Published : 08 Apr 2015 12:29 PM
Last Updated : 08 Apr 2015 12:29 PM
தமிழகம், இந்தியாவில் மட்டுமில்லை உலகெங்கிலும் காற்றடிக்கும் காலத்தில் பட்டம் விடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. காத்தாடியைப் பத்தி சில சுவாரசியமான விஷயங்களைப் பார்ப்போமா?
$ கிழக்கு நாடுகளில் பட்டம் பறக்கவிடுவது மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், வளம் தரும் என்று நம்பப்படுகிறது. குஜராத்தில் மகர சங்கராந்தி (பொங்கல்) நேரத்தில் பட்டம் பறக்கவிடுவது வழக்கம். பட்டம் விடும் மாடிகளில்தான் சங்கராந்தி விழாவே கொண்டாடப்படுகிறது.
$ 3000 ஆண்டுகளுக்கு முன்பே இலைகளால் ஆன பட்டங்கள் பறக்கவிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே பட்டங்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.
$ 1760-ல் பட்டங்கள் பறக்க விடுவது ஜப்பானில் தடை செய்யப்பட்டது. அதற்குக் காரணம் பெரும்பாலான மக்கள் வேலை செய்யாமல் பட்டம் விடுவதில் ஆர்வம் காட்டியதுதான்.
$ ஜப்பானில் பண்டைக் காலத்தில் உயரமான வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்குக் கற்கள், டைல்ஸ் போன்றவற்றைச் சுமந்து செல்ல பட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
$ ஜப்பானில் சில பட்டங்களின் எடை 2000 கிலோகூட இருக்குமாம்.
$ 19-ம் நூற்றாண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது கடிதப் பரிமாற்றத்துக்கும், நாளிதழ்களை அனுப்பவும்கூடப் பட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
$ வானொலியைக் கண்டுபிடித்த மார்கோனி 1901-ல் அட்லாண்டிக் கடற்கரைக்கு மேலே வானொலி சமிக்ஞையைப் பரப்ப அறுகோணப் பட்டத்தைப் பறக்கவிட்டிருக்கிறார்.
$ இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் ராயல் விமானப் படை விமானிகள் அவசர காலத்தில் உதவி கேட்பதற்காகப் பட்டங்கள் கொடுக்கப்பட்டன. அந்தப் பட்டங்களில் இருக்கும் அலைபரப்பி மூலம் உதவி கேட்கும் தகவல்கள் அனுப்பப்படும்.
$ வயலில் பறவைகளை விரட்டும் வகையிலும், தட்பவெப்பநிலையைக் கணிப்பதற்காகவும் பட்டங்கள் பறக்க விடப்படுகின்றன.
$ பலரும் நம்புவதற்கு மாறாக, பட்டம் மேலெழுந்து பறப்பதற்குக் காற்று தேவையில்லை.
$ பட்டம் பறக்க விடப்படும் கொள்கையின் அடிப்படையில்தான் விமானங்கள் வடிவமைக்கப்பட்டன.
$ தாய்லாந்தில் பல நூற்றாண்டுகளாகப் பட்டங்களை மோதவிடும் ‘சுலா - பக்போ' என்ற பந்தயம் மிகப் பெரிய பொழுதுபோக்காக நடத்தப்பட்டுவருகிறது. இதில் ஒரு குழு அடுத்த குழுவின் பட்டங்களைக் கைப்பற்ற முயலும். இந்தப் பந்தயத்துக்கு 78 விதிமுறைகள் உண்டு.
$ கி.மு. 1000-ம் ஆண்டில் சீனாவில் பட்டம் பறக்கவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
$ பழைய காலத்தில் சீனாவில் இசைக் கருவிகளைச் சுமந்து செல்ல பட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாகத்தான் ‘காற்று யாழ்' (ஃபென் ஸெங்) என்று அர்த்தம் தரும் வகையில், அதற்கான சீனப் பெயர் வைக்கப்பட்டது.
$ சீனாவில் வானத்தில் பறக்கவிடப்படும் பட்டத்தைப் பார்ப்பது பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT