Published : 29 Apr 2015 12:50 PM
Last Updated : 29 Apr 2015 12:50 PM
விடுமுறைக்கு என்ன செய்யப் போறீங்க? வெயில் சுள்ளெனக் கொளுத்தும் நேரத்தில் வெளியே விளையாடாமல், புத்தகங்களைப் படிக்கலாமே! எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்ற குழப்பம் வேண்டாம். கீழே கொடுத்திருப்பவை உங்களுக்கு உதவும்:
ஆண்டர்சன் கதைகள்
டென்மார்க்கைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் உலகப் புகழ்பெற்ற குழந்தைகளுக்கான எழுத்தாளர். அவருடைய பிறந்தநாளான ஏப்ரல் 2 சர்வதேசக் குழந்தைகள் புத்தக நாளாக அனுசரிக்கப்படும் அளவுக்குப் பிரபலமானவர். அவர் எழுதிய அற்புதங்களும் கற்பனையும் நிரம்பிய கதைகளின் தொகுப்பு தமிழிலேயே கிடைக்கிறது. உலகப் புகழ்பெற்ற குழந்தை இலக்கியங்களைத் தமிழுக்குத் தந்த யூமா. வாசுகியின் எளிமையான, சரளமான மொழிபெயர்ப்பில் வந்துள்ளது.
புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924
சிட்டுக் குருவியின் சீரிய அறிவு
நம் கைகளுக்குள் அடங்கிவிடும் சிட்டுக் குருவியால் பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறோம். ஆனால் சிட்டுக் குருவி எவ்வளவு புத்திசாலி என்று இந்தக் காஷ்மீர் கதை சொல்கிறது. ஒரு காட்டில் தீ பிடித்துவிடுகிறது. பறவைகளின் ராஜாவான மயிலால் தீயை அணைக்க வழி கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது, சிட்டுக் குருவி வழி கண்டுபிடிப்பதுதான் கதை. எழுதியவர் சுரையா ரசூல், தமிழில் ஆர். ஷாஜஹான்.
நேஷனல் புக் டிரஸ்ட், தொடர்புக்கு: 044-28252663
பச்சை நிழல்
குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகள் தீர்ந்து போய்விட்டது போலப் பெற்றோர்கள் திணறுகிறார்கள். ஆனால், முன்காலத்தைப் போலவே குழந்தைகளுக்குச் சொல்வதற்கு நிறைய நல்ல கதைகள் இருக்கின்றன என்கிறது, குழந்தைகளுக்கான எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய இந்தத் தொகுப்பு. குழந்தைகள், அவர்களுடைய உலகில் இயல்பான கற்பனையுடன் உலாவ இக்கதைகள் கைகொடுக்கும்.
என்.சி.பி.எச். வெளியீடு, தொடர்புக்கு: 044-26359906
காட்டுப் பள்ளிக்கூடம்
குழந்தைகளுக்கான பாடல்களின் முக்கிய அம்சமே எளிமையான வார்த்தைகளும் பாடுவதற்கும் ஏற்ற தன்மையும்தான். இந்தப் புத்தகத்தில் உள்ள பாடல்களில் அந்தத் தன்மை நன்கு கூடிவந்துள்ளது. பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளியின் முதல்வர் வெற்றிச்செழியன் எழுதியுள்ள பாடல்களின் தொகுப்பு நூல் இது.
மக்கள் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை, தொடர்புக்கு: 044-24782377
யுரேகா கோர்ட்
புகழ்பெற்ற புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி ஒரே நேரத்தில் நடந்திருந்தாலும், ஒருவர்தான் புதிய கருவி-பொருளின் முக்கிய அம்சத்தைக் கண்டுபிடித்திருப்பார். அதேநேரம் ஒரு கண்டுபிடிப்புக்கு இருவர் சொந்தம் கொண்டாடவும் கூடும். இதில் யாருடைய பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வித்தியாசமான வகையில் எழுதியிருக்கிறார் குழந்தைகளுக்கான அறிவியல் எழுத்தாளர் இரா. நடராசன்.
விகடன் பிரசுரம், தொடர்புக்கு: 044-42634283
விழிப்புணர்வுப் பாடல்கள்
"எதனாலே? எதனாலே?
மின்மினிப் பூச்சியின் பின்னால் அடிக்கடி
விளக்கொண்ணு மின்னுது எதனாலே?...
குருவியும் காக்கையும் பறப்பதைப் போலவே
பூனை பறக்கலே எதனாலே?..."
இதைப் போன்று குழந்தைகளே பாடக்கூடிய அறிவியல், சமூகம், சுற்றுச்சூழல் பற்றி எளிமையாக, பிரபலமான பாடல்களின் தொகுப்பு. தொகுத்தவர் எஸ்.டி. பாலகிருஷ்ணன்.
அறிவியல் வெளியீடு, தொடர்புக்கு: 044-28113630
மாத்தன் மண்புழுவின் வழக்கு
உழவனின் நண்பன் என்று சுட்டிக்காட்டப்பட்டாலும் மண்புழுதான் காலம் காலமாகப் பூமியை உழுது செழிப்பாக்கி வருகிறது. இப்படிப்பட்ட மண்புழுக்களின் வாரிசான மாத்தன், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தரப்படும் ஓய்வூதியத்தைத் தனக்கும் தர வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பிக்கிறது. அது நியாயமான வேண்டுகோளாக இருந்தும், அரசு அதை ஏற்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது மாத்தன். நீதிமன்றத்தில் தன் வாதத்துக்கு ஆதாரமாக இயற்கையின் முக்கியத்துவத்தை அது அற்புதமாக விளக்கும் சுவாரசியமான புத்தகம். மலையாளத்தில் எழுதியவர் பேராசிரியர் எஸ். சிவதாஸ், தமிழில் யூமா. வாசுகி.
புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924
யானைகள்
யானை பிடிக்காத குழந்தைகள் உண்டா? ஆனால், யானைகளைப் பற்றி என்னவெல்லாம் நமக்குத் தெரியும்? யானைகளைப் பற்றி நமக்குத் தெரியாத சில விஷயங்களை இந்தப் புத்தகம் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது.
யுரேகா புக்ஸ், தொடர்புக்கு: 044-28601278
யானைச் சவாரி
தோட்டத்திலே வைக்கோல் போர்
பரப்பி இருக்குது
தொட்டுப் பார்க்க மெத்தை போல்
சொகுசாய் இருக்குது
படுத்துப் புரண்டு விளையாட
ஆசை பிறக்குது
அம்மா பார்த்தால் அடி விழுமோ
அச்சம் தடுக்குது.
இப்படி, பிரபல எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய சுவாரசியமான குழந்தைப் பாடல்களின் தொகுப்பு.
புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924
ஏழு நிறப் பூ
ரஷ்ய இலக்கிய மேதைகளின் குழந்தைக் கதைகள் படிக்க எளிமையானவை, சுவாரசியமான அம்சங்கள் நிரம்பியவை. நமக்குப் பக்கத்திலேயே நடந்தது போலப் பல விஷயங்கள் நடக்கும் இக்கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யூமா. வாசுகி.
என்.சி.பி.எச். வெளியீடு, தொடர்புக்கு: 044-26359906
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT