Last Updated : 06 May, 2015 12:36 PM

 

Published : 06 May 2015 12:36 PM
Last Updated : 06 May 2015 12:36 PM

காசு பணம் துட்டு

ஒரு ரூபாய் காசு பார்த்திருப்பீர்கள். ஒரு ரூபாய் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு ரூபாய் நோட்டை அச்சடிப்பதற்கான செலவு அதிகமாக இருந்ததால் 1994 நவம்பர் மாதத்தோடு, ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியிருந்தது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரூபாய் நோட்டு சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த நேரத்தில் நாம் பயன்படுத்தும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து ஆச்சரியமான, அதிகம் தெரியாத, சுவாரசியமான விஷயங்களைப் பார்ப்போமா:

$ நாம் நினைப்பதற்கு மாறாக ரூபாய் நோட்டுகள் காகிதத்தால் ஆனவை அல்ல. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் பருத்தி, பருத்திக் கழிவால் உருவாக்கப்படுகின்றன.

$ இந்தியாவில் 18-ம் நூற்றாண்டில் காகித ரூபாய் புழக்கத்தில் இருந்தது. அப்போது இந்துஸ்தான் வங்கி, வங்காள வங்கி, பம்பாய் வங்கி, சென்னை வங்கி ஆகிய நான்கு தனியார் வங்கிகள் காகித ரூபாய்களை அச்சிட்டு வெளியிட்டுவந்தன. 1861-ம் ஆண்டுக்குப் பிறகு அரசு மட்டுமே காகித ரூபாய்களை வெளியிடலாம் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டு தனியார் காகித ரூபாய்கள் தடை செய்யப்பட்டன.

$ நாட்டின் அதிகாரபூர்வ முதல் காகித ரூபாயை மத்திய ரிசர்வ் வங்கி 1938-ம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது. அந்த 5 ரூபாயில் பிரிட்டன் மன்னர் நான்காம் ஜார்ஜின் படம் இடம்பெற்றிருந்தது.

$ மத்திய ரிசர்வ் வங்கி இதுவரை அச்சிட்டதிலேயே அதிகபட்ச மதிப்புகொண்டது 10,000 ரூபாய் நோட்டு. அது 1938, 1954-ம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டது. ஆனால், இடையில் 1946, 1978-ம் ஆண்டுகளில் இவை மதிப்பற்றவையாக அறிவிக்கப்பட்டன. 1934-ல் இயற்றப்பட்ட ரிசர்வ் வங்கிச் சட்டத்தின்படி 10,000 ரூபாய்க்கு மேல் காகித ரூபாய் நோட்டை அச்சிட முடியாது.

$ மக்களின் பொதுப் புழக்கத்துக்காக 500 ரூபாய் நோட்டு 1987-ம் ஆண்டும், 1000 ரூபாய் நோட்டு 2000-ம் ஆண்டும் வெளியிடப்பட்டன.

$ 1957-ல்தான் இந்திய நாணயங்கள் 100 பைசாக்களைக் கொண்ட ஒரு ரூபாய் என மாற்றப்பட்டது. அதற்கு முன் 16 அணாக்கள்தான் ஒரு ரூபாய். ஒரு அணா என்பது 4 பைசாக்களுக்குச் சமம்.

$ 75, 150, 1000 ரூபாயிலும் நாணயங்கள் இருக்கின்றன தெரியுமா? 2010-ம் ஆண்டில் பல்வேறு நினைவு நாட்களைக் கொண்டாட மேற்கண்ட மதிப்புகளில் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இவை பொதுப் பயன்பாட்டுக்கானவை அல்ல.

ரிசர்வ் வங்கியின் 75-வது ஆண்டு விழா, ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு விழா, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் 1000-வது ஆண்டு விழாக்களை கொண்டாடும் வகையில் இந்த நாணயங்கள் வெளியாயின. நாணயம் சேகரிப்பவர்கள், நாணயச் சாலைகளுக்கு விண்ணப்பித்து இவற்றை வாங்கிக்கொள்ள முடியும்.

$ 2011-ம் ஆண்டு நாணயச் சட்டத்தின்படி 1000 ரூபாய் வரையிலான மதிப்பில் நாணயங்களை வெளியிடலாம்.

$ ஒவ்வொரு ரூபாய் நோட்டின் இடது கைப் பக்கத்தில் தூக்கலாகச் செதுக்கப்பட்ட ஏதாவது ஒரு வடிவம் இருக்கும். ஆயிரம் ரூபாயில் வைரம், 500 ரூபாயில் வட்டம், 100 ரூபாயில் முக்கோணம், ரூ. 50-ல் சதுரம், ரூ. 20-ல் செவ்வகம், ரூ. 10-ல் எந்த வடிவமும் இருக்காது. இந்த வடிவங்களைத் தடவிப் பார்த்தே பார்வையற்றவர்கள் ரூபாயின் மதிப்பை அறிகிறார்கள்.

$ நாசிக் (மகாராஷ்டிரம்), தேவாஸ் (மத்திய பிரதேசம்), மைசூர் (கர்நாடகம்), சல்பானி (மேற்கு வங்கம்) ஆகிய நான்கு இடங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் அச்சகங்கள் உள்ளன.

$ மும்பை, நொய்டா, கொல்கத்தா, ஹைதராபாத்தில் உள்ள நாணயச் சாலைகளில் நாணயங்கள் உருவாக்கப்படுகின்றன.

$ எந்த நாணயச் சாலையில் நாணயம் உருவாக்கப்படுகிறது என்பதற்கு அடையாளமாக நாணயத்தில் ஆண்டுக்குக் கீழே டெல்லி என்றால் புள்ளி, மும்பை என்றால் வைரம், ஹைதராபாத் என்றால் நட்சத்திரம், கொல்கத்தா என்றால் எந்த அடையாளமும் இன்றி இருக்கும்.

$ நாடு விடுதலை பெற்று பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது, பிரிட்டிஷ் இந்திய ரூபாய் நோட்டுகளின் மீது பாகிஸ்தான் என்று முத்திரையிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. 1948-ல்தான் புதிய ரூபாய் நோட்டுகள், நாணயங்களை பாகிஸ்தான் வெளியிட்டது.

$ பயன்படுத்த முடியாத பழைய ரூபாய் நோட்டுகள் என்ன செய்யப்படுகின்றன என்று தெரியுமா? பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்துப் புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அந்தப் பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி சேகரித்து, அவற்றைத் துண்டு துண்டாக்கி, பந்தைப் போல மாற்றி, தேநீர்க் குவளை மூடிகள், பேப்பர் வெயிட், பேனா ஸ்டாண்ட், கீ செயின் போன்றவை செய்யப் பயன்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x