Published : 20 May 2015 12:40 PM
Last Updated : 20 May 2015 12:40 PM
கோடைக் காலத்தில் அக்னி வெயில் என்றால் மிகவும் உக்கிரமாக இருக்கும் இல்லையா? இந்தக் கோடைக் காலத்தில் எல்லா நாளும் அப்படி உக்கிரமாக இல்லை. இருந்தாலும் வெயில் அடிக்கும் சில நாட்களில் தாங்க முடியாமல்தான் இருக்கிறது, இல்லையா? இந்த நாட்களில் மின்விசிறியோ, ஏ.சி,யோ இல்லை என்றால் ரொம்ப கஷ்டமாகி விடுகிறது. பண்டைக்காலத்தில் மின்விசிறி, ஏ.சி. எதுவும் இல்லாமல் நம் முன்னோர்கள் எப்படித் தங்களைக் குளிர்வித்துக் கொண்டார்கள்?
$ நியூயார்க்கைச் சேர்ந்த வில்லிஸ் கேரியர், அறையின் ஈரப்பதம், வெப்பநிலையைக் கட்டுக்குள் வைக்க சிறந்த வழி ஒன்றைக் கண்டுபிடித்தார். தொழிற்சாலைகளுக்கான குளிர்சாதனப் பெட்டியை முதன்முதலில் புரூக்ளினில் உள்ள அச்சகத்தில் 1902-ல் அவர் பொருத்தினார்.
$ அந்த அச்சகத்தில் ஈரப்பதத்தின் அளவை குளிர்சாதனப் பெட்டியின் மூலம் கட்டுப்படுத்தியதன் காரணமாக, சரியான நேரத்தில் அச்சு மை காய்வதற்கு உதவியாக இருந்தது. அதற்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு 1953-ல் விண்டோ ஏ.சி. எனப்படும் வீட்டில் பொருத்தப்படும் குளிர்சாதனப்பெட்டி அமெரிக்காவில் 10 லட்சத்துக்கு மேல் விற்றிருந்தது.
$ கோடை வெயிலைச் சமாளிக்க மனித இனம் காலங்காலமாகப் பல்வேறு வழிமுறைகளைக் கண்டுபிடித்து வந்திருக்கிறது. இயற்கைச் செயல்பாடுகளை நுணுக்கமாக அறிந்துகொண்டு வெயிலைச் சமாளிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டார்கள். அதற்கேற்ப வீட்டையும், வாழ்க்கையையும் மாற்றி அமைத்துக்கொண்டார்கள்.
$ வெயிலைச் சமாளிக்க நீராவி மூலம் குளிர்ச்சியை உருவாக்கும் முறையை பயன்படுத்தினார்கள். மிகப் பெரியத் தொட்டிகளிலும், தோட்டத்தில் அமைக்கப்பட்ட குட்டைகளிலும் தண்ணீரை ஊற்றி வைத்தார்கள். அதிலிருந்து உருவாகும் நீராவி அருகிலிருந்த பகுதிகளைக் குளிர வைத்தது.
$ பண்டைய எகிப்தில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கைவிசிறிகள் பயன்பாட்டில் இருந்தன. அன்றைக்குக் கைவிசிறிகள் புனிதமாகக் கருதப்பட்டன, வழிபாட்டு சடங்குகளில் இடம்பெற்றன. அரசர்களுக்குரிய பொருளாகக் கருதப்பட்டன. டுட் அரசரின் சமாதியில் இரண்டு மிகப் பெரிய கைவிசிறிகள் கண்டெடுக்கப்பட்டது இதற்கு அத்தாட்சி. அதில் ஒரு கைவிசிறி தங்கக் கைபிடியையும், நெருப்புக்கோழி இறகுகளையும் கொண்டிருந்தது.
$ பண்டைய எகிப்தியர்கள், நம்மைப் போலவே பனையோலையால் செய்யப்பட்ட விசிறிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். பண்டைய கிரேக்கப் பூச்சாடிகளில் பனையோலை விசிறிகள் வரையப்பட்டுள்ளதை வைத்து இதை அறிய முடிகிறது.
$ ஹீப்ரூ, பெர்சியர், கிரேக்கர், ரோமானியர் உள்ளிட்ட பண்டைக் கால மக்கள் பல்வேறு வகைகளில் கைவிசிறிகளை உருவாக்கிப் பயன் படுத்தி வந்துள்ளனர். பைபிளில்கூடக் கைவிசிறி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
$ மடக்கக்கூடிய விசிறிகள் (Folding Fan)ஜப்பானில் கி.பி. 700-ல் கண்டறியப்பட்டன. அது சீனாவுக்குச் சென்று மிகவும் பிரபலமடைந்தது. இரண்டு நாடுகளிலுமே மடக்கக்கூடிய விசிறி தொடர்பாக நிறையக் கதைகள் உண்டு.
$ சீனாவில் முகமூடியை மாற்றும் சிச்சுவான் நடனக் கலைநிகழ்ச்சியில் பங்கேற்பவர் கையில் மடக்கும் விசிறி இருக்கும். ஜப்பானிய கபுக்கி நடனத்திலும் மடக்கு விசிறிக்கு முக்கிய இடம் உண்டு.
$ ஜப்பானில் சாமுராய் போர் வீரர்கள் தங்களைக் குளிர்வித்துக்கொள்ளப் பிரத்யேக மடக்கு விசிறிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இவை மரம், வெண்கலம், பித்தளையால் செய்யப்பட்ட இடைப்பட்ட கம்பிகளையும், மெல்லிய உலோகத் தகட்டால் ஆன விசிறும் பகுதியையும் கொண்டவை. எடை அதிகமில்லாமலும், உறுதியாகவும் இருப்பதற்காக இப்படி உருவாக்கப்பட்டன.
$ வர்த்தகப் பாதைகள் வழியாக சீனர்கள், போர்த்துகீசியர்கள் மூலம் 1500-களில் மடக்கு விசிறி ஐரோப்பாவுக்குச் சென்றது. அதன் பிறகு, பணக்காரர்களின் செல்வ வளத்தின் சின்னமாகவும் ஆடையலங்காரத்தின் ஒரு பகுதியாகவும் அது மாறியது.
$ லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கிரீன்விச் பாரம்பரியப் பகுதியில் உலகின் முதல் விசிறி அருங்காட்சியகம் 1991-ல் தொடங்கப்பட்டது. 1721-ல் கட்டப்பட்ட இரண்டு வீடுகளில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கே நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கைவிசிறிகள் உள்ளன. இங்குள்ள மிகவும் பழைமையான கைவிசிறி 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
$ சீலிங் ஃபேனைப் போல மேலே தொங்கும் படுதாவைப் பிடித்து இழுக்க, அது அசையும்போது காற்று வரும். பழைய திரைப்படங்களில் இதைப் பார்க்கலாம். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் இது பயன்பாட்டில் இருந்தது.
$ ஸ்க்யூலர் ஸ்காட்ஸ் வீலர் 1882-ல் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். ஆரம்ப காலத்தில் மின் விசிறிகளுக்கு இரண்டு இறக்கைகளே இருந்தன. 1896-ல்தான் மூன்று இறக்கைகள் பொருத்தப்பட்டன. அதேநேரம், உத்தரத்தில் பொருத்தும் மின் விசிறிக்கான காப்புரிமையை பிலிப் டைல் என்பவர் 1889-ல் பெற்றார்.
$ 19-ம் நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்காவில் ஃபுளோரிடாவைச் சேர்ந்த மருத்துவர் ஜான் கோரீ, மலேரியா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகக் குளிர்ந்த காற்றை உருவாக்கப் புதிய முறையைக் கண்டறிந்தார். முதலில் ஒரு பாத்திரத்தில் ஐஸை வைத்து, அதை உத்தரத்தில் கட்டி தொங்கவிட்டார். பிறகு அதன் வழியாகக் காற்றை வீசச் செய்து அறையைக் குளிர்வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT