Last Updated : 01 Jul, 2015 02:16 PM

 

Published : 01 Jul 2015 02:16 PM
Last Updated : 01 Jul 2015 02:16 PM

டாம் மாமாவின் கதை

ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் நினைவு நாள்: ஜூலை 1

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் இருந்த ஒரு பண்ணையில் ஆர்தர் ஷெல்பி என்பவரிடம் வேலை பார்த்துவந்தார் டாம். ஆர்தர் ஷெல்பியின் மகன் ஜார்ஜ் ஷெல்பிக்கு டாம் மாமா என்றால் ரொம்பப் பிடிக்கும். எப்போதும் அவருடன்தான் அவனுக்கு விளையாட்டு.

அப்போது, டாம் மாமாவையும் எலிசா என்ற ஆப்பிரிக்கப் பெண்ணின் குழந்தையான ஹாரியையும் விற்கத் திட்டமிடுகிறார் ஆர்தர் ஷெல்பி. விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உருவான கடனை அடைப்பதற்காக அவர் இப்படி முடிவெடுக்கிறார்.

அமெரிக்காவில் 17-ம் நூற்றாண்டிலிருந்து ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டு வேலை செய்யப் பயன்படுத்தப்பட்டார்கள். அடிமைகள் என்றால், வெள்ளை முதலாளி தன்னிடம் உள்ள ஆடு, மாடு, குதிரையைப் போல ஆப்பிரிக்க மக்களையும் பொருட்களைப் போலக் கூவிக்கூவி விற்பார், தேவைப்படுபவர்கள் வாங்கிக்கொள்வார்கள்.

தப்பித்த எலிசா

ஆர்தர் ஷெல்பியும் அவருடைய மனைவி எமிலி ஷெல்பியும் வேலைக்காரர்களுடன் நல்ல உறவைப் பராமரித்தாலும், டாம் மாமாவையும் சிறுவன் ஹாரியையும் ஓர் அடிமை வியாபாரியிடம் விற்பது பற்றி பேசுகிறார் ஆர்தர். குழந்தை ஹாரியை விற்க மாட்டோம் என்று எமிலி ஷெல்பி வாக்குறுதி கொடுத்திருந்தாலும், அதை மீறி இந்த முடிவை எடுக்கிறார் ஆர்தர்.

தனது மகன் ஹாரி விற்கப்படுவது குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ளும் எலிசாவால், இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படித் தன் சிறு குழந்தையைப் பிரிய முடியும்? அன்று இரவே தன் மகனுடன் எலிசா தப்பிச் செல்கிறார்.

புது நட்பு

ஆனால், டாம் மாமாவை விற்க எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அவர் அடிமை வியாபாரியிடம் விற்கப்படுகிறார். விற்கப்பட்ட பிறகு மிசிசிபி நதி வழியாகவே படகில் கூட்டிச் செல்லப்படுகிறார். அப்போது ஈவா என்ற சிறுமியுடன் நட்பாகிறார். பயணத்தின்போது, திடீரென்று படகில் இருந்து ஆற்றுக்குள் விழுந்துவிடுகிறாள் ஈவா. அப்போது எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனடியாகத் தண்ணீருக்குள் குதித்து, அவளைக் காப்பாற்றுகிறார் டாம் மாமா.

ஈவாவின் வற்புறுத்தலால் அவளுடைய அப்பா செயின்ட் கிளேர், டாம் மாமாவை வாங்கிக்கொள்கிறார். டாம் மாமாவுக்கும் ஈவாவுக்கும் இடையிலான நட்பு வலுவடைகிறது. டாம் மாமாவுக்குக் கடிதம் எழுதுவதற்கெல்லாம் ஈவா உதவுகிறாள்.

மீறப்பட்ட வாக்குறுதி

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்போது, ஈவாவுக்கு காசநோய் ஏற்பட்டு காசநோய் கடுமையாகிறது. இறந்ததற்குப் பிந்தைய உலகம் எப்படியிருக்கும் என்றெல்லாம் ஈவா விவரிக்க ஆரம்பித்துவிடுகிறாள். அப்போது அடிமைத் தளையிலிருந்து டாமை விடுவிக்க உறுதி எடுத்துக்கொள்கிறார் ஈவாவின் அப்பா செயின்ட் கிளேர்.

ஆனால், தான் எடுத்துக்கொண்ட உறுதியை நிறைவேற்றும் முன்பே, ஒரு விடுதிக்கு முன் நடந்த பிரச்சினையில் கத்தியால் குத்தப்பட்டுச் செயின்ட் கிளேர் இறந்துபோகிறார். அவரது மனைவியோ வாக்குறுதியைப் பற்றி கவலைப்படாமல், சைமன் லெக்ரீ என்ற பண்ணை முதலாளியிடம் டாம் மாமாவை விற்றுவிடுகிறார்.

கொடுமைக்கார முதலாளி

அனுபவம் வாய்ந்த அடிமையான டாமை, வேறு வேலைகளில் ஈடுபடுத்த நினைக்கிறார் லெக்ரீ. எந்த வேலை கொடுத்தாலும் சுறுசுறுப்பாகச் செய்து முடித்துவிடும் டாம், மற்ற அடிமைகளைச் சாட்டையால் அடிக்கச் சொல்லும்போது மட்டும் மறுக்கிறார். அத்துடன், மற்ற அடிமைகளுக்கு ஆதரவாகவும் இருக்கிறார். இதன் காரணமாகக் கொடுமைக்கார முதலாளி லெக்ரீ, டாமை வெறுக்கிறார்.

லெக்ரீயும் அவருடைய கையாட்களும் டாம் மாமாவை அடித்து உதைக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வலியையும் வேதனையையும் சகித்துக்கொண்டே பைபிள் படிக்கிறார் கடவுள் நம்பிக்கை கொண்டவரான டாம் மாமா. சாகும்வரை தன்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ளக் கூடாது என்பதில் அவர் தீர்மானமாக இருக்கிறார்.

டாம் மாமாவின் முடிவு

அதற்குப் பிறகு கேஸி, எமலின் என்ற இரண்டு பெண் அடிமைகள், லெக்ரீயின் பண்ணையிலிருந்து தப்பிப் போக டாம் மாமா ஊக்குவிக்கிறார். அவர்கள் இருவரும் தப்பித்து எங்கே போனார்கள் என்பதை அறிந்துகொள்ள லெக்ரீயும் அவருடைய கையாட்களும் டாம் மாமாவைக் கொடுமைப்படுத்துகிறார்கள். ஆனால், அவர் எதுவும் சொல்ல மறுக்கிறார்.

கடைசியாக டாம் மாமாவைக் கொன்றுவிடும்படி, தனது கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடுகிறார் லெக்ரீ. கண்காணிப்பாளர்கள் இருவரும் ஆப்பிரிக்கர்களாக இருந்தும் முதலாளி இட்ட உத்தரவை நிறைவேற்ற டாம் மாமாவை அடிக்கிறார்கள். அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத டாம் மாமா, அவர்களை மன்னித்தும் விடுகிறார். அவரது பெருந்தன்மையையும், தங்களுடைய நிலையையும் நினைத்து அவர்கள் வருந்துகிறார்கள்.

ஜார்ஜ் வருகை

டாம் மாமாவின் குட்டி நண்பனான ஜார்ஜ் ஷெல்பி, பெரியவனாகி வளர்ந்த பிறகு பல ஊர்களில் தேடிக் கடைசியாக டாம் மாமாவைக் கண்டுபிடித்து விடுதலை செய்ய வருகிறான். ஆனால், டாம் மாமா இறந்துபோவதைத்தான் அவனால் பார்க்க முடிகிறது.

டாம் மாமாவின் இறப்பால் பெரிதும் வருந்தும் ஜார்ஜ் ஷெல்பி, தனது கென்டகி பண்ணைக்குத் திரும்பி, அங்கிருக்கும் அடிமைகள் அனைவரையும் விடுதலை செய்கிறான். டாம் மாமாவின் தியாகத்தை அனைவரும் மறந்துவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறான்.

- ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் எழுதிய ‘அங்கிள் டாம்ஸ் கேபின்' நாவலின் கதைச் சுருக்கம்.

அதிகம் விற்ற நாவல்

பதினெட்டாம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்குக் கறுப்பின அடிமைகள் அதிக எண்ணிக்கையில் கொண்டுசெல்லப்பட்டனர். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்கூடக் கறுப்பின அடிமைத்தன இழிவு பற்றி அமெரிக்கர்களிடையே குறைந்தபட்ச விழிப்புணர்வே ஏற்பட்டிருந்தது.

கறுப்பின அடிமைகள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியும், வெள்ளையர்களின் நடவடிக்கைகள் எப்படி அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்றன என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் ஹாரியட் பீச்சர் ஸ்டோவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. கறுப்பின அடிமைகள் பற்றிய அவர் எழுதிய 'அங்கிள் டாம்ஸ் கேபின்' நாவல்தான் இப்பிரச்சினையை முதன்முதலில் பேசியது.

வெளியாகி ஒரே ஆண்டில் 3 லட்சம் பிரதிகள் விற்றது, அந்த நூற்றாண்டில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையான புத்தகம் இது. அதற்குப் பிறகு அடிமைத்தனத்தை ஒழிப்பது தொடர்பான கருத்து வேற்றுமையில் அமெரிக்க உள்நாட்டு போர் வெடித்தது. இந்த நாவல் 35-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x