Published : 22 Apr 2015 01:26 PM
Last Updated : 22 Apr 2015 01:26 PM
உலக புத்தக தினம்: ஏப்ரல் 23
எழுத்தாளர் என்றால் ரொம்பப் பெரியவராக இருப்பார், நிறைய வாசித்திருப்பார் என்று நாமே கற்பனை செய்துகொள்கிறோம். ஆனால், உங்களைப் போன்று சின்ன வயதில் எழுதி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள், தெரியுமா? அப்படிப் புகழ்பெற்றவர்கள் இரண்டு பேர். ஒருவர், சிறுமி ஆன் ஃபிராங்க், இன்னொருவர், மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.
பதிமூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்தார் ரவீந்திரநாத் தாகூர். குழந்தையாக இருந்தபோதே தாகூரின் அம்மா இறந்துவிட்டார், அப்பாவோ அடிக்கடி வெளியூர்களுக்குப் போய்விடுவார். வீட்டிலிருந்த மற்றவர்கள்தான் தாகூரை வளர்த்தார்கள்.
வழக்கமான பள்ளியில் படிப்பது தாகூருக்குப் பிடிக்கவில்லை. வீட்டுக்கு அருகிலிருந்த போல்பூர், பாணிஹாட்டி போன்ற கிராமங்களில் ஊர் சுற்றுவதை விரும்பினார். இயற்கையைச் சுதந்திரமாக ரசிப்பது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
அண்ணன் ஹேமேந்திரநாத்தின் முன்னிலையில் நதியில் நீந்துதல், மலையேற்றம் ஆகிய பயிற்சிகளைச் செய்து வந்தார். அதோடு ஓவியம், இலக்கியம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றையும் படித்தார். ஆனால், ஆங்கிலம் அவருக்குப் பிடிக்கவில்லை.
இளம் கவி
பள்ளியில் சேர்ந்த பிறகு, அவருக்கு ரொம்பப் பிடித்த விஷயம் என்றால், அது சொற்களை எதுகை மோனையில் சேர்த்து பாட்டாகப் பாடுவதுதான். நிறையப் பாடல்களை எழுத வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் அதிகரித்தது. தோன்றிய பொழுதெல்லாம் ஒரு குட்டி நோட்டில் கவிதைகளை எழுதி வைத்தார். போகும் இடமெல்லாம் அந்த நோட்டையும் எடுத்துச் சென்றார்.
இப்படிப் பள்ளி செல்ல ஆரம்பித்த காலத்திலேயே கவிதை-பாடல்களை தாகூர் எழுத ஆரம்பித்துவிட்டார். அதை அவருடைய அப்பா, ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினார்கள். பதினொரு வயதில் பல அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, காளிதாசரின் காப்பியங்கள் ஆகியவற்றைப் படித்தார்.
கொஞ்ச காலத்திலேயே மைதிலி கவிதை பாணியில் ஒரு நீண்ட கவிதையை எழுதினார். ‘பாரதி’ என்ற பத்திரிகையில் அது பிரசுரமானது. அப்போது அவருக்குப் பதினைந்து வயதுதான். அந்தக் காலத்தில் அவர் எழுதிய ‘கபிலகஹினி’ என்ற நீண்ட கவிதை, பின்னர் சிறிய புத்தகமாகவும் வந்தது.
இப்படி 15 வயதில் தாகூர் நீண்ட கவிதைகளை எழுத ஆரம்பித்திருந்தார் என்றால், இன்னொரு சிறுமி உலகையே உலுக்கிய டைரியை அந்த வயதில் எழுதியிருக்கிறார். ஆனால், துரதிருஷ்டவசமாக அதை வெளியிடும்போது அவர் உயிரோடு இல்லை என்பதுதான் சோகம்.
உயிர் பிழைக்க
ஜெர்மனியில் உள்ள ஃபிராங்க்ஃப்ர்ட் நகரில் யூதக் குடும்பத்தில் 1929-ல் பிறந்தவர் ஆன் ஃபிராங்க். எழுத்தாளராக, பத்திரிகையாளராக வேண்டுமென சின்ன வயதிலேயே விரும்பினார். அவருடைய 13-வது பிறந்த நாளின்போது, அவருக்கு ஒரு டைரி பரிசாகக் கிடைத்தது.
அடுத்த சில வாரங்களில் ஹிட்லரின் நாஜிப் படை ஜெர்மனியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. யூதர்கள் கொல்லப்பட்டார்கள். அதன் காரணமாக நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமுக்கு ஆன் ஃபிராங்கின் குடும்பம் இடம்பெயர்ந்தது. அந்த நகரையும் நாஜிப் படை கைப்பற்றியது. அவர்களுடைய பிடியில் இருந்து தப்பிக்க, ஃபிராங்கின் குடும்பம் மறைவிடத்தில் பதுங்கியது.
ஆழ்ந்த சிந்தனை
அங்கேயே இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் வாழ்ந்தார்கள். அப்பொழுது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், தன் கருத்தையும் டச் மொழியில் ஃபிராங்க் எழுதினார். ஆனால், நாஜிப் படையிடம் இருந்து நீண்ட காலம் அவரால் தப்பித்திருக்க முடியவில்லை. 1945-ல் நாஜிப் படை தாக்குதல் முறியடிக்கப்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன், ஜெர்மனி முகாம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆன் ஃபிராங்க், டைபாஸ் எனும் பாக்டீரியா பாதிப்பால் இறந்ததாகத் தெரிகிறது.
அவர்களுடைய குடும்பத்தில் உயிர் பிழைத்தவர் ஃபிராங்கின் அப்பா ஓட்டோ ஃபிராங்க் மட்டும்தான். போர் முடிந்த பின் ஆம்ஸ்டர்டாம் திரும்பிய அவர், ஆன் ஃபிராங்கின் டைரிக் குறிப்புகளைத் தேடிக் கண்டுபிடித்தார். அதை 1947-ல் டச்சு மொழியில் பதிப்பித்தார். 1952-ல் ஆங்கிலத்தில் அது மொழிபெயர்க்கப்பட்டது. அந்தக் குறிப்புகள் ஆழ்ந்த சிந்தனை, புத்திசாலித்தனத்துடன் உணர்ச்சிகரமாக எழுதப்பட்டுள்ளதாக அறிஞர்கள் பாராட்டினர்.
இப்படி இவர்கள் இருவரும், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதியதால்தான் இன்றைக்கும் போற்றப்படுகிறார்கள். எழுத்து, அது எழுதப்பட்ட காலத்தைக் கடந்து வாழக்கூடியது.
நீங்களும் எழுத்தாளர்தான்!
நீங்களும் எழுத்தாளர் ஆக முடியும். அது அப்படி ஒன்றும் ரொம்ப கஷ்டமான விஷயம் அல்ல. உங்களது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை, உங்கள் மனதுக்குத் தோன்றுவதை தினசரி ஒரு டைரியில் எழுத ஆரம்பித்தாலே போதும். பிற்காலத்தில் நீங்கள் நல்ல எழுத்தாளர் ஆவதற்கான சிறந்த பயிற்சியை அது தரும்.
எழுத்தாளர் என்றால் கதை, கவிதை, கட்டுரைதான் எழுதிக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். சினிமா எடுக்கவும் எழுத வேண்டும், ரேடியோவில் பேசவும் எழுத வேண்டும். அதேபோலத்தான் விளம்பரம், டிவி என எந்தத் தகவல் தொடர்பு சாதனம் என்றாலும், அதற்கு அடிப்படை எழுத்துதான்.
அதனால் புத்தகங்களை வாசிப்பதிலும் எழுதுவதிலும் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், அவற்றில் உற்சாகத்தோடு தொடர்ந்து ஆர்வம் செலுத்துங்கள், பிற்காலத்தில் நீங்களும் எழுத்தாளர் ஆக முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT