் கண்களில் ஒற்றிக்கொண்டு வெடித்து அழுதேன். என் புத்தக விற்பனையிலிருந்து கிடைத்துவந்த வருமானம் அனைத்தையும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கினேன். ஓர் அடிமையின் முதுகு எப்படி வளைந்திருக்கும் என்பதை அருகில் சென்று பார்த்தபோது, என் உறக்கம் தொலைந்து போனது. வீட்டினரோடும் உறவினர்களோடும் சண்டையிட்டு, அவர்களுடைய பண்ணைகளில் இருந்த அடிமைகளை விடுவித்தேன்.

சைமனின் அங்கி என் தோளில் இன்னமும் புரண்டுகொண்டிருக்கிறது. மத்ரியோனா தன் ரொட்டியை எனக்கே கொடுத்தார். அதை விண்டு, இதோ இந்த வாயில்தான் நான் போட்டுக்கொண்டேன். என் நாவில்தான் அதைக் கரைத்துக்கொண்டேன். என் பசியைத்தான் அது போக்கியது. என் கண்களில் இருந்துதான் கண்ணீர் உருண்டோடி வந்தது. மத்ரியோனா புன்னகை செய்தது என்னைப் பார்த்துதான். நத்தைப்போல் சுருங்கிக் கிடந்த என் இதயத்தைக் கடல் அளவுக்கு விரித்தது அந்தப் புன்னகைதான்.

அந்தப் புன்னகைக்குள் தோய்த்துத் தோய்த்துதான் என் ஒவ்வொரு சொல்லையும் எழுதுகிறேன். அதுவே என்னுடைய கைவிளக்கு. அதுவே என் இருப்பு. மகனே, உணர்ந்ததால் சொல்கிறேன். மத்ரியோனாவின் ரொட்டியைவிடவும் சுவையானது இந்த உலகில் வேறு இல்லை. உலகிலுள்ள அனைவருடைய பசியையும் போக்கும் வல்லமை கொண்ட அந்த ரொட்டித் துண்டை உன்னோடு பகிர்ந்துகொள்கிறேன். அதை ஒவ்வொரு மனிதனுக்கும் கொண்டுசெல். மத்ரியோனாவின் புன்னகை உன்னை நிறைக்கட்டும்.

(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x