Last Updated : 17 Jun, 2015 12:44 PM

 

Published : 17 Jun 2015 12:44 PM
Last Updated : 17 Jun 2015 12:44 PM

வீட்டுக்குப் போக விரும்பாத மாணவர்கள்

கீஜுபாய் பாதேக்கா நினைவு நாள்: ஜூன் 23

உங்கள் பள்ளிக்கு நாளை ஒரு புது ஆசிரியர் வரப்போகிறார். உடனே அவர் எப்படி இருப்பார், எப்படிப் பாடம் நடத்துவார், கண்டிப்பானவராக இருப்பாரோ... என்றெல்லாம் உங்கள் மனதுக்குள் ஓடும், இல்லையா? குஜராத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு, அப்படி ஒரு புதிய ஆசிரியர் வந்தார்.

மாணவர்கள் நினைத்ததற்கு மாறாக, அவருடைய மனதில் ஒரு புதிய திட்டம் இருந்தது. வகுப்பை அமைதியாக வைத்திருக்க வேண்டுமென்பது அவருடைய முதல் நோக்கம். அதேநேரம், பாடத்தை சுவாரசியமாகச் சொல்லித்தர வேண்டும், மாணவர்களைத் தன் பால் ஈர்க்க வேண்டுமென்றும் அந்த ஆசிரியர் விரும்பினார்.

இதென்ன ஆச்சரியமாக இருக்கிறது, ஒரு பக்கம் வகுப்பறை அமைதியாக இருக்க வேண்டுமென இந்த ஆசிரியர் எதிர்பார்க்கிறார். மற்றொரு புறம் பாடத்தை சுவாரசியமாகச் சொல்லித்தர வேண்டுமென்றும் நினைக்கிறரே, இரண்டும் எப்படி நடக்கும் அதை நடத்திக் காட்டியவர் கீஜுபாய் பாதேக்கா.

அமைதி விளையாட்டு

பள்ளியில் காலை முதல் மணி அடித்தது. கீஜுபாயின் இதயம் படபடவென அடிக்க ஆரம்பித்தது. வழக்கமாக வகுப்பறைக்குச் செல்லும் மாணவர்களுக்குத்தான், முதல் நாள் வகுப்பறைக்குச் செல்லும் முன் படபடவென இருக்கும். இங்கே ஆசிரியருக்கே அப்படி இருந்தது. இது இன்னொரு ஆச்சரியம்.

முதல் நாளிலேயே, அமைதி விளையாட்டு என்ற புதிய விளையாட்டை அவர் அறிமுகப்படுத்தினார். வகுப்பறையில் அமைதியாக இருக்கச் சொல்லும் விளையாட்டு அது. அதற்குப் பிறகு வேறு பாடம் எதுவும் நடத்தவில்லை. அன்றைக்கு மாணவர்களுக்கு லீவு கொடுத்தார்.

தோல்விக்குக் கவலையில்லை

ஆனால், இந்த இரண்டுமே அவருக்குப் பெரிதாகப் பலனளிக்கவில்லை. முதல் நாளே அப்படித் தோல்வி கிடைத்ததற்குக் கீஜுபாய் கவலைப்படவில்லை. ‘அந்த மாணவர்களுக்குப் பள்ளி பிடிக்காமல் இருந்ததே இதற்குக் காரணம், அதனால்தான் பாடம் நடத்தவில்லை என்றால் சந்தோஷப்படுகிறார்கள்.

முதலில் இந்த மாணவர் களுடன் நல்ல புரிதலை ஏற்படுத்திக்கொள்வோம். அதன் பிறகு நான் சொல்வதை நிச்சயம் அவர்கள் கேட்பார்கள். இவர்களுக்குப் பள்ளியைப் பிடிக்க வைக்க வேண்டும்' என்று கீஜுபாய் நினைத்தார். இந்த ஆசிரியர் ரொம்ப வித்தியாசமானவரா இருக்கார், இல்லையா?

கதைதான் பாடம்

இன்றைக்கு நாடு முழுவதும் பிரபலமாக உள்ள மாண்டிசோரி எனப்படும் கல்வி முறைப்படி, 95 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கற்பித்தவர் அவர். எல்லாப் பாடத்தையும் கதை மாதிரிப் படித்துவிட்டால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும், மறக்கவும் மறக்காது. அந்த முறையைத்தான் கீஜுபாய் பின்பற்றினார்.

முதல் நாள் வகுப்புக்குள் நுழைந்தபோது கூச்சலும் சத்தமுமாக இருந்த வகுப்பறை, அவர் கதை சொல்ல ஆரம்பித்த சில நாட்களிலேயே தலைகீழாக மாறியது. தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தங்கள் வகுப்புகளிலும் கதை சொல்லுமாறு மற்ற ஆசிரியர்களிடம் மாணவர்கள் வற்புறுத்த ஆரம்பித்தனர். கீஜுபாயின் மாணவர்களோ பள்ளிக்குத் தினசரி வருவதை விரும்ப ஆரம்பித்ததார்கள். வகுப்பறை முடிந்த பிறகுகூட, அவரிடம் கதை சொல்ல வற்புறுத்தினார்கள்.

வகுப்பு நூலகம்

பாடப் புத்தகங்கள் வழியாகப் பாடத்தைப் போதிக்காமல் வகுப்பறைக்கு ஒரு நூலகத்தை ஏற்படுத்தி, அதிலிருக்கும் புத்தகங்கள் வழியாகப் பாடம் நடத்தத் தொடங்கினார் கீஜுபாய். குழந்தைகளே கதை படிக்கும் முறை, கதை சொல்லும் முறை போன்றவற்றைப் பிரபலப்படுத்தினார்.

கதை தவிர விளையாட்டு, நாடகம் மூலமாகவும் பாடம் நடத்தினார். அதன் மூலம் உடல் வளர்ச்சி மட்டுமல்லாமல், விதிமுறைகளின்படி நடக்கும் ஒழுங்குமுறையும் குழுவாகச் செயல்படும் தன்மையும் மாணவர்களிடம் இயல்பாக வளர்ந்தன.

வழக்கறிஞர்

இத்தனையையும் செய்த கீஜுபாய் பாதேக்காவின் நிஜப் பெயர் கிரிஜாசங்கர் பகவான்ஜி பாதேக்கா.

குஜராத் சௌராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த அவர், குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணிபுரிந்துவந்தார். 1923-ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவனுக்குப் பயிற்றுவிப்பதற்காக மாண்டிசோரி கல்வி முறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

மாண்டிசோரி கல்வி முறையை உருவாக்கிய மரியா மாண்டிசோரி இந்தியாவுக்கு வந்திருந்தபோது, பயிலரங்குகளில் பங்கேற்ற அவர், அந்தக் கல்வி முறையை நாடு முழுவதும் பிரபலப்படுத்த உதவினார்.

பகல் கனவு

பிற்காலத்தில் பால மந்திர் என்ற ஆரம்பக் கல்வி நிலையத்தையும், பாவ்நகரில்  தட்சிணாமூர்த்தி வினய் மந்திர் என்ற மேல்நிலைப் பள்ளியையும் மாண்டிசோரி முறைப்படி நடத்திவந்தார். 200-க்கும் மேற்பட்ட குழந்தைப் புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

தன்னுடைய மாண்டிசோரி அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, ‘பகல் கனவு' என்ற புகழ்பெற்ற புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருக்கும் இப்புத்தகம் தமிழிலும் கிடைக்கிறது.

நமது ஆசிரியரும் கீஜுபாய் போல இருந்தா, ரொம்ப நல்லா இருக்கும் இல்ல!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x