Published : 01 Jul 2015 12:30 PM
Last Updated : 01 Jul 2015 12:30 PM

மனிதர்களைக் காக்கும் கூண்டு

விளையாட்டு மைதானத்தில் விளையாடும்போது இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தால் என்ன செய்வீர்கள்? பாதுகாப்புக்காக மரத்தடிக்குச் செல்வீர்கள். ஆனால், அந்த நேரத்தில் மரத்தடியில் நிற்கக் கூடாது என்று உங்களுக்குப் பலரும் அறிவுரை சொல்லியிருப்பார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது.

சரி, இடியுடன் சேர்ந்து மழையும் பெய்யும்போது கார், பேருந்துக்குள் ஏறி அமர்ந்துகொண்டால் பாதுகாப்பானதா? அதைத் தெரிந்து கொள்ளச் சோதனையைச் செய்து பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

செவ்வக வடிவக் கம்பி, வலைக்கூண்டு

பாக்கெட் ரேடியோ

பிளாஸ்டிக் டப்பா

எவர்சில்வர் டிபன்பாக்ஸ்.

சோதனை:

1. கம்பி வலையால் ஆன கதவுடன் கூடிய செவ்வகக் கூண்டு ஒன்றைத் தயார் செய்துகொள்ளுங்கள். இல்லையென்றால் பறவைகளை வளர்க்கப் பயன்படும் கூண்டு போதும்.

2. பாக்கெட் ரேடியோவை ஆன் செய்து பாடல் கேட்கும்படி செய்து கொள்ளுங்கள்.

3. பாடிக்கொண்டிருக்கும் ரேடியோவைக் கூண்டுக்குள் வைத்துக் கதவை மூடிவிடுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். பாடிக் கொண்டிருந்த ரேடியோவில் இருந்து சத்தம் வராது.

4. கூண்டிலிருந்து ரேடியோவை வெளியே எடுத்து விட்டால் ரேடியோவில் இருந்து மீண்டும் பாட்டொலி கேட்கும். மீண்டும் ரேடியோவைக் கூண்டுக்குள் வைத்தால் பாட்டு கேட்காது. இதற்கு என்ன காரணம்?

நடப்பது என்ன?

உலோகத்தில் கன செவ்வகத்தில் செய்யப்பட்ட கூண்டை ஃபாரடே கூண்டு என்று சொல்வார்கள். அதில் ஆறு பக்கங்களிலும் சம இடைவெளியில் கம்பி வலைகள் கட்டப்பட்டிருக்கும். இது ஒரு மூடிய பரப்பைக் கொண்ட கூண்டு. இதுபோன்ற கூண்டுகளில் 1836-ம் ஆண்டில் மைக்கேல் ஃபாரடே ஆய்வு செய்ததால் இதற்கு ஃபாரடே கூண்டு என்று பெயர். இக்கூண்டில் உள்ள கம்பிகள் மின் கடத்தியாகச் செயல்படுகின்றன. வானொலி நிலையத்தில் இருந்து வரும் ரேடியோ அலைகள் மின்காந்த அலைகள் ஆகும். மின்புலங்களும் காந்தப்புலங்களும் பிணைக்கப்பட்ட அலைகளே மின்காந்த அலைகள்.

இந்த அலைகள் கூண்டைத் தாக்கும்போது கம்பிகளில் மின்னோட்டம் தோன்றிக் கம்பிகளில் உள்ள எலெக்ட்ரான்களை மறு ஒழுங்கு செய்து மின்கடத்தியின் உள்ளே மின்னூட்டங்களை இடப்பெயர்ச்சி செய்ய வைக்கின்றன. இதனால் கூண்டினுள் உள்ள மின்புலம் போய்விடுகிறது.

இதேபோல மாறும் காந்தப்புலங்கள் சுழல் மின்னோட்டங்களை ஏற்படுத்திக் காந்தப்புலத்தையும் நீக்கிவிடுகிறது. நிலையான காந்தப்புலங்கள் மின் கடத்திகளை எளிதாக ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டது. எனவே மின்காந்த அலைகள் மூடப்பட்ட கடத்தியில் படும்போது, உள்ளே இருக்கும் மின்புலங்கள் கூண்டை விட்டு வெளியே வர முடியாது.

இதேபோன்று இருக்கும் மின்காந்தப் புலங்கள் உள்ளே செல்லவும் முடியாது. எனவே வெளியிலிருந்து வரும் மின் காந்தப்புலங்கள் தடுக்கப்படுகின்றன. ஃபாரடே கூண்டு மின்காந்தத் தடுப்பு உறையாகிச் செயல்படுவதால் வானொலி நிலையத்திலிருந்து வரும் ரேடியோ அலைகள் கூண்டுக்குள் செல்ல முடிவதில்லை.

எந்த மின்காந்தப் புலமும் கூண்டுக்குள் இருக்கும் ரேடியோவையும் சென்றடைவதில்லை. இதனால்தான் ரேடியோவிலிருந்து பாட்டொலி கேட்பதில்லை. (கூண்டில் உள்ள உலோகக் கம்பிகளின் இடைவெளி மின்காந்த அலைகளின் அலை நீளத்தைவிட சிறியதாக இருக்க வேண்டும். இதுவே ஃபாரடே கூண்டு அமைப்பதற்கான நிபந்தனை).

5. இதே சோதனையைச் சற்று மாற்றி செய்து பார்ப்போமா? உலோகக் கம்பியால் ஆன கூண்டுக்குப் பதிலாக ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக்கொள்ளுங்கள். பாக்கெட் ரேடியோவைப் பிளாஸ்டிக் டப்பாவுக்குள் வைத்தால் பாட்டொலி கேட்குமா? ரேடியோவிலிருந்து பாட்டொலி நிச்சயம் வரும். ஏனென்றால், பிளாஸ்டிக் டப்பா மின்கடத்தா பொருள். எனவே மின்காந்த அலைகள் நேரடியாக டப்பாவை ஊடுருவி உள்ளிருக்கும் ரேடியோவை அடைவதால் பாட்டொலி கேட்கிறது. எனவே பிளாஸ்டிக் டப்பா ஒரு ஃபாரடே கூண்டாகச் செயல்படுவதில்லை.

6. பிளாஸ்டிக் டப்பாவுக்குப் பதிலாக ஒரு எவர்சில்வர் டிபன் பாக்ஸுக்குள் ரேடியோவில் பாடலை ஆன் செய்து உள்ளே வைத்து மூடிவிடுங்கள். இப்போதும் பாட்டொலி கேட்காது. ஏனென்றால், எவர்சில்வர் டிபன்பாக்ஸ் ஒரு மூடப்பட்ட உலோக ஃபாரடே கூண்டாகச் செயல்படுவதால் மின் காந்த அலைகள் (ரேடியோ அலை) டிபன் பாக்ஸுக்குள் உள்ள ரேடியோக்குள் சென்றடைவதில்லை.

பயன்பாடு

விளையாடிக் கொண்டிருக்கும் போது இடி மின்னலும் கூடிய மழை பெய்தால், அருகில் உள்ள கார் அல்லது பேருந்துக்குலிருப்பதே பாதுகாப்பானது. வானொலி நிலையத்திலிருந்து வரும் ரேடியோ அலைகள் இடி மின்னலின்போது ஏற்படும் மின்புலங்களாகவும் கம்பி வலையால் ஆன கூண்டை கார் அல்லது பேருந்தாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

சோதனையில் பார்த்ததுபோல வானொலி நிலையத்திலிருந்து வரும் மின்காந்த அலைகளை உலோகக் கூண்டு தடுத்துவிடுகிறது அல்லவா? அதேபோன்று மின்னலில் இருந்து வரும் அதிக மின்னழுத்தம் கொண்ட மின்புலங்களை உலோகத்தால் செய்யப்பட்ட கார் அல்லது பேருந்து, ஃபாரடே கூண்டாகச் செயல்பட்டு உள்ளே வர விடாமல் தடுத்துவிடுகிறது. எனவே இடி மின்னலிலிருந்து காத்துக்கொள்ள உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு மூடப்பட்ட அறைக்குள் இருப்பதே சிறந்த வழி.

இடி மின்னலின்போது குடையைப் பிடித்து செல்வது, வெட்டவெளியில் ஓடுவது அல்லது மரத்துக்கு அடியில் ஒளிந்துகொள்வது ஆபத்தை விளைவிக்கும். இந்தச் சோதனையில் பாக்கெட் ரேடியோக்குப் பதிலாகச் செல்போனைப் பயன்படுத்தி, என்ன நடக்கிறது என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புக்கு: aspandian59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x