Published : 13 May 2015 12:16 PM
Last Updated : 13 May 2015 12:16 PM
தலைநகர் சென்னையில் உள்ள உங்கள் உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறீர்களா? எங்குச் செல்வது என்பதில் குழப்பமா? கவலையே வேண்டாம். கிண்டி தேசியப் பூங்கா போலவே இன்னும் சில இடங்கள் குழந்தைகளுக்காக உள்ளன. அப்படிப்பட்ட சில இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோமா?
வண்டலூர் விலங்கியல் பூங்கா
சென்னையில் குழந்தைகளை மகிழ்விக்கக்கூடிய இடங்களில் ஒன்று வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா. ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க இங்கே நிறைய விலங்குகள் உள்ளன. இந்தப் பூங்காதான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா. 1855-ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் மெட்ராஸ் பூங்கா என்ற பெயரில் விலங்கியல் பூங்காவை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்தார்கள். பின்னர் விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது.
இங்கு ஆயிரத்து 675 வகையான விலங்குகள் உள்ளன. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீரிலும் நிலத்திலும் வாழும் இருவாழ் உயிரிகள், மீன்கள் என ஏராளமான விலங்குகள் உள்ளன. இங்கே சில விலங்குகளைப் பார்க்கவே மிகவும் ஆர்வமாக இருக்கும். நீர்யானை, அதன் குட்டி, வெள்ளைப் புலிகள், சிங்கவால் குரங்கு, நீள வால் குரங்கு, மனிதக்குரங்கு, புள்ளி மான், இமாலயக் கறுப்புக் கரடி, செந்நாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, சாம்பல் நாரை, கரண்டிவாயன், வாலற்ற பெருங்குரங்கு ஆகிய விலங்குகளைப் பார்க்கத் தவற விடவே கூடாது.
அதுமட்டுமல்ல, சிங்க வனப் பயணம், மான் பயணம், வண்ணத்துப்பூச்சி வீடு, ஊர்வன வீடு ஆகியவை மிகவும் மகிழ்ச்சியூட்டக்கூடியவை. 602 ஹெக்டேர் பரப்பில் பிரம்மாண்டமாக விரிந்திருக்கும் இந்தப் பூங்காவை சைக்கிளில் பயணம் செய்தும் பார்க்கலாம். இதற்காகக் குட்டி சைக்கிள்கள்கூட வாடகைக்குக் கிடைக்கும். காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரை விலங்கியல் பூங்கா திறந்திருக்கும். இரண்டு வயது முதல் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு நுழைவுக் கட்டணம் பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு முப்பது ரூபாய் கட்டணம். சவாரிகளுக்குத் தனிக் கட்டணம்.
ஆசைப்பட்ட உணவு வகைகளை வாங்கிச் சாப்பிட இங்கே உணவகமும் சிற்றுண்டி சாலைகளும் உள்ளன. காலையில் சென்றால், மாலைவரை குதூகலமாக இருக்க வண்டலூர் பூங்கா குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற இடம்.
- க. ஸ்வேதா
கலங்கரை விளக்கம்
சென்னைக்கு வந்தால் மறக்காமல் மெரினா பீச் செல்வீர்கள் இல்லையா? அங்கே உள்ள கலங்கரை விளக்கத்துக்குச் செல்ல மறக்காதீர்கள். கடலுக்கு அருகே மிக உயரமான இடத்தில் நின்று கொண்டு கடல் அழகையும், சென்னையின் அழகையும் பார்ப்பது உற்சாகத்தைத் தரக்கூடியது.
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இது 46 மீட்டர் உயரமுள்ளது. இந்தியாவிலேயே லிப்ட் வசதி உள்ள கலங்கரை விளக்கமும் இதுதான். அது மட்டுமல்ல, இங்கே தரைத் தளத்தில் ஒரு அருங்காட்சியகமும் இருக்கிறது. இது எல்லோரும் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு காட்சியகம். கலங்கரை விளக்கத்தின் மேல் இருந்து பார்க்கும்போது சென்னை மற்றும் மெரினா கடற்கரை மிகவும் அழகாகவும் வண்ணமயமாகவும் காட்சி அளிக்கும். அதிவேகமாக அடிக்கும் காற்று இன்னும் உற்சாகப்படுத்தும்.
திங்கள்கிழமை தவிர்த்து, மற்ற நாட்களில் தினமும் காலை பத்து மணி முதல் ஒரு மணி வரையும், மதியம் மூன்று மணியில் இருந்து ஐந்து மணி வரையும் கலங்கரை விளக்கம் திறந்திருக்கும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஐந்து ரூபாய் கட்டணம். பெரியவர்களுக்கு 10 ரூபாய். அருங்காட்சியகத்துக்குச் செல்லத் தனியாகப் பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
- மோ.வினுப்பிரியா
மாமல்லபுரம்
பொழுதுபோக்காகக் கொண்டாட மட்டுமல்ல, வரலாற்றையும் தெரிந்துகொண்டு கோடையைக் கொண்டாட ஏற்ற இடம் மாமல்லபுரம்தான். வரலாற்று பொக்கிஷங்கள் உள்ள இந்த இடம், யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழமண்டல கடற்கரைப் பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளது. இங்கே பல்லவர் காலத்தில் மிகப் பழமையான குடைவரை சிற்பங்கள், கடற்கரைக் கோயில், கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து என்றழைக்கப்படும் பேலன்சிங் பாறை, ஐந்து ரதங்கள், புலி குகை, சிற்பக் கலை அருங்காட்சியகம், வராகக் குகை, சிற்பங்கள் என வரலாற்றுக் குவியல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கலங்கரை விளக்கமும் இங்கே உள்ளது. தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தைப் பற்றித் தெரிந்துக் கொள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. காலையில் சென்றால் மாலை வரை ஒவ்வொரு இடமாகப் பார்த்து மகிழலாம். கடற்கரையில் விளையாடியும் பொழுதுபோக்கலாம்.
- வை.விண்மதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT