Published : 25 Feb 2015 11:35 AM
Last Updated : 25 Feb 2015 11:35 AM
அறிவியல் துறையில் முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு 1928 பிப்ரவரி 28 அன்று நடந்தது. ஒளியியல் துறையில் அந்தக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதை ‘ராமன் விளைவு’ என்று அறிவியல் உலகம் பெயர் சூட்டிக் கொண்டாடியது. அந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது யார் என யுகித்துவிட்டீர்களா? விஞ்ஞானி சர் சி.வி.ராமன்தான் அது. ராமன் விளைவைக் கண்டுபிடித்த பிப்ரவரி 28-ம் தேதியைத்தான் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடிவருகிறோம்.
சரி, ராமன் விளைவு என்பது என்ன? ராமன் விளைவைப் புரிந்துகொள்வதற்கு முன் ஒளி பற்றிய சில அடிப்படைக் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். ‘‘ஒளி என்பது அலைகளால் ஆனது” என்று தாமஸ் யங் என்ற விஞ்ஞானி 1801-ல் கூறினார். “ஒளி என்பது துகள்களால் ஆனது” என்று ஏற்கெனவே சர் ஐசக் நியூட்டன் கூறியிருந்தார். இதை யங் எப்படி மாற்றிக் கூறலாம் என்று நியூட்டனின் ஆதரவாளர்கள் குரலெழுப்பினர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளார்க் மாக்ஸ்வெல் என்ற விஞ்ஞானி ஒளி, வெப்பம் போன்ற எல்லாமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவைதான் என்றும், அவை அலைகளாக பயணம் செய்கின்றன என்றும் கூறினார்.
இரண்டு வெவ்வேறு அலைகளின் நீளத்தைக் கணக்கிடுவதை அலை நீளம் (wave length) என்று கூறுகிறோம். வயலட் நிறத்தின் அலை நீளம் மிகச் சிறியது. சிவப்பு நிறத்தின் அலை நீளம் மிக நீண்டது. பெரிய அலை நீளம் கொண்ட நிறங்கள், தொலைதூரம் பயணம் செய்யும். சாலைகளில் சிவப்பு விளக்கு சிக்னல் தொலை தூரத்திலிருந்தே நமக்குத் தெரிவது இதனால்தான். எலும்புகளின் புகைப்படத்தை எக்ஸ்ரே எடுப்பதற்கும், தொலைக்காட்சியில் ஒலி, ஒளி தெரிவதற்கும் காரணமான அலைகள் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெப்ப, ஒலி அலைகள்தான்.
ஒளி அலைகள் வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர் பயணம் செய்கின்றன. ஒளியியல் சம்பந்தமான விஷயத்தில் அலைகளின் கோட்பாடு முக்கியமாகக் கருதப்பட்டாலும், ஒளியின் அத்தனை விஷயங்களையும் அலைகளின் கோட்பாட்டால் விளக்க முடியவில்லை. “வெப்பமும் ஒளியும் ஒரு பைக்குள் அடைக்கப்பட்ட சக்திகள். இவ்வாறு பைக்குள் அடைக்கப்பட்ட ‘ஒலி' சக்தியின் (Light Energy) பெயர் போடான்ஸ்” என்று மாக்ஸ் பிளாங்க்கும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் கூறினார்கள்.
ஒளி போடான்ஸால் ஆனதா, அலைகளால் ஆனதா என்ற விவாதம் கிளம்பியது. “இரண்டிலிருந்தும்தான்” என்று சிலர் கூறினர். தண்ணீர் மழைத்துளியின் மூலமாகவும் வருகிறது, பெரிய அலை போலவும் நதிகளில் பாய்கிறது. இதே போல்தான் ஒளியும் என்று வாதம் செய்யப்பட்டது.
இப்படி வாதங்கள் நடந்த வேளையில்தான் சர். சி.வி. ராமன் ஒளியியல் கோட்பாட்டில் முக்கியமானதொரு விஷயத்தைக் கண்டுபிடித்தார். “ஒளி என்பது திரவம், வாயு மற்றும் கெட்டியான பொருட்களின் ஊடே செல்லும்போது, அதன் தன்மை மாறுபடுகிறது” என்று ராமன் கூறினார். “ கேரம்போர்டில் ஸ்டிரைக் கரைச் சுண்டியதும், போர்டில் உள்ள பல்வேறு காய்கள் சிதறி வெவ்வேறு திசை நோக்கி நகர்வதைப்போல ஒளியின் பயணம் மாறுபடுகிறது” என்று கூறினார். இதையே ‘ராமன் விளைவு’ என்று அழைக்கிறோம்.
சி.வி. ராமனின் இந்தக் கண்டுபிடிப்புக்காக 1930-ல் அவருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT