Published : 24 Jun 2015 12:57 PM
Last Updated : 24 Jun 2015 12:57 PM
ஒணானைவிட கொஞ்சம் பெரிய தலை. பச்சையும் மஞ்சளும் கலந்த உடம்பு. நீளமான வால், சில நேரம் அதைச் சுருட்டி வைத்திருக்கும். ஏதாவது பூச்சி தென்பட்டால், பசையுள்ள தன் நீண்ட நாக்கை ‘டபக்'கென்று நீட்டியது. உடனே பூச்சி நாக்கில் ஒட்டிக்கொண்டது. நாக்கை உள்ளே இழுத்து பூச்சியை சாப்பிட்டுவிட்டது. அது ஒரு பச்சோந்தி.
எங்கே இருந்தாலும், அந்த இடத்துக்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் வல்லமையைப் பெற்றது பச்சோந்தி. இதனால் ஓரிடத்தில் பச்சோந்தி இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியாமல், பார்ப்பவர்கள் குழம்பிப்போவார்கள். சரி, ஒரு பச்சோந்தியே குழம்பிப்போன கதை உங்களுக்குத் தெரியுமா?
மரக் கிளை ஒன்றில் உட்கார்ந்திருந்த ஒரு பச்சோந்தி பச்சையிலிருந்து பழுப்பு நிறத்துக்கு, சிவப்பிலிருந்து மஞ்சள் நிறத்துக்கு... இப்படித் தன் நிறத்தை மாற்றிக்கொண்டே இருந்தது. வயிறு முட்டச் சாப்பிட்டபோதும், உடல் வெப்பமாக இருந்தபோதும் பளிச்சென்று பச்சை நிறத்தில் அது தோற்றம் அளித்தது. பசியுடனும் உடல் குளிர்ச்சியாகவும் இருந்தபோது சாம்பல் நிறத்தில் சோர்வாகக் காணப்பட்டது.
அப்பப்போ நாக்கை நீட்டிப் பூச்சிகளைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. தன் வாழ்க்கை அவ்வளவு சுவாரசியமாக இல்லை என்று அதுவே நினைத்துக்கொண்டது.
இப்படிச் சுவாரசியமில்லாமல் வாழ்ந்துகொண்டிருந்த பச்சோந்தி, ஒரு நாள் தான் இருந்த இடத்தை விட்டு, உயிரினக் காட்சி சாலைக்குப் போனது. அங்கிருந்த பல்வேறு உயிரினங்களை வாயைப் பிளந்து ஆச்சரியத்துடன் பார்த்தது.
வெள்ளை நிறத்தில் நிமிர்ந்து நின்ற பெரிய துருவக் கரடி ஒன்றை அங்கே பார்த்தது. அதைப் போன்ற பெரிய உடலும், முழுக்க வெள்ளை நிறமும் தனக்கும் இருந்தால் நன்றாக இருக்குமே என அது நினைத்தது. ‘டமார்!' உடனே அது போன்ற உடலும் வண்ணமும் அதற்குக் கிடைத்தது.
கொஞ்சத் தூரம் நடந்துபோன பிறகு, அழகான பூநாரை ஒன்றை அது பார்த்தது. அதன் அழகான இளஞ்சிவப்பு நிற இறக்கைகளில் பச்சோந்தி மயங்கிப்போனது. அதைப் போலவே தனக்கும் இறக்கைகளும் நீண்ட கால்களும் இருந்தால் அழகாக இருக்குமே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டது. 'டமார்!' அதன் விருப்பம் நிறைவேறியது. பூநாரையின் இறக்கைகளும் கால்களும் அதற்கு வளர்ந்தன.
அதற்குப் பிறகு அந்தப் பச்சோந்தி, ஒரு நரியைப் பார்த்தது. நரிக்கு அழகான வால் இருக்குமே, அது வேண்டுமென நினைத்தது. நரியின் வாலும் பச்சோந்தியின் பின்புறம் ஒட்டிக்கொண்டது. பச்சோந்தியின் ஆசைக்கு முடிவே இல்லாமல் போனது.
கடைசியில் மீனின் துடுப்பு, மானின் கொம்புகள், ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து, ஆமையின் ஓடு, யானையின் முகமும் தும்பிக்கையும், கடல்நாயின் துடுப்புகளையெல்லாம் தன் உடலில் பெற்றுக்கொண்டது. பிறகு, கடைசி கடைசியாகத் தன்னுடைய ஆசைகளுக்கு அது முற்றுப்புள்ளி வைத்தது.
இப்படிப் பச்சோந்தியின் ஒவ்வொரு ஆசையாக நிறைவேறிக்கொண்டிருந்தபோது, திடீரெனக் காற்றில் ஒரு பூச்சி பறந்து வந்தது. இவ்வளவு நேரம் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதில் ஆர்வம் செலுத்திக்கொண்டிருந்த பச்சோந்திக்கு அகோரப் பசி. ஆனால், இப்போது அதன் உடலில் உள்ள பல்வேறுபட்ட உறுப்புகளை அசைத்துக்கொண்டு போய் எப்படிப் பூச்சியைப் பிடித்துச் சாப்பிடுவது?
பூச்சியைப் பிடித்துச் சாப்பிட முடியாமல் அது குழம்பித் தவித்தது. ஒன்றுமே புரியவில்லை. இப்போது எப்படியாவது அந்தப் பூச்சியைப் பிடிக்க வேண்டும். என்னதான் செய்வது?
திரும்பவும் தானொரு பச்சோந்தியாகவே மாறிவிட்டால், அந்தப் பூச்சியை எளிதாகப் பிடித்துவிடலாமே என்று அது நினைத்தது. ‘டமார்!' அதன் விருப்பம் நிறைவேறியது, பழையபடி பச்சோந்தியாகவே அது மாறியது.
அதோ, பூச்சியை நோக்கிப் பசையுள்ள தன் நாக்கை நீட்டி, அந்தப் பூச்சியைப் பிடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது அந்தப் பச்சோந்தி!
புதுமை படைத்த ஓவியர்
இந்தக் கதையை எழுதியவர் அமெரிக்க ஓவியரும் குழந்தை எழுத்தாளருமான எரிக் கார்லே.
இயற்கையை அடிப்படையாகக் கொண்ட எரிக் கார்லேயின் புத்தகங்கள், குழந்தைகளின் இயல்பான ஆர்வத்தைத் தூண்டக்கூடியவையாக இருக்கும்.
‘தி வெரி ஹங்க்ரி கேட்டர்பில்லர்' (பெரும் பசியுடைய கம்பளி புழு) என்ற அவருடைய புத்தகம் உலகப் புகழ்பெற்றது. இந்தப் புத்தகம் 50 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 3 கோடி புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழிலும் விளம்பர நிறுவனம் ஒன்றில் கலை இயக்குநராகவும் வேலை பார்த்துள்ள அவர் வரைந்து எழுதிய முதல் புத்தகம் ‘1, 2, 3 டு தி ஸூ'. அதற்கடுத்து அவர் உருவாக்கிய புத்தகம்தான் ‘தி வெரி ஹங்க்ரி கேட்டர்பில்லர்'.
தனது புத்தகங்களில் வரைவதற்குக் கொலாஜ் என்ற உத்தியை எரிக் கார்லே பயன்படுத்துகிறார். இதன் மூலம் பிரகாசமான-வண்ணமயமான ஓவியங்கள் கிடைக்கின்றன. 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு அவர் ஓவியம் வரைந்திருக்ககிறார்.
தமிழில்: ஆதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT