Published : 03 Jun 2015 12:51 PM
Last Updated : 03 Jun 2015 12:51 PM
நம் ஒவ்வொருவருடைய உடல் முழுவதும் ரத்தத்தைச் செலுத்தி, நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உறுப்பு இதயம். அதனால்தான் இதயம் மிகப் பெரிதாக மதிக்கப்படுகிறது. அதேபோல் பூமியிலுள்ள மனிதர்கள் அனைவரையும் இணைக்கும் பெருங்கடல்களை, பூமியின் இதயம் என்று சொல்லலாம்.
கடற்கரை ஒன்றில்தான் உலகின் முதல் ஒரு செல் உயிரி 350 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இன்றைக்கும் பூமி உயிர்ப்புடன் ஆரோக்கியமாகத் திகழ்ந்துவருவதற்குப் பெருங்கடல்களே காரணம். பெருங்கடல்கள் மட்டும் இல்லையென்றால், பகலில் சூரிய வெப்பத்தால் வெந்து போய்விடுவோம், இரவில் குளிரால் உறைந்து போய்விடுவோம். சென்னை போன்ற கடற்கரை ஊர்களில் இதைத் தெளிவாக உணரலாம்.
கடல்தான் பருவநிலை-தட்பவெப்பநிலையைச் சீராக வைக்கிறது, அரபிக்கடலில் தோன்றும் தென்மேற்குப் பருவமழை, வங்கக் கடலில் தோன்றும் வடகிழக்குப் பருவமழை போன்ற பெருமழைகளை நமக்குத் தருகிறது, கோடிக்கணக்கானோருக்கு மீ்ன் உள்ளிட்ட சத்தான உணவைத் தருகிறது, ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது, மருந்துகளைத் தருகிறது, பெரும் உயிரினக் கூட்டத்துக்கு வீடாக இருக்கிறது... இப்படிக் கடலின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். சுருக்கமாக, நமது வாழ்க்கையும் எதிர்காலமும் பெருங்கடல்களில்தான் பொதிந்துள்ளது எனலாம். அந்தக் கடல் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ளவோமா:
பிளாஸ்டிக்கால் மடியும் உயிரினங்கள்
இந்த ஆண்டு பெருங்கடல் நாளின் மையப்பொருள்: “ஆரோக்கியமான பெருங்கடல்களே, ஆரோக்கியமான பூவுலகுக்கு வழி வகுக்கும்” என்பதுதான்.
பிளாஸ்டிக் குப்பை நமது கடல்களைச் சீரழிக்கிறது. பிளாஸ்டிக் குப்பையைக் கடலில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த ஆண்டின் மையப்பொருள். நேரடியாகக் கடலில் பிளாஸ்டிக் குப்பை போடப்படுவது மட்டுமில்லாமல், கழிவுநீர் பாதைகள் மூலமே பெருமளவு பிளாஸ்டிக் கழிவு கடலில் கலக்கிறது. பிளாஸ்டிக் குப்பை கடலில் சேரும்போது அது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிறிய துணுக்குகளாகிவிடுகிறது. இதை ஸூபிளாங்கடன் போன்ற நுண் உயிரினங்களும், சிதையாத பிளாஸ்டிக் பைகளை ஆமை முதலிய உயிரினங்களும் உண்டு செத்துப் போய்விடுகின்றன. அது மட்டுமல்லாமல் கடல் உணவு வழியாக நமது உடல்களுக்குள் பிளாஸ்டிக் புகுந்துவிடுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் எண்ணிலடங்காதவை
# பூமி நீல நிறக் கோள் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம், கிட்டத்தட்ட முக்கால் பங்குக்கு (71 சதவீதம்) பெருங்கடல்களால் அது சூழப்பட்டு நீல நிறமாகத் தெரிவதால்தான்.
# நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் பெருமளவைத் தருவது மரங்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம், அது தவறு, கடல்கள்தான் பெருமளவு ஆக்சிஜனைத் தருகின்றன. பைட்டோபிளாங்க்டன் என்ற சிறிய கடல் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன.
# காரஜீனன் என்ற கடல்பாசி ஐஸ்கிரீம், சாக்லேட் பானம் போன்றவற்றை மிருதுவாக்கவும், பற்பசையின் மூலப்பொருட்களை இணைத்து வைத்திருக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
# அண்டார்டிகாவைச் சூழ்ந்திருக்கும் தெற்குக் கடலில் உலகின் மிக உயரமான அலைகள் எழுகின்றன. அதிகபட்ச அலை உயரம் 46 அடி. அதற்கு இப்பகுதியில் வீசும் பலத்த காற்றும் முக்கியக் காரணம்.
# ஹவாய் தீவுப் பகுதியில் இருக்கும் மௌனா கியா என்ற கடலடி மலை 33,476 அடி உயரம் கொண்டது. இது எவரெஸ்ட் சிகரத்தைவிடவும் பெரியது.
# உலகில் உயிர்ப்புடன் வாழும் மிகப் பெரிய கட்டமைப்பு என்று ஆஸ்திரேலியக் கடற்கரையில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் பவழத் திட்டுக்களைச் சொல்லலாம். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் 2,300 கி.மீ. தொலைவுள்ள பவழத் திட்டுகள் உருவாகியுள்ளன. இது ஜெர்மன் நாட்டின் பரப்புக்கு இணையானது.
# ஜப்பான்-பிலிப்பைன்ஸ்-அமெரிக்காவுக்கு இடைப்பட்ட பசிஃபிக் பெருங்கடலில் உள்ள மரியானா டிரெஞ்ச் என்ற பகுதிதான் உலகிலேயே ஆழமான இடம். அது கடல் மட்டத்தில் இருந்து 11 கி.மீ. ஆழம் உடையது, அப்பாடி! இதன் அடி ஆழத்துக்குச் செல்ல 1960 முதல் பல முறை அறிவியலாளர்கள் முயன்றுள்ளனர். ஆனால், அடியாழம்வரை வெற்றிகரமாகச் செல்ல முடியவில்லை. இப்போதுவரை அங்கே எந்த மாதிரியான உயிரினங்கள் இருக்கின்றன என்று தெரியாது.
# உலகில் வாழும் உயிரினங்களில் 90 சதவீதம் கடல்களில்தான் வாழ்கின்றன, நிலத்தில் அல்ல. கடலைப் பற்றிய ஆராய்ச்சிகளும் அறிவும் குறைவாக இருப்பதால் இந்த உயிரினங்கள் அனைத்தையும் பற்றி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 6,000 புதிய கடல் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
# உலகில் இதுவரை தோன்றிய உயிரினங் களிலேயே மிகப் பெரியது கடலில் வாழும் பாலூட்டியான நீலத் திமிங்கிலம்தான். இது டைனோசர்களைவிடவும் பெரியது. 110 அடி நீளம், 2 லட்சம் கிலோ எடை கொண்டது. இது 50 யானைகளின் எடைக்கு இணையானது.
# கடலில் வாழும் ஆமைகளில் மிகப் பெரிதான தோனி ஆமை (Leatherback turtle), ஒரு சிறிய கார் அளவுக்கு வளரக்கூடியது.
# வாள்மீனும் மார்லினும் கடலில் வாழும் மீன் இனங்களில் அதிவேகமாக நீந்தக்கூடியவை. மணிக்கு 75 மைல் வேகத்தில் இவை பயணிக்கும்.
# பெருங்கடல்களில் 100 கோடி வகை நுண்ணுயிரிகள் வாழ்வதாக அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
# பெருங்கடல்கள் உலகையே சூழ்ந்திருந்தாலும், அங்கே வாழும் உயிரினங்கள் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை, பல்வேறு உயிரினங்கள் அழியும் ஆபத்திலேயே உள்ளன. உலகில் உண்ணப்படும் கடல் மீன் வகைகளில் பெரும்பாலானவை 2050-ம் ஆண்டை ஒட்டி முற்றிலும் அழிந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் மோசமான மீன்பிடி முறைகள்தான்.
# ஒவ்வோர் ஆண்டும் 7.3 கோடி சுறாக்கள், அவற்றின் துடுப்புகளுக்காகக் கொல்லப்படுகின்றன. சுறா துடுப்பு சூப், சுறா துடுப்பு உணவு உலகப் புகழ்பெற்றிருப்பதே இதற்கு முக்கியக் காரணம் சுறாக்கள் உணவுக்காகக் கொல்லப்படுவது கடல் உயிரின சமநிலையைக் கடுமையாகப் பாதிக்கும், கடலின் உயிர்வளம் சீரழிந்துபோகும்.
# உலகில் அதிகமாக வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு, பூமியை வெப்பப்படுத்திவருவது மட்டுமல்லாமல் கடலையும் சீரழித்துவருகிறது. மரங்களுக்கு இணையாகக் கடலும் கார்பன் டை ஆக்சைடைக் கிரகித்துவருகிறது. ஆனால், இன்றைக்குக் கடல் நீர் அதிக கார்பன் டை ஆக்சைடைக் கிரகித்து, கடல் நீர் கார்பானிக் அமிலமாக மாறிவருகிறது. இதனால் கடலின் 25 சதவீத உயிரினங்களுக்கு வீடாகத் திகழும் பவழத் திட்டுகள் அழிந்துவருகின்றன. கடல் நீர் ஆரோக்கியமாக இருந்தால்தான் பவழத் திட்டுகள் ஆரோக்கியமாக இருக்க முடியும். கடல்நீர் மாசுபட்டாலோ, வெப்பமடைந்தாலோ பவழத் திட்டுகளும் உயிரிழந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT