Published : 03 Jun 2015 12:50 PM
Last Updated : 03 Jun 2015 12:50 PM

பாட்டிலுக்குள் குட்டிச் சூறாவளி!

சில நேரங்களில் சாலையில் புழுதி, குப்பை, இலை எல்லாம் வட்ட வடிவத்தில் சுழன்று செல்வதைப் பார்த்திருப்பீர்கள். இதுவே மிகவும் வேகமாக நடந்தால் அதற்குச் சூறாவளி என்று பெயர். சரி, இந்தச் சூறாவளி எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு சோதனை செய்து பார்த்துவிடுவோமா?

தேவையான பொருட்கள்:

இரண்டு அல்லது ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்கள், கம்பி, தண்ணீர்.

சோதனை:

1. ஒரு கம்பியைச் சூடுபடுத்தி ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியில் வட்டமாகத் துளையிடுங்கள்.

2. அந்த பாட்டிலில் நீரை நிரப்பி, துளையிடப்பட்ட மூடியால் இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள்.

3. இப்போது பாட்டிலைத் தலைகீழாகத் திருப்பி, பாட்டிலை வேகமாகச் சுற்றித் தண்ணீரை வட்டமாகச் சுழலச் செய்யுங்கள். இப்போது பாட்டிலுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

பாட்டிலுக்குள் குட்டிச் சூறாவளி நீர்ச் சுழலைப் பார்க்கலாம்.

நடந்தது என்ன?

சீரான வேகத்தில் ஒரு பொருள் வட்டப் பாதையில் இயங்கினால், அந்த இயக்கத்தின் பெயர் வட்ட இயக்கம். வட்டப் பாதையில் இயங்கும் ஒரு பொருளின் வேகம் மாறாமலேயே இருக்கும். ஆனால், அதன் திசைகள் மாறிக்கொண்டே இருக்கும். இதனால் அந்தப் பொருளின் முடுக்கம், விசை வட்டப் பாதையின் மையத்தை நோக்கியே இருக்கும். ஒரு பொருளை வட்டப் பாதையில் இயங்க வைக்கத் தேவையான விசை மைய நோக்கு விசையாகும்.

பாட்டிலுக்குள் இருக்கும் நீரைக் கிடைமட்டத்தில் சுழற்றினால், நீர் மூடியிலுள்ள துளை வழியாக வெளியேறும். அதேசமயத்தில் நீர் வேகமாகச் சுழல்வதால் பாட்டிலில் ஒரு மைய நோக்கு விசை உருவாகும்.

பாட்டிலுக்குள் இருக்கும் தண்ணீர் வெளியேறுவதால் பாட்டிலுக்குள் காற்றழுத்தம் குறையும். பாட்டிலுக்கு வெளியே உள்ள வளிமண்டலக் காற்றழுத்தம் உள்ளிருப்பதைவிட அதிகமாக இருப்பதால் நீர் வெளியே வரும். அதே துளை வழியே காற்று பாட்டிலுக்குள் செல்லும்.

சுழற்சி இயக்கத்தினால் ஏற்படும் மைய நோக்கு விசையினாலும் காற்று பாட்டிலுக்குள் வருவதாலும் நீர்ச் சுழல் உருவாகிறது. வெவ்வேறு கொள்ளளவு கொண்ட பாட்டில்களில் சூறாவளியை நீங்களே ஏற்படுத்திப் பாருங்கள்.

பயன்பாடு

பாட்டிலுக்குள் உருவாகும் சூறாவளியை உண்மையான சூறாவளியாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். பொதுவாக நிஜச் சூறாவளிகள் வெப்ப மண்டல் நாடுகளில் முதல் 20 அட்சரேகை பகுதியில்தான் ஏற்படுகின்றன. பூமிக்கு அருகில் உள்ள சூடான காற்று வேகமாக மேலே எழுந்து கருமேகத்துக்கு அடியில் வரும்போது வேகமாகச் சுழலத் தொடங்குகிறது. காற்று சுழற்சியில் ஒரு முடுக்கம் ஏற்படுவதால் சுழல் காற்று நீண்ட குழாய் வடிவத்திலோ அல்லது புனல் வடிவத்திலோ தோன்றும். புனல் வடிவச் சூறாவளிகள் ஆபத்தானவை. சூறாவளியின் அதிகபட்ச வேகம் மணிக்கு 480 கி.மீ..

படங்கள்: அ. சுப்பையா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x