Published : 01 Apr 2015 12:51 PM
Last Updated : 01 Apr 2015 12:51 PM
கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெயிலை நினைத்தாலே பலருக்கும் தலையே சுற்றிவிடும். வெயிலில் இருந்து தப்பிக்கப் பல வழிகளை நாம் கையாள்வோம். உணவு பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வோம். உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடிய இளநீர், மோர், ஐஸ்கிரீம், பழரசங்கள் போன்ற குளிர்ச்சியான திரவ உணவுகளை நிறைய உட்கொள்வோம். இதேபோல், கோடைகாலத்தில் விலங்குகள் தங்களைக் குளுமைப்படுத்திக்கொள்ளுமா?
நிச்சயமாகக் குளுமைப்படுத்திக்கொள்ளும். இதற்காக விலங்குகள் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. கல்லுக்கடியில் பதுங்குவது, நீர்த்தேக்கங்களில் மூழ்கிக் கிடப்பது, மர நிழல்களில் ஓய்வெடுப்பது, மணலுக்கடியில் புதைந்து கிடப்பது எனப் பல வழிமுறைகளை விலங்குகள் கையாளுகின்றன.
இரவில் வேலை
கோடைகாலத்தில், பெரும்பாலான விலங்குகள் இரவு நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும். முயல் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சிம்பன்சிகளும், கொரில்லாக்களும் பொழுது விடியும் முன்பே தங்களது பணிகளைச் செய்து முடித்துவிடும். இதன்மூலம் காலை, மதிய நேரங்களில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளும்.
வியர்வை ஏற்படாத ஒருசில ஊர்வனவும், பறவைகளும் இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக இருக்கும். இவை காலை வேளையில் ஓய்வெடுக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. இன்னும் சில விலங்குகள் தங்களைக் கடும் வெயிலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்கின்றன என்று பார்ப்போமா?
யானை
நீண்ட காதுகளை விசிறி உடலைக் குளுமைப்படுத்திக் கொள்ளும். ஈரமான தரையில் புரண்டு ஈர மண்ணைப் பூசிக்கொள்ளும். யானையின் உடம்பில் பூசப்பட்ட இந்த ஈர மண் சூரியனிலிருந்து வரும் அதிக வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் கவசமாக அமைகிறது. பகல் நேரங்களில் மர நிழலில் ஒதுங்கி ஓய்வெடுக்கும். துதிக்கையில் நீரை நிரப்பி, அதை தங்களின் மேல் தெளித்துக்கொள்ளும்.
ஒட்டகம்
பொதுவாகப் பாலூட்டிகளுக்கு உருண்டையான மிகப் பெரிய ரத்தச் செல்கள் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு உள்ள ரத்தச் செல்லின் அளவு மிகச் சிறியது. இதனால், ஒட்டகத்தின் உடம்பில் 35 - 40 சதவீதம் வரை நீர்ச் சத்து குறைந்தாலும், அவற்றின் ரத்த ஓட்டம் சீராகவே இருக்கும். கோடை காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாத விலங்கு ஒட்டகம்தான்.
ஊர்வன
ஊர்வன வகையைச் சேர்ந்த ஆமைகள், பாம்புகள் மற்றும் பல்லிகளின் உடல் தட்பவெப்பநிலை சூழ்நிலைக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டது. இவற்றுக்குப் பாலூட்டிகளைப்போல் நிலையாக உடலில் வெப்பம் இருக்காது. கோடை காலத்தில் பாம்புகள் தண்ணீருக்கடியில் மூழ்கித் தங்களைக் குளுமைப்படுத்திக் கொள்ளும். ஆமைகள் தங்களின் ஓடுகள் மூலமும், பாறைகளின் இடுக்குகளில் புகுந்தும் கடும் வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்கின்றன. பல்லிகள் உடம்பையும், வாலையும் மேலே உயர்த்தி, கீழ்ப்பகுதியில் காற்று படுமாறு செய்து தங்களைக் குளுமைப்படுத்திக் கொள்கின்றன.
வாத்துகள்
வாத்துகளின் வலைபோல் பின்னப்பட்ட பாதங்கள் மிக மிருதுவானவை. இந்தப் பாதங்களின் மூலம் வாத்துகளின் உடலில் உள்ள வெப்பம் வெளியேறுகிறது. வாத்துகள் தங்கள் இறக்கைகளைத் தளர்த்திக் கூடுகளின் மேல் அவற்றைப் படரச் செய்யும். முட்டைகளை வெப்பத்திலிருந்து காக்க இது உதவுகிறது.
சில வாத்துகள் கூடுகளின் மேற்புரம் நின்று முட்டைகளைப் பாதுகாக்கின்றன. இறக்கைகளை ஈரப்படுத்தி முட்டையின் மேல் ஈரமான இறக்கை படுமாறு வைத்துக்கொள்ளும். இது முட்டைகளுக்கு இதமாகவும், அவை குஞ்சு பொரிப்பதற்கு ஏதுவாகவும் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT