Published : 10 Jun 2015 01:19 PM
Last Updated : 10 Jun 2015 01:19 PM

அடடே அறிவியல்: தண்ணீரைத் தெளிக்கும் காற்று

முடி வெட்டிக் கொள்வதற்காக அப்பாவுடன் சலூனுக்குப் போயிருக்கிறீர்களா? அங்கு முடி வெட்டுவதற்கு முன்னால் பாட்டிலில் உள்ள தண்ணீரைத் சலூன்காரர் தலையில் பீய்ச்சியடிப்பதையும் பார்த்திருப்பீர்கள். அந்தத் தண்ணீர் அடிக்கும் தெளிப்பான் எப்படி வேலை செய்கிறது தெரியுமா? அதைத் தெரிந்துகொள்ள ஒரு சோதனை இருக்கிறது. செய்து பார்ப்போமா?

தேவையான பொருள்கள்:

காற்று ஊதி, பிளாஸ்டிக் டப்பா, ஒளி ஊடுருவும் தாள், சிறிய அளவு தெர்மாகோல் உருண்டைகள்.

சோதனை:

1. வாய் அகன்ற பிளாஸ்டிக் டப்பாவில் சிறிய தெர்மாகோல் உருண்டைகளைக் கொண்டு நிரப்புங்கள்.

2. ஒளி ஊடுருவும் தாளை உருட்டி உருளை வடிவக் குழாயாகச் செய்து பசை டேப்பால் ஒட்டிக்கொள்ளுங்கள்.

3. இப்போது அந்தக் குழாயை டப்பாவில் உள்ள தெர்மாகோலில் உருண்டைகளுக்குச் சற்று மேலே இருக்குமாறு செங்குத்தாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

4. குழாயின் மேல் முனைக்குச் சற்று மேலே காற்று ஊதியைக் கிடைமட்டமாக வைத்துக்கொள்ளுங்கள்.

5. காற்று ஊதிக்கு மின் இணைப்பு கொடுத்துச் சுவீட்சைப் போட்டுக் காற்றைச் செலுத்துங்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள தெர்மாகோல் உருண்டைகள் உருளை வடிவக் குழாய் வழியாக மேலேறிப் பறக்கும் கண்கொள்ளா காட்சியைக் காணலாம். டப்பாவில் உள்ள தெர்மாகோல் உருண்டைகள் குழாய் வழியாக மேலேறி எப்படிச் சிதறுகின்றன?

நடப்பது என்ன?

ஒரு வாயு அல்லது திரவம் எங்கே வேகமாகப் பாய்கிறதோ அங்கு அழுத்தம் குறையும். இதுவே பெர்னோலி தத்துவம். நமது சோதனையில் காற்று ஊதியினால் குழாயின் மேல் முனை அருகே காற்றைக் கிடைமட்டமாகச் செலுத்தும்போது காற்றின் திசைவேகம் அப்பகுதியில் அதிகமாக இருப்பதால் பெர்னோலி விதிப்படி அங்குக் காற்றழுத்தம் குறைகிறது. குழாயின் கீழ் முனையில் வளிமண்டலக் காற்றழுத்தம் மேல் முனையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

பொதுவாகக் காற்றழுத்தம் அதிகமான பகுதியிலிருந்து அழுத்தம் குறைந்த இடத்தை நோக்கிச் செல்லும். மேல் முனையில் உள்ள குறைந்த காற்றழுத்தத்தைச் சமப்படுத்தக் கீழ் முனையில் உள்ள வளிமண்டலக் காற்று மேல் முனை நோக்கிச் செல்லும்.

அப்படிச் செல்லும்போது டப்பாவில் உள்ள தெர்மாகோல் உருண்டைகளையும் சேர்த்து இழுத்துச் செல்கிறது. தெர்மாகோல் பந்துகள் மேல் முனைக்கு வந்தவுடன் காற்று ஊதியில் இருந்து வரும் காற்றினால் பந்துகள் வீசியடிக்கப்படுகின்றன.

பயன்பாடு

சலூனில் நீர்த் தெளிப்பானில் ஒரு பாட்டிலில் நீர் இருக்கும். பாட்டிலின் மேல் முனையில் கிடைமட்டமாக நீரைத் தெளிக்க இரு சிறிய குழாயும் விசைவில்லும் பொருத்தப்பட்டிருக்கும். நுண் குழாயோடு செங்குத்தாக மற்றொரு குழாய் நீரில் மூழ்கியிருக்குமாறு இணைக்கப்பட்டிருக்கும்.

நமது சோதனையில் செங்குத்தாக உள்ள ஒளி ஊடுருவும் குழாயைத் தெளிப்பானில் உள்ள செங்குத்து இணைப்புக் குழாயாகவும் டப்பாவில் உள்ள தெர்மாகோல் பந்துகளைத் தண்ணீராகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள். சோதனையில் காற்று ஊதியின் மூலம் கிடைமட்டமாகக் காற்றை அடித்தால் டப்பாவில் உள்ள தெர்மாகோல் பந்துகள் செங்குத்து குழாய் வழியாக மேலேறி அதிவேகத்துடன் வீசி அடிக்கப்படுவதைப் பார்த்தோம் அல்லவா?

அதேபோல நீர்த் தெளிப்பானில் உள்ள விசைவில் எனப்படும் (Trigger) பொத்தானை அழுத்தினால் நுண்குழாய் வழியாகக் காற்று அதிவேகத்துடன் வெளியேறும். இதனால் நுண் குழாய்ப் பகுதியில் பெர்னோலி விதிப்படி காற்றழுத்தம் குறையும்.

இந்தக் காற்றழுத்தத்தைச் சமப்படுத்த வளிமண்டலக் காற்று பாட்டிலில் உள்ள நீரை அழுத்துவதால் செங்குத்தாக இணைப்புக் குழாய் வழியாக மேலேறி நுண்குழாய் வழியாக வரும். அப்படி வரும்போது தண்ணீர் புஸ்...புஸ்... என்று தெளிக்கப்படுகிறது. சலூனில் நீர் தெளிப்பான் எப்படி வேலை செய்கிறது என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே!

படங்கள்: அ. சுப்பையா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x