Last Updated : 01 Apr, 2015 12:40 PM

 

Published : 01 Apr 2015 12:40 PM
Last Updated : 01 Apr 2015 12:40 PM

யார் அந்தக் கறுப்பழகன்?

“டக்டக் டக்டக் வண்டி வந்து.

தாவித் தாவி ஓடும் குதிரை வண்டி வருகுது..."

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பாடலில் குறிப்பிடப்படும் இந்தக் குதிரை வண்டி நீண்டகாலமாக நம் நாட்டிலும் புழக்கத்தில் இருந்தது. தமிழகத்தில் 10 - 20 ஆண்டுகளுக்கு முன்புவரை குதிரை வண்டிகள் இருந்தன. இப்போது சென்னை மெரினா கடற்கரை போன்ற பகுதிகளில் குழந்தைகள் குதூகலமாக உட்கார்ந்து செல்ல மட்டும் குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பிறந்தான் அழகன்

பஸ், கார் எல்லாம் வருவதற்கு முன் குதிரைகளும் குதிரை வண்டிகளுமே போக்குவரத்துக்குப் பயன்பட்டுவந்தன. இங்கிலாந்தில் 19-ம் நூற்றாண்டில் போக்குவரத்துக்குப் பயன்பட்ட ஒரு குதிரைதான் கறுப்பழகன் (Black Beauty). ஒரு கிராமப்புறத்தில் பிறந்த கறுப்பழகனைக் கார்டான் என்ற நிலப்பிரபு வாங்கினார்.

அவருடைய மனைவிதான் கறுப்பழகன் என்று அந்தக் குதிரைக்குப் பெயர் வைத்தவர். அதற்குக் காரணம் அதன் நிறமும் அபாரமான அழகும். கார்டானிடம் ஜிஞ்சர் என்ற பெண் குதிரையும் இருந்தது, ஆனால், அது கறுப்பழகனிடம் நட்பாக இருக்கவில்லை.

புயல் வீசும் ஓர் இரவில் நிலப்பிரபுவும் அவருடைய உதவியாளர் ஜான் மான்லியும் இருந்த வண்டியை நகரத்திலிருந்து வீட்டுக்குக் கறுப்பழகன் இழுத்துக்கொண்டு வந்தது. அப்போது ஏதோ ஆபத்து இருப்பதை உணர்ந்து, ஓரளவு மூழ்கிய ஒரு பாலத்தைக் கடக்கக் கறுப்பழகன் மறுத்தது.

வண்டியை ஓட்டும் ஜான் மீண்டும் அதைச் செலுத்த முயற்சிக்க, கறுப்பழகன் மறுத்தது. இந்தக் களேபரத்தில் வண்டியை ஓட்டும் ஜான், தவறி நதியில் விழப் போனார். நல்ல வேளையாகக் குதிரையின் கடிவாளக் கயிற்றை அவர் பிடித்துக்கொண்டார். கறுப்பழகனும் நிலப்பிரபுவும் சேர்ந்து ஜானை காப்பாற்றி வீடு சேர்த்தனர்.

புயல் வீசும் ஓர் இரவில் நிலப்பிரபுவும் அவருடைய உதவியாளர் ஜான் மான்லியும் இருந்த வண்டியை நகரத்திலிருந்து வீட்டுக்குக் கறுப்பழகன் இழுத்துக்கொண்டு வந்தது. அப்போது ஏதோ ஆபத்து இருப்பதை உணர்ந்து, ஓரளவு மூழ்கிய ஒரு பாலத்தைக் கடக்கக் கறுப்பழகன் மறுத்தது. வண்டியை ஓட்டும் ஜான் மீண்டும் அதைச் செலுத்த முயற்சிக்க, கறுப்பழகன் மறுத்தது. இந்தக் களேபரத்தில் வண்டியை ஓட்டும் ஜான், தவறி நதியில் விழப் போனார். நல்ல வேளையாகக் குதிரையின் கடிவாளக் கயிற்றை அவர் பிடித்துக்கொண்டார். கறுப்பழகனும் நிலப்பிரபுவும் சேர்ந்து ஜானை காப்பாற்றி வீடு சேர்த்தனர்.

புதிய நண்பன்

அன்றைய இரவில் ஜோ கிரீன் என்ற இளைஞன் குதிரை லாயத்தில் கறுப்பழகனைக் கவனித்துக்கொண்டான். குதிரைகளை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற அனுபவம் இல்லாததன் காரணமாக அதற்குக் குடிக்கக் குளிர்ந்த நீரைத் தருவதுடன், அதன் உடலைச் சாக்கு போட்டு மூடவும் மறக்கிறான். இதனால் கறுப்பழகன் உடல்நலம் குன்றியது. சிகிச்சைக்குப் பிறகு அது தேறியது.

இடையில் ஒரு தங்குமிடத்தில் இரவு தங்க நேரும்போது, அணைக்கப்படாத சிகரெட்டால் தீப்பிடித்துக் குதிரை லாயம் தீப்பிடித்தது. நல்ல வேளையாகக் கறுப்பழகனையும் ஜிஞ்சரையும் ஜோ காப்பாற்றிவிட்டான்.

கறுப்பழகனுக்குப் பெயரிட்ட நிலப்பிரபுவின் மனைவி உடல்நலக் காரணங்களால் இங்கிலாந்தைவிட்டு வேறு நாட்டுக்குச் செல்ல வேண்டுமென மருத்துவர்கள் கூறுவதால், அவர்கள் குதிரைகளை விற்றுவிடுகின்றனர்.

மோசமான காலம்

கறுப்பழகனும் ஜிஞ்சரும் வெக்ஸ்மைர் பிரபுவுக்கு விற்கப்பட, ஜோ கண்ணீருடன் விடைபெறுகிறான். புதிய நிலப்பிரபுவிடம் கறுப்பழகன், ஜிஞ்சர் மீது கூடுதல் சுமை ஏற்றப்படுவதால், இரண்டு குதிரைகளாலும் தலையை உயர்த்த முடியாமல் போகிறது. இதனால் எரிச்சலடைந்து ஜிஞ்சர் தப்பிப் போகிறது.

கறுப்பழகனைக் கவனித்துக்கொள்ளும் ரூபன் ஸ்மித் ஒரு முறை குடித்துவிட்டுத் தாறுமாறாகக் குதிரையைச் செலுத்த, தரையில் விழுந்து இருவரும் அடிபடுகிறார்கள். அதற்குப் பிறகு குதிரைகளை வாடகைக்கு விடும் ஒருவருக்குக் கறுப்பழகனை, வெக்ஸ்மைர் பிரபு விற்றுவிடுகிறார்.

அந்த ஆள் குதிரைகளை மோசமாக நடத்துகிறார். பிறகு கறுப்பழகனை ஒரு சந்தைக்கு அழைத்துப் போனபோது, சிறு வயதில் தன்னைப் பராமரித்த ஜோவை கறுப்பழகன் பார்க்கிறது. ஜோவால் கறுப்பழகனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

புதிய முதலாளி

சந்தையில் லண்டனைச் சேர்ந்த ஜெர்ரி பார்கர் என்ற டாக்சி டிரைவரின் கவனத்தைக் கறுப்பழகன் தன் கனைப்பால் கவர்ந்தது. இப்போது ஆட்டோ, டாக்சி இருப்பதைப் போல அந்தக் காலத்தில் குதிரை வண்டியிலேயே அதிகமானவர்களை ஏற்றிச் செல்லும் வகையில் டாக்சிகள் இருந்தன. அவற்றில் ஒன்றின் டிரைவர்தான் அவர்.

ஜெர்ரி கறுப்பழகனை நன்கு கவனித்துக்கொண்டார். லண்டன் சென்ற பிறகு தன்னுடைய பழைய ஜோடி குதிரையான ஜிஞ்சர் மோசமான உடல்நிலையில் இருப்பதைப் பார்த்தது. கடைசியில் உடல்நிலை மோசமடைந்து ஜிஞ்சர் இறந்தும் போகிறது.

ஜெர்ரியின் உடல்நிலை மோசமடைகிறது. அதனால், கிராமத்தை நோக்கிச் செல்லும் ஜெர்ரி, ஒரு தானிய வியாபாரியிடம் கறுப்பழகனை விற்றுவிடுகிறார். அவரிடம் பாரத்தை இழுக்க முடியாமல் இரண்டு ஆண்டுகளுக்கு அது கஷ்டப்படுகிறது.

மீண்டும் ஜோவுடன்

பாரம் இழுக்கப் பயன்படாது என்று தெரிந்த பின், மீண்டும் சந்தையில் அது விற்கப்பட்டது. ஆனால் யாரும் அதை வாங்க முன்வரவில்லை. விவசாயி தோரோகுட்டும் ஒரு இளைஞனும் கறுப்பழகனைப் பார்க்கிறார்கள். அந்த இளைஞன் பழைய ஜோதான். தன் நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியில் கறுப்பழகன் சந்தோஷமாகக் கனைக்கிறது. ஜோவும் அதன் அடையாளத்தைக் கண்டு பிடித்து வாங்கிவிடுகிறான். அதற்குப் பிறகு கறுப்பழகன் எங்கும் விற்கப்படவேயில்லை.

ஒரு குதிரையைப் பற்றிய உலகப் புகழ்பெற்ற ‘Black beauty' என்ற அற்புதமான கதையைக் கொண்ட இந்த நாவல் ‘கறுப்பழகன்' என்ற பெயரில் தமிழிலும் வெளியாகி இருக்கிறது. இதை மொழிபெயர்த்தவர் உலகக் குழந்தை இலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் தந்துள்ள யூமா. வாசுகி. வெளியீடு, புக்ஸ் ஃபார் சில்ரன்.

படுத்துக்கொண்டே எழுதியது

குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர் களுக்கும் பிடித்த இந்தக் கதையை எழுதியவர் அன்னா சிவெல். அவர் எழுதியது இந்த ஒரே ஒரு புத்தகம் மட்டும்தான்.

இங்கிலாந்தில் உள்ள கிரேடே யார்மவுத்தில் பிறந்தவர். அவருக்கு 12 வயதானபோது காலில் அடிபட்டு இரண்டு கணுக்கால்களும் சேதமடைந்தன. எஞ்சிய வாழ்க்கை முழுவதும் அவரால் நிற்க முடியவில்லை. கிரெட்ச் அல்லது வாக்கர் இருந்தால் மட்டுமே அவரால் நடக்க முடியும். வீட்டிலேயே படித்த அன்னாவுக்குப் புத்தக வாசிப்பு, இயற்கை, உயிரினங்கள் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது.

வெளியே செல்ல வேண்டுமென்றால் குதிரை இழுக்கும் வாகனத்தில் சென்றார். அப்படித்தான் குதிரைகள் மீதான கருணை அவருக்குப் பிறந்தது. அந்தக் காலத்தில் முக்கியப் போக்குவரத்து முறையாகப் பயன்பட்ட குதிரைகள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டன.

அன்னா சிவலுக்கு 57 வயதானபோது, உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. படுத்த படுக்கையாக இருந்த அவர் கதையைச் சொல்ல, அவருடைய அம்மாவே பல நேரம் கதையை எழுதிக்கொண்டார். 1877-ல் கறுப்பழகனை எழுதி முடித்தார்.

புத்தகம் வெளியாகி ஐந்து மாதங்களில் இறந்துபோனார். புத்தகம் வெளியான பிறகு குதிரைகளை மோசமாக நடத்துவது தொடர்பான விவாதங்களும் விழிப்புணர்வும் இங்கிலாந்தில் அதிகரித்தன.

தன் உடல்நிலை மோசமாக இருந்தபோதும், அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், சக உயிர்கள் மீதும் கருணை காட்ட வேண்டும் என்ற அன்னா சிவெல்லின் எண்ணம் அவரைப் போற்றுதலுக்கு உரியவராக்குகிறது. அவருடைய பிறந்த நாள் மார்ச் 30.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x