Published : 15 Apr 2015 01:02 PM
Last Updated : 15 Apr 2015 01:02 PM
கோடைச் சுற்றுலா
கோடை விடுமுறையில் ஆசை தீர விளையாடித் தீர்க்க வேண்டுமா? மதுரைக்குப் போனால் ஜாலியாகக் கொண்டாடித் தீர்க்கலாம். பல்வேறு ஊர்களில் இருந்து வரும் குழந்தைகள் பொழுதுபோக்க மதுரையில் நிறைய இடங்கள் உள்ளன.
தமுக்கம் பகுதியில் நடக்கிற தூரத்திற்குள் ராஜாஜி பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா, காந்தி மியூசியம், அரசு அருங்காட்சியகம், தமுக்கம் பொருட்காட்சி என வரிசையாகச் சென்று மகிழலாம்.
ராஜாஜி பூங்கா
இங்கே விதவிதமாக 15 சறுக்குகள், 10 ஊஞ்சல்கள், சீசா, ஜெயிண்ட் வீல், கப் அன்ட் சீசர், கொலம்பஸ் போன்ற பெரிய வகை ராட்டினங்களும், சிறு குழந்தைகளுக்காக வாத்து, தவளை, டிராகன், மூன் ரோலர் போன்ற சிறுவகை ராட்டினங்களும் உள்ளன. இதுதவிர 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கென டிக்கி ரயில், சிறுவர்களுக்கான ஸ்நேக் ரயில், குடும்பத்துடன் பயணிக்கும் பெரிய ரயில் என 3 வகை ரயில்களும் உள்ளன. ரோப்காரும் இருக்கிறது.
இதென்ன பிரமாதம் என்று கேட்கும் செல்லங்களுக்கு ஒரு தகவல். இவை அனைத்துக்கும் கட்டணம் வெறும் 10 முதல் 20 ரூபாய்தான். எனவே, பிடித்த ராட்டினத்தை மீண்டும் மீண்டும் கேட்டு அடம் பிடித்தாலும் காதைத் திருகாமல் காசு தருவார்கள் அம்மாவும் அப்பாவும்.
இங்கே பார்க்க வேண்டிய முக்கியமான இடம் மீன் கண்காட்சி. சுண்டு விரல் அளவு மீனும் இங்கே இருக்கு. பெரிய கிரிக்கெட் மட்டை அளவுக்கும் மீன் இருக்கு. இப்படி உருவத்திலும், வண்ணத்திலும் வித்தியாசம் காட்டுகிற 25 வகை மீன்களை இங்கே பார்க்கலாம். ஆறு வகைப் புறாக்கள், ஐந்து வகை லவ் பேர்ட்ஸ், 3 வகை கோழிகள், இருவகை வாத்துகள், ஈமுகோழி என்று பறவையினங்களையும், முயல், கின்னி எலி போன்ற சிறுவகை வளர்ப்புப் பிராணிகளையும் பார்த்து ரசிக்கலாம். விடுமுறை காலத்தில் ஏதாவது ஒரு செல்லப்பிராணியை வளர்க்க விருப்பும் செல்லங்களுக்காக, இங்கே விற்பனையும் நடக்கிறது.
எக்கோ பார்க்
மதுரை மாநகராட்சி அலுவலம் அருகே உள்ள இந்த பூங்கா, எட்டரை ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. அழகான புல்தரைகள், சிறு குன்றுகள், அழகிய சிற்பங்கள், விளக்குகள் என்று மலைவாச தலங்களில் இருப்பதை போல அழகாகக் காட்சி தருகிறது இந்தப் பூங்கா. ஏராளமான மரங்களும், பூஞ்செடிகளும் இருப்பதால் பறவைகளையும் வண்ணத்துப்பூச்சிகளையும் இங்கே பார்க்கலாம்.
13 ஆயிரம் சதுரடி பரப்புள்ள பிரம்மாண்டப் படகு குழாம், செயற்கை நீருற்றுக்கள், இசைக்கேற்ப நடனமாடும் நீருற்றுக்களும் உள்ளன. பகலெல்லாம் ராஜாஜி பார்க்கில் ஆட்டம் போட்டுவிட்டு, மாலையில் இங்கே வந்துவிட்டால் இரவு 9 மணி வரை கொண்டாட்டம்தான். இங்கே அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியையும் அழைத்து வந்து ஒரு மரநிழலில் புல் தரையில் உட்கார வைத்துவிட்டு விருப்பம் போல விளையாடலாம். ராஜாஜி பார்க்கில் இருப்பதைப் போல விளையாட்டு உபகரணங்கள் இங்கேயும் இருக்கின்றன. புல்தரையில் பந்து விளையாடலாம், பறக்கும் தட்டும் ஆடலாம்.
சித்திரை பொருட்காட்சி
மதுரைவாசிகள் அல்லாத மற்ற மாவட்ட குழந்தைகள் மதுரை வரத் திட்டமிட்டால் அதற்கு ஏற்ற நேரம் இதுதான். காரணம், இங்கே நடைபெறுகிற உலகப்பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா.
ராஜாஜி பூங்கா, எக்கோ பூங்கா இடையே உள்ள தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் சித்திரை பொருட்காட்சியும் தொடங்கிவிட்டது. மிகப் பிரம்மாண்டமான இந்த பொருட்காட்சியில், இந்த இரு பூங்காக்களிலும் இல்லாத மிக உயரமான ராட்டினங்களும், விளையாட்டு சாதனங்களும் உள்ளன.
காந்தி மியூசியம்
பூங்கா, பொருட்காட்சி என்று பொழுதைப் போக்கினால் மட்டும் போதுமா? கொஞ்சம் பொதுஅறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டாமா? அதற்குத்தான் காந்தி மியூசியம் இருக்கிறதே? மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவின் அரண்மனைதான் தற்போது காந்தி மியூசியமாகத் திகழ்கிறது.
இங்கே காந்தியடிகள் பயன்படுத்திய ஆடைகள், ராட்டை, மிதியடி, மூக்கு கண்ணாடி, அவர் எழுதிய கடிதம், கட்டுரைகள் ஆகியவை உள்ளன. பண்டைய இந்தியா, ஆங்கிலேயர் ஆட்சிக்காலம், சுதந்திரப் போராட்ட வரலாறு போன்ற அனைத்து விவரங்களும் புகைப்படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மியூசியம் காலை 10 மணி முதல் 1 மணி வரையும் மதியம் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அந்த வளாகத்திலேயே தமிழக அரசின் தொல்லியல் துறைக்குச் சொந்தமான அருங்காட்சியகமும் உள்ளது. இங்கே பண்டைய மக்கள் பயன்படுத்திய நாணயங்கள், பானைகள், ஆயுதங்கள், போர்க்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பழங்காலச் சிற்பங்கள், பறவை, விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள், டைனோசரின் மாதிரி உருவத்தையும் பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT