Last Updated : 15 Apr, 2015 01:04 PM

 

Published : 15 Apr 2015 01:04 PM
Last Updated : 15 Apr 2015 01:04 PM

கூ கூ ரயில் வண்டி

இந்தியாவின் முதல் ரயில் 1853 ஏப்ரல் 16-ம் தேதி மும்பையில் இருந்து தானேவுக்கு ஓடியது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்த ஆண்டுடன் இந்தியாவில் ரயில்கள் ஓட ஆரம்பித்து 162 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

முதல் ரயில் ஓடிய அன்றைக்கு, சம்பந்தப்பட்ட ஊர்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது, தெரியுமா? இது போல இந்திய ரயில்கள் பற்றி நிறைய ஆச்சரியப்படும் விஷயங்கள் இருக்கின்றன.

அதைவிடவும் ஆச்சரியமான பல விஷயங்கள் நமது மாநிலத் தலைமையகமான சென்னையில் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் முதல் ரயில் ஓடத் திட்டமிடப்பட்ட ஊர் சென்னைதான். 1835-ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து செங்குன்றம்வரை பரிசோதனை முறையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

இந்தப் பாதையில்தான் இந்தியாவின் முதல் சரக்கு ரயில் ஓடியது. கிரானைட் கற்களின் போக்குவரத்துக்கு 1837-ல் இந்தப் பாதை பயன்பட்டது. 1838-ல் புதிதாக உருவாக்கப்பட்ட ஏவ்ரி டிசைன் ரோட்டரி இன்ஜின் இந்தப் பாதையை ஓட்டிக் கட்டப்பட்டது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய ரயில் பாதை கட்டமைப்பு, உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய ரயில் பாதை கட்டமைப்பு இந்திய ரயில் பாதைதான். நாட்டில் ஒரு நாளைக்கு 2.3 கோடிப் பேர் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இது ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகைக்கு ஈடானது.

உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் இந்திய ரயில்வேதான் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 14 லட்சம்.

உலகிலேயே இன்றைக்கும் நீராவியில் ஓடும் பழமையான ரயில் இன்ஜின் புதுடெல்லி - ராஜஸ்தான் இடையே ஓடும் ‘ஃபேரி குவீன்'தான். 1855-ம் ஆண்டு கின்ஸ்டன் தாம்ப்சன் ஹெவிட்சன் நிறுவனம் உருவாக்கிய இன்ஜின் அது. இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

இந்தியாவிலேயே மிகவும் மெதுவாக ஓடும் ரயில் மேட்டுப்பாளையம்-ஊட்டி நீலகிரி பயணிகள் ரயில்தான். இது 10 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது.

இந்திய ரயில்வேயின் நல்லெண்ணச் சின்னம் 'போலு' என்ற பெயர் கொண்ட ரயில்வே பாதுகாவலர் (கார்டு) யானை.

இந்திய ரயில் நிலையங்களில் மிகவும் சிறிய பெயரைக் கொண்டது ஒடிசாவில் உள்ள இப்.

நாட்டிலுள்ள ரயில் நிலையங்களில் மிகவும் நீளமான பெயரைக்கொண்ட ரயில் நிலையம் ஆந்திராவில் உள்ள ‘வெங்கட நரசிம்ம ராஜு வரிப்பேட்டா'.

நவபூர் என்ற ரயில் நிலையத்தின் ஒரு பாதி மகாராஷ்டிர மாநிலத்திலும், மற்றொரு பாதி குஜராத் மாநிலத்திலும் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள ரயில் சார்ந்த நான்கு அம்சங்கள் யுனெஸ்கோவால் உலக மரபுச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்ட பெருமையைப் பெற்றுள்ளன. நீலகிரி மலை ரயில், டார்ஜிலிங் மலை ரயில், கல்கா-சிம்லா ரயில், மும்பை சி.எஸ்.டி. ரயில் நிலையம்.

டார்ஜிலிங்கில் இன்றைக்கும் இயங்கும் புகழ்பெற்ற பொம்மை ரயில், 1881-ல் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட நீராவி இன்ஜினில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

விடுமுறையும் ரயில்களும்

என்னதான் போக்குவரத்துக்குப் பேருந்தை அதிகமாகப் பயன்படுத்தினாலும், ரயிலில் பயணிப்பதைப் போல அது மகிழ்ச்சியைத் தருவதில்லை. பரபரப்பான சாலைகளுக்குப் பதிலாக, ஓரளவு அமைதியான பகுதிகளில் 'கூ கூ' எனக் கூவிக்கொண்டு ரயில் நம்மை அழைத்துச் செல்கிறது.

ரயிலில் ஜன்னலோரம் உட்கார்ந்துகொண்டு கிராமப்புறம், ஆறுகளின் மேலே உள்ள பாலங்கள், ஆடு-மாடுகள் என எத்தனையோ விஷயங்களை ரசித்துக்கொண்டே போவோம். நீண்ட தூரப் பயணத்துக்கு ரயில்தான் எல்லோருக்கும் வசதியாக இருக்கிறது. அத்துடன் விடுமுறை காலத்தில் சொந்த ஊருக்கோ, உறவினர் வீடுகளுக்கோ, சுற்றுலாவோ செல்லப் பெரும்பாலோர் தேர்ந்தெடுப்பது ரயில்தான். இப்படிப் பல வகைகளில் ரயில் பலருக்கும் பிடித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x