Published : 11 Sep 2019 10:55 AM
Last Updated : 11 Sep 2019 10:55 AM
- மு. நடராசன்
உற்சாகமாகவும் கம்பீரமாகவும் நடந்து வந்துகொண்டிருந்த முயலைக் கண்டதும் நரிக்கு எச்சில் ஊறியது. வேகமாக முயலை நோக்கி நடந்தது. நரி வருவதைப் பார்த்தும் முயல் ஓடவில்லை.
“கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு” என்று பாட ஆரம்பித்த முயலைப் பார்த்து நரிக்கு ஆச்சரியமாக இருந்தது.
“என்னைப் பார்த்துக் கிண்டல் பண்றீயா?”
“ஐயையோ… நான் உங்களைப் பார்த்துப் பாடவில்லை. என் கரடி அண்ணாவை நினைத்துப் பாடிக்கொண்டு வந்தேன்” என்றது முயல்.
“என்ன சொன்னாய்? கரடி உனக்கு அண்ணனா? கதை விடறீயா? அதைப் பார்த்தாலே ஓட்டம் எடுப்பாய். நீ கரடி அண்ணா என்றதும் நான் பயந்துவிடுவேன் என்று பார்த்தாயா?”
”நான் ஏன் உங்களை மிரட்ட வேண்டும்? நீங்கள் மிகவும் புத்திசாலி.”
“என்ன மீண்டும் கிண்டலா? ஆமையிடம் தோல்வியுற்ற பரம்பரையில் வந்துவிட்டு, என்ன பேச்சுப் பேசறே?”
“அதெல்லாம் எங்க தாத்தாவுக்கும் தாத்தாவுக்கும் தாத்தா காலத்தில் நடந்த கதை. அவர் உடல்நிலை சரியில்லாததால் சற்று ஓய்வு எடுத்தார். அது தவறாகிவிட்டது. அதையே இன்னும் எத்தனை காலத்துக்குச் சொல்லிக் கொண்டிருப்பீங்க?” என்ற முயல் ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்தபடி, “ச்சீ… ச்சீ… இந்தப் பழம் புளிக்கும்” என்று சொல்லிவிட்டு, பழத்தைக் கீழே போட்டது.
முன்னெச்சரிக் கையோடு இருந்த முயல், நரி அடிக்க வந்தபோது முன்னங்கால்களால் முகத்தில் தாக்கியது. இதை எதிர்பார்க்காத நரி, நிலை தடுமாறி விழுந்தது.
முயல் வேகமாக ஓடி மறைந்தது.
“சே… நல்ல பசி. முயலிடம் பேசாமல் காரியத்தைச் சாதித்திருக்கலாம். இப்போது அடியும் வாங்கி, பசியும் வந்துவிட்டது” என்று புலம்பியது நரி.
அப்போது அங்கு வந்த ஓநாய், “என்ன அண்ணா, அடிபட்டுவிட்டதா?” என்று கேட்டது.
“அப்படி எல்லாம் இல்லை தம்பி.”
”முயல் அடித்ததை நான் பார்த்தேன். நானே அடித்திருப்பேன். ஆனால், முயல் இப்போது கரடியின் நண்பனாக இருக்கிறது. அதனால்தான் அதை விட்டு வைத்திருக்கிறேன்.”
அப்படி என்றால் முயல் சொன்னது உண்மைதான். முயலும் கரடியும் எப்படி நண்பர்களாக இருக்க முடியும் என்று யோசித்தது நரி. ஓநாயிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பியது.
வீட்டுக்குச் சென்ற முயல், நடந்த விஷயத்தை அம்மாவிடம் கூறியது.
“நரி இனிமேல் சும்மா இருக்காது. இனி நாம் கவனமாக இருக்க வேண்டும்” என்றது அம்மா முயல்.
மறுநாள் அம்மாவுடன் தோட்டத்தில் அமர்ந்து கேரட்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது முயல். அந்தப் பக்கம் வந்த நரி, ’அடடா! இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி பழி தீர்த்துவிடலாம்’ என்று எண்ணிக்கொண்டு மெதுவாக முயல்களை நோக்கி வந்தது.
சட்டென்று நிமிர்ந்த முயல், “அம்மா, ஆபத்து. நரி வந்துகொண்டிருக்கிறது” என்று மெதுவாகச் சொன்னது.
“கண்டுகொள்ளாத மாதிரி கேரட்களைச் சாப்பிடுவோம். நரி நம் மீது பாயும்போது சட்டென்று விலகிவிடணும்” என்றது அம்மா முயல்.
அருகில் வந்த நரி மகிழ்ச்சியோடு வேகமாகப் பாய்ந்தது. இரு முயல்களும் விலகிவிட, தலை குப்புற விழுந்தது நரி. அது சுதாரிப்பதற்குள் முயல் அதன் மீது ஏறி நான்கு குத்துகளை விட்டது. முயலால் எப்படிச் சண்டை போட முடிகிறது என்று யோசித்தது நரி.
“சபாஷ். சிறப்பாகச் சண்டை போடுகிறாய். நான் கற்றுக் கொடுத்தது வீண் போகவில்லை. இனி யாருக்கும் நீ பயந்து ஓட வேண்டிய அவசியம் இல்லை” என்றபடியே வந்து நின்றது கரடி.
“என்ன நரி, என்ன முழிக்கிறாய்? இந்த முயலுக்கு எப்படி நண்பனானேன் என்று யோசிக்கிறாயா? ஒரு நாள் புலி என்னைத் தாக்க வரும்போது, புலியின் கவனத்தை திசைத் திருப்பி இந்த முயல்தான் என் உயிரைக் காப்பாற்றியது. என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல், தன்னிடம் வலிமை இல்லாவிட்டாலும் என் உயிரைக் காப்பாற்றிய முயலின் நல்ல எண்ணத்தை நினைத்து ஆச்சரியப்பட்டேன்.
அன்று முதல் நானும் முயலும் நண்பர்களாக மாறிவிட்டோம். பகை வளர்த்து என்ன சாதித்தோம்? எல்லோரிடமும் நட்பு பாராட்டி, அன்பாக வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகத் தோன்றியது. அன்று முதல் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். நீயும் முயற்சி செய்து பார்” என்று சொல்லிவிட்டு, நரியைத் தூக்கி நிறுத்தியது கரடி.
“நீங்கள் இருவரும் என்னையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்வீர்களா?” என்று ஏக்கத்தோடு கேட்டது நரி.
“நீ என்ன, அந்தப் புலியே நண்பனாக வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்” என்றன கரடியும் முயலும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT