Published : 25 Feb 2015 12:31 PM
Last Updated : 25 Feb 2015 12:31 PM

சிரிக்க வைத்த இளைஞன்

காமிக்ஸ் கதைகளில் அதிகம் வரும் அதிபுத்திசாலிகளையும், வீர பராக்கிரம நாயகர்களையும் கடந்து அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் சாதாரண, சொதப்பலான ஒரு கதாபாத்திரம் எப்படி இருக்கும்? அந்த வயசுக்காரர்களுக்குப் பிடித்துவிடும். அந்த வகையில் உலக அளவில் இளைய தலைமுறை வாசகர்களால் அதிகம் விரும்பிப் படிக்கப்படும் காமிக்ஸ் ஆர்ச்சி. அவன் ஒரு இளைஞன், நமது பக்கத்து வீட்டுப் பையனைப் போலிருப்பது பலருக்கும் பிடித்திருப்பதற்கு முக்கியக் காரணங்கள்.

உருவான கதை:

காமிக்ஸ் கதைகளை வெளியிடுவதற்காக ஜான் கோல்ட்வாட்டர் தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து MLJ என்ற பத்திரிகை நிறுவனத்தை 1939-ல் தொடங்கினார். அப்போது ஆன்டி ஹார்டி என்ற திரைப்படத் தொடர் இளைஞர்கள், குடும்பத்தினரிடையே பிரபலமாக இருந்தது. அதே பாணியில் ஒரு கதைத் தொடரை உருவாக்க நினைத்த ஜான், பயணங்களில் தான் சந்தித்த நபர்களை மனதில்கொண்டு துணைக் கதாபாத்திரங்களை உருவாக்கினார்.

கதாசிரியர் விக் புளூம், ஓவியர் பாப் மொண்டானா ஆகியோரைக்கொண்டு 1941-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நேரத்தில் ஆர்ச்சி கதாபாத்திரத்தை அவர் அறிமுகப்படுத்தினார். சீக்கிரமே முழு இதழும் ஆர்ச்சி காமிக்ஸாக மாறிவிட்டது.

ஆர்ச்சியின் கதை:

ரிவர்டேல் என்ற கற்பனை நகரில் வசிக்கும் ஃபிரெட் - மேரி தம்பதியினரின் பதின்ம வயது மகனான ஆர்ச்சி, படிப்பில் சுட்டி, வீரன், சூரன் என்றெல்லாம் சொல்ல முடியாத ஒரு சராசரி மாணவன். இவனது பல செயல்கள் முடிவில் நகைச்சுவையாக அமையும். ரசிக்கும்படியான கோமாளித்தனங்கள் நிறைந்தவனாகக் காட்டும் வகையில் கதைகள் அமைக்கப்பட்டன. இவனுடைய பள்ளித் தோழிகள் பெட்டி கூப்பர் & வெரோனிகா லாட்ஜ். வெரோனிகாவின் பணக்கார அப்பாவுக்கு ஆர்ச்சியை சுத்தமாகப் பிடிக்காது.

ஆர்ச்சிக்கு ஜக்ஹெட் என்கிற ஒல்லியான சாப்பாட்டு ராமன்தான் நெருங்கிய நண்பன். ஜக்ஹெட்டின் வளர்ப்பு நாயான ஹாட் டாக், அவனைப் போலவே உணவைக் காதலிக்கும் ஒரு பிராணி. ரெக்கி என்கிற சக வகுப்பு மாணவனுடன் ஆர்ச்சிக்கு எப்போதும் போட்டி நிலவும். டில்டன் என்கிற மகா புத்திசாலி, மூஸ் என்கிற பலசாலி என்று ஆர்ச்சியின் வகுப்பில் பல தரப்பட்ட நண்பர்கள். அடிக்கடி மக்கர் செய்து ஓடாமல் நின்றுவிடும் ஆர்ச்சியின் காரும் இவர்களைப் போலப் பிரபலமான மற்றொரு கதாபாத்திரம்.

நண்பர்கள்

ஜக்ஹெட் ஜோன்ஸ்:

ஒல்லியாக இருக்கும் ஜக்ஹெட் எப்படி இவ்வளவு உணவைச் சாப்பிடுகிறான் என்பது இன்றுவரை புரியாத புதிர். மூடிய டின்னில் இருப்பது என்ன வகையான உணவு என்று சொல்லும் திறமைசாலியான ஜக்ஹெட், ஒரு தேர்ந்த சுவை நிபுணர். இவனுடைய செயல்கள் சோம்பேறியாகக் காட்டினாலும், பல சந்தர்ப்பங்களில் இவனுடைய மூளை அபாரமாகச் செயல்படும். மற்ற கதாபாத்திரங்களைப் போலில்லாமல் ஜக்ஹெட் முழுக்க முழுக்க ஒரு கற்பனைக் கதாபாத்திரம்.

பெட்டி:

இவளும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். படிப்பில் படு சுட்டியான பெட்டிக்கும் பணக்காரியான வெரோனிகாவுக்கும் ஆர்ச்சியை மையமாக வைத்து அடிக்கடி போட்டி நடக்கும். பெட்டி கதாபாத்திரம் ஓவியர் மொண்டானாவின் தோழியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.

வெரோனிகா:

ரிவர்டேலிலேயே மிகவும் பணக்காரரான ஹிராமின் மகளான வெரோனிகா ஆர்ச்சியின் தோழி. ஆடம்பர, அலங்கார அணிகலன்களை வாங்குவதைப் பொழுதுபோக்காகக் கொண்ட வெரோனிகா, மொண்டானா சந்தித்த ஒரு கதாபாத்திரத்தை மனதில் கொண்டு, நடிகை வெரோனிகா லேக் போல வரையப்பட்ட கதாபாத்திரம்.

மூஸ்:

பள்ளியிலேயே மிகவும் பலசாலியான மூசை சுலபமாக ஏமாற்றிவிட முடியும். அவனுடைய தோழி மிட்ஜுடன் யாராவது பேசினாலே அவர்களை அடிக்கும் மூஸ், அடிப்படையில் நல்ல நண்பன். கொஞ்சம் மந்தபுத்தி கொண்ட இவனை ரெக்கி ஏமாற்ற முயன்று, அடிவாங்குவது கதையில் அடிக்கடி நடக்கும்.

ரெக்கி:

ஆர்ச்சியின் சக மாணவனான ரெக்கி, பணக்காரன். பல சில்மிஷங்களைச் செய்யும் ரெக்கி, ஆர்ச்சியைக் கிண்டல் செய்வதும், தன்னை ஒரு நாயகனாக நிலைநிறுத்த முயல்வதும் கதையில் தொடர்ச்சியாக நடக்கும்.

ஆர்ச்சி இசைக் குழு:

ஆர்ச்சியும் அவனது நண்பர்களும் ஒரு இசைக் குழுவை நடத்துகின்றனர். ஆர்ச்சி காமிக்ஸ் தொடரின் வெற்றிக்குப் பின்னர் இவர்களை மையமாக வைத்து ஒரு தொலைக்காட்சி கார்ட்டூன் தொடர் உருவாக்கப்பட்டது. அப்போது இந்த இசைக்குழு பாடிய “சுகர், சுகர்” என்ற பாடல் அமெரிக்கா, இங்கிலாந்தில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

லிட்டில் ஆர்ச்சி:

ஆர்ச்சி தொடரின் வெற்றிக்குப் பிறகு பல கிளைக்கதைகள் வெளியிடப்பட்டன. அவற்றுள் ஒன்று ஆர்ச்சியும் அவனுடைய நண்பர்களும் சிறு வயதில் செய்த சாகசங்களைப் பற்றியது. இதுவும் பெருவெற்றி பெற்றது.

தமிழில் ஆர்ச்சி:

குமுதம் வார இதழில் ஆர்ச்சி தொடராக வெளிவந்துள்ளது. இது தவிர கோமிக் வேர்ல்ட் இதழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

ஆர்ச்சி கதைத் தொடரில் ரெக்கி கதாபாத்திரம் ஆர்ச்சிக்கு எதிரியாக இருப்பதுபோலத் தோன்றினாலும், உண்மையில் அனைத்துக் கதாபாத்திரங்களுமே நட்புடன் இருப்பதே இந்தத் தொடரின் தொடர்ச்சியான வெற்றிக்குக் காரணம்.

உருவாக்கியவர்கள்: பாப் மொண்டானா, விக் ப்ளூம், ஜான் கோல்ட்வாட்டர்

முதலில் தோன்றிய தேதி: 22-12-1941 (பெப் காமிக்சின் 22-வது இதழில்)

பெயர்: ஆர்ச்சி

முழுமையான பெயர்: ஆர்ச்சி ஆண்ட்ரூஸ்

வசிப்பது: ரிவர்டேல் என்ற கற்பனை அமெரிக்க நகரத்தில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x