Last Updated : 18 Feb, 2015 12:31 PM

 

Published : 18 Feb 2015 12:31 PM
Last Updated : 18 Feb 2015 12:31 PM

சித்திரக்கதை: ‘கண்டுபிடி’- ‘தெரிந்துகொள்’

முன்னொரு காலத்தில் சூரிய நாடு என்று ஒரு தீவு இருந்தது. அத்தீவில் பலவிதமான மனிதர்கள் ஒரே குடும்பமாகச் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். சிறிது காலம் கழித்து, குடும்பங்கள் விரிவடைந்தன.

குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானது. தீவில் இருந்த பெரியவர்கள், குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்க முடிவெடுத்தார்கள்.

பள்ளி ஆசிரியராக யாரை நியமிப்பது என்று ஆலோசிக்கும்போது, இரண்டு பேரை ஆசிரியர் பணிக்கு முன்மொழிந்தார்கள். ஒருவர் பெயர் ‘தெரிந்துகொள்’, இன்னொருவர் பெயர் ‘கண்டுபிடி’.

இருவருக்கும் சரிசமமான ஆதரவு இருந்ததால், இரண்டு பள்ளிகளைத் தொடங்க முடிவெடுத்தார்கள். ஒரு பள்ளிக்குத் ‘தெரிந்துகொள்’ ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இன்னொரு பள்ளிக்குக் ‘கண்டுபிடி’ ஆசிரியரானார்.

பெற்றோர்களின் விருப்பப்படி குழந்தைகள் இந்த இரு பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டனர். ‘தெரிந்துகொள்’, ‘கண்டுபிடி’ இருவரும் நடத்தும் பள்ளிகள் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் மாறுபட்டிருந்தன. ‘தெரிந்துகொள்’ பள்ளியில், ஆசிரியர் பாடம் நடத்திக் கேள்வி கேட்பார். மாணவர்கள் பதில் கூற வேண்டும்.

மாணவர்கள் கேள்வி கேட்பதற்கு அனுமதியே கிடையாது. ஆசிரியர் நடத்துவது புரியவில்லை என்றாலும்கூடக் கேள்வி கேட்கக் கூடாது. ஆசிரியர் தவறாகப் பாடம் நடத்தினாலும் அதைக் கண்டுகொள்ளக் கூடாது.

ஒருவிதமான கறார்த்தன்மை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. மொத்தத்தில் குழந்தைகள் சுயமாக, சுதந்திரமாகச் சிந்திக்க அனுமதியில்லை.

ஆனால் ‘கண்டுபிடி’ பள்ளியில் நிலைமை வேறு விதமாக இருந்தது. மாணவர்கள் கேள்வியெழுப்பி அதற்கான விடைகளைக் கண்டுபிடித்தார்கள். மாணவர்கள் கேள்வி கேட்பதை ஆசிரியர் ஊக்குவித்தார். கூட்டாக அனைவரும் படித்தார்கள். ஆசிரியர் வழிகாட்டியாக மட்டும் இருந்தார்.

ஒரு கட்டத்தில், ‘தெரிந்துகொள்’ பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும், ‘கண்டுபிடி’ பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குமான வேறுபாடுகளை மக்கள் உணர ஆரம்பித்தார்கள். இந்த வேறுபாட்டால் சலசலப்பு முற்றி சண்டை ஏற்பட்டது. தீவு இரண்டாகப் பிரியும் நிலை உருவானது.

‘தெரிந்துகொள்’ பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் குடும்பங்கள் ஒருபுறமும், ‘கண்டுபிடி’ பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் குடும்பங்கள் இன்னொரு புறமும் பிரிந்து சென்றார்கள். இருவர் வசிக்கும் பகுதிகளுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்பட்டது. இரு பிரிவினருக்குமிடையே தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

ஆண்டுகள் உருண்டோடின. குழந்தைகள் பெரியவர்களானார்கள். அவர்களுக்குத் திருமணம் நடந்து குழந்தைகள் பிறந்தன. அடுத்த தலைமுறை உருவானது. ‘தெரிந்துகொள்’ குடும்பங்கள் வாழ்ந்த பகுதியில் இட நெருக்கடி ஏற்பட்டது. அவர்களில் சிலர் சுவரை உடைத்துக் ‘கண்டுபிடி’ வாழ்ந்த பகுதிக்குக் குடியேற வேண்டி வந்தது.

அப்போது ‘கண்டுபிடி’ பகுதியில் வாழ்ந்தவர்கள் தங்களைக் காட்டிலும் மேன்மையானவர்களாக உள்ளதைக் கண்டார்கள். அவர்களின் பேச்சு அறிவுபூர்வமாகவும், சுவாரசியமாகவும் இருந்தன.

‘தெரிந்துகொள்’ பகுதி மக்கள் ஒரே மாதிரியாகக் குறுகிய வட்டத்துக்குள் இருந்ததற்கு மாறாகக், ‘கண்டுபிடி’ பகுதி மக்கள் ஒருவரிலிருந்து மற்றொருவர் வேறுபட்டிருந்தார்கள்.

‘கண்டுபிடி’ பகுதி மக்கள் எப்படி அறிவார்ந்த சமூகத்தினராகத் திகழ்கிறார்கள் என்று கேட்டறிய வயது முதிர்ந்த ‘கண்டுபிடி’ ஆசிரியரைப் பார்க்கப் போனார்கள். “ ஆஹ்!, இது மிகவும் எளிமையான விஷயம். நாங்கள் எளிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கிறோம். எங்களுடைய கல்வி முறையும் எளிமையானது” என்றார் ‘கண்டுபிடி’ ஆசிரியர்.

“எப்படி என்று விளக்கமாகச் சொல்லுங்களேன்” என்று கேட்டார் ‘தெரிந்துகொள்’ பகுதியைச் சேர்ந்த ஒருவர்.

“மிகவும் நல்லது. நீங்கள் இப்படிக் கேள்வி கேட்பதுதான் எங்கள் கல்வியின் அடிப்படை. ‘யார்’ என்று கேளுங்கள், மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

‘எப்படி’ என்று கேளுங்கள், ஒரு விஷயம் எப்படி நடக்கிறது என்பதை அறியலாம்.

‘ஏன்’ என்று கேளுங்கள், ஒரு விஷயத்தை பகுத்தறிந்து தெரிந்துகொள்ளலாம்.

‘எதனால்’ என்று கேளுங்கள், ஒரு விஷயத்தை அறிவியல்பூர்வமாக உணரலாம்.

‘எப்போது’ என்று கேளுங்கள், ஒரு விஷயம் நடந்த காலத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

‘எங்கே’ என்று கேளுங்கள், ஒரு விஷயம் நடந்த இடத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்”.

இப்படிக் ‘கண்டுபிடி’ ஆசிரியர் அடுக்கிக் கொண்டேபோனார்.

‘தெரிந்துகொள்’ பகுதி மக்கள் தாங்கள் பார்க்காத வேறு ஒரு உலகம் உள்ளது என்பதை உணர்ந்தார்கள். ‘தெரிந்துகொள்’ மக்களும், ‘கண்டுபிடி’ மக்களும் இணைந்தார்கள். அவர்கள் மத்தியில் இப்போது சுவர் ஏதும் இல்லை. வித்தியாசங்கள் இல்லை. அனைவரும் தனித்துவமாக விளங்க ஆரம்பித்தார்கள்.

இங்கு கூறுவது உங்களுக்கு இன்னும் புரியவில்லையா? அப்போ, நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு சுலபமான விஷயம்தான் - கேள்வி கேளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x