Published : 27 May 2015 12:02 PM
Last Updated : 27 May 2015 12:02 PM
கூடாரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? துணியால் கூடாரம் அமைத்து அதில் தங்கியிருப்பார்கள். மழை பெய்தால் துணியால் செய்யப்பட்ட கூடாரத்துக்குள் தண்ணீர் வராமல் அது காக்கும். இது எப்படிச் சாத்தியம்? ஒரு சிறிய சோதனை செய்து தெரிந்து கொள்வோமா?
தேவையான பொருள்கள்:
மூடியுடன் கூடிய கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் வலை, பல் குத்த உதவும் குச்சிகள், அட்டை, தட்டு.
சோதனை
1. உயரமான கண்ணாடி பாட்டிலின் மூடியை எடுத்து அதன் உட்பகுதியை வட்டமாக வெட்டி எடுத்துவிடுங்கள்.
2. பாட்டிலின் வாய்ப் பகுதியில் நுண்ணிய துளைகள் கொண்ட பிளாஸ்டிக் வலையை வைத்துக் காற்று புகாதவாறு மூடியை இறுக்கமாக மூடிவிடுங்கள்.
3. இப்போது பிளாஸ்டிக் வலை வழியாகப் பாட்டில் நிரம்பும் வரை தண்ணீரை ஊற்றுங்கள்.
4. மூடியின் மேல் ஓர் அட்டையை வைத்து ஒரு கையால் பிடித்துக் கொண்டு பாட்டிலைத் தலைகீழாகக் கவிழுங்கள்.
5. பின்னர் மெதுவாக அட்டையிலிருந்து கையை எடுத்துவிடுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள். கையை எடுத்த பிறகு அட்டை கீழே விழாமல் அப்படியே இருக்கும்.
6. இப்போது பாட்டிலோடு ஒட்டிக்கொண்டிருக்கும் அட்டையை மெதுவாக எடுத்து விடுங்கள்.
அட் டையை எடுத்த பின்னால் பாட்டிலுக்குள் இருக்கும் தண்ணீர் முழுவதும் கீழே கொட்டிவிடும் என்றுதானே நினைக்கி றீர்கள்? அதுதான் இல்லை. அட்டையை எடுத்த பின்பும் தண்ணீர் கொட்டவில்லை. இதுதான் அறிவியலின் அற்புதம். எந்தத் துளைகள் வழியாகத் தண்ணீரை ஊற்றினோமோ அதே துளைகள் வழியாகத் தண்ணீர் கொட்டவில்லையே, எப்படி? இதற்கு என்ன காரணம்?
நடந்தது என்ன?
பாட்டிலைத் தலைகீழாகத் திருப்பி ஆடாமல் அசையாமல் பிடித்துக்கொண்டு பல் குத்தும் குச்சியை வலையில் உள்ள துளை வழியாக மெதுவாகச் செருகி உள்ளே தள்ளிவிடுங்கள்.
ஒரு விரலால் வலையின் அடிப்பாகத்தை லேசாகத் தட்டுங்கள். அல்லது விரலால் முன்னும் பின்னும் தடவிவிடுங்கள்.
பல் குச்சியை உள்ளே செருகும்போதும் பிளாஸ்டிக் வலையை விரலால் தட்டும்போதும் அல்லது தடவும்போதும் சிறிதளவு தண்ணீர் கீழே கொட்டுகிறது. அதேசமயத்தில் சிறிதளவு காற்று பாட்டிலுக்குள் செல்கிறது. இதிலிருந்து ஒரு விஷயம் புரிகிறதா?
வலையிலுள்ள துளைகளுக்கு இடையே உள்ள நீர்ப் பரப்பு உடையும்போது நீர் கொட்டுகிறது என்பது தெளிவாகிறதா? துளைகளுக்கு இடையே உள்ள நீர்ப் பரப்பில் உள்ள பரப்பு இழு விசைதான் நீரைக் கீழே விழாமல் தாங்கிப் பிடிக்கிறது.
பொதுவாகத் திரவத்துக்கு ஒரே ஒரு மேற்பரப்புதான் இருக்கும். ஆனால், சோதனையில் தலைகீழாகப் பிடித்திருக்கும் பாட்டிலில் உள்ள நீரில் ஒரு மேற்பரப்பும் வலைகளுக்கு இடையே ஒரு நீர்ப் பரப்பும் உள்ளன. வளிமண்டலக் காற்றழுத்தம் நீர்ப் பரப்பு மீது மேல் நோக்கிச் செயல்படுவதாலும் வலைகளின் துளைகளுக்கு இடையில் பரப்பு இழுவிசை செயல்படுவதாலும் நீர் கீழே கொட்டுவதில்லை. பாட்டிலை முழுமையாகச் சாய்த்தால் நீர் முழுவதும் கடகடவெனக் கொட்டிவிடும். ஏனெனில் துளைகளுக்கு இடையே உள்ள நீர்ப் பரப்பு உடைவதால் பரப்பு இழு விசை நீக்கப்பட்டுவிடுகிறது.
பயன்பாடு
பொதுவாகக் கூடாரம் துணியால் கட்டப்பட்டிருக்கும். சோதனையில் பாட்டிலின் வாயில் பொருத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் வலையைக் கூடாரத் துணியாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். கூடாரத் துணியில் நுண்ணிய துளைகள் இருக்கும். கூடாரத்தின் மீது மழை பெய்தால் மழை நீர் துணியை ஊடுருவி உள்ளே செல்லாது.
சோதனையில் பார்த்ததுபோல வலையின் துளைகளுக்கு இடையே உள்ள நீர்ப் பரப்பில் செயல்படும் பரப்பு இழுவிசை நீரைக் கீழே விடாமல் தடுப்பது போல் கூடாரத்தின் துணியில் உள்ள நுண்ணிய துளைகளில் செயல்படும் மழை நீரின் பரப்பு இழுவிசை, மழை நீரைக் கூடாரத்துக்குள்ளே செல்லவிடாமல் தடுக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்லவும் வேண்டுமா, என்ன?
படங்கள்: அ. சுப்பையா பாண்டியன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT