Published : 25 Feb 2015 12:27 PM
Last Updated : 25 Feb 2015 12:27 PM
வாலை நீளமாக்கி நண்பர்களைக் காப்பாற்றும் கபீஷ், புத்திசாலி காக்கா ‘காக்கை காளி', செய்யும் வேலையால் சிரிக்க வைக்கும் சுப்பாண்டி, அதிர்ஷ்டத்தால் காட்டுக்குள் விலங்குகளைப் பிடிக்கும் ஷிகாரி சாம்பு... இவங்களுக்கு உயிர் கொடுத்தவர் யார்னு தெரியுமா? 'பை மாமா'ன்னு (அங்கிள் பை) செல்லமா அழைக்கப்பட்ட அனந்த் பைதான்.
அவர்தான் பலரும் ஜாலியா விரும்பிப் படிக்கிற அமர் சித்திரக் கதை, டிங்கிள்-குழந்தை காமிக்ஸ் பத்திரிகைகளை ஆரம்பிச்சவரு. இந்திய காமிக்ஸ் உலகின் தந்தை'னு பாராட்டப்படுறவரு.
எல்லாமே சவால்
கர்நாடகாவுல உள்ள கர்கலாவில் 1929, செப்டம்பர்-17 அன்று அனந்த் பை பிறந்தார். சின்ன வயசிலேயே பெற்றோரையும் பிறகு தாத்தாவையும் இழந்த அவரு, மும்பைல இருந்த உறவினரின் வீட்டுக்குக் குடிபெயர்ந்தார். மும்பைல இருந்த நல்ல பள்ளிகள்ல அவருக்கு இடம் கிடைக்கல. தாய்மொழியான கன்னடம் மட்டுமே தெரிஞ்சிருந்த அவருக்கு ஆங்கிலமோ, மராத்தியோ தெரியல. அதனாலதான் அந்தப் பள்ளிகள்ல அவருக்கு இடம் கிடைக்கல.
அதேநேரம், பின்னாடி மும்பை பல்கலைக்கழகத்துல இரட்டைப் பட்டங்களை முடிச்சு வேதியியல் பொறியாளர் ஆனார். ஆரம்பத்துல கன்னடம் மட்டுமே தெரிஞ்சிருந்த அவருக்கு, பின்னாடி எத்தனை மொழிகள் தெரிஞ்சிருந்துச்சு தெரியுமா? எட்டு மொழிகள். தனக்கு எதுவும் தெரியலையேன்னு அவர் கவலைப்பட்டதே இல்ல, தெரியாத விஷயத்தையே சவாலா எடுத்துக்கிட்டு எல்லா வேலைகள்லயும் சாதிச்சுக் காட்டியிருக்கார்.
காமிக்ஸ் ஆர்வம்
ஆரம்பத்துலேர்ந்தே எழுதுறதுலயும் பத்திரிகை நடத்துறதுலேயும் அவருக்கு ஆர்வம் அதிகமா இருந்துச்சு. முதன்முதல்ல ‘மானவ்'னு ஒரு பத்திரிகைய ஆரம்பிச்சார். அப்புறம் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழோட புத்தகப் பதிப்பு பிரிவுல சேர்ந்தார். அந்த நிறுவனத்துலேர்ந்து குழந்தைகள மகிழ்விச்ச ‘இந்திரஜால் காமிக்ஸ்' வந்தது. அதுல வேதாளன், மந்திரவாதி மாண்ட்ரேக் போன்ற வெளிநாட்டு காமிக்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்ட காமிக்ஸ் வந்துகிட்டிருந்துச்சு. அப்பப் பஹதுர், தாரா போன்ற நம் நாட்டு காமிக்ஸ் கதாபாத்திரங்கள அனந்த் பைதான் அதுல அறிமுகப்படுத்தினார்.
அப்போ டிவில நடந்த ஒரு விநாடி - வினா போட்டில இந்தியப் புராணங்கள பத்தின கேள்விகளுக்குக் குழந்தைங்க பதிலளிக்க முடியாம திணறினதை அனந்த் பை பார்த்தார். வெளிநாட்டுக் கதைகள் மேல மோகமா இருக்குற குழந்தைகளுக்கு, நம் நாட்டு புராணக் கதைகள், நாட்டுப்புறக் கதைகளைப் பத்தித் தெரியலையேன்னு கவலைப்பட்டார். நம் நாட்டு விஷயங்கள அழகான கதையாவும், அற்புதமான படங்களாகவும் காட்டணும்னு ஆசைப்பட்டார்.
பிறந்தது அமர்
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா'விலிருந்து விலகி, இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்தின் சித்திரக்கதை பதிப்பிக்கும் பிரிவுல சேர்ந்தார். மூன்று வருஷங்களுக்குப் பின்னாடி ‘அமர் சித்திரக் கதா'வை அங்கே தொடங்கினார். அழியாத புகழ்கொண்ட சித்திரக் கதைகள் என்பதே அந்தப் பெயருக்கான அர்த்தம். அதில் வந்த முதல் சித்திரக்கதை புத்தகம் கிருஷ்ணரைப் பத்தினது. அது ரொம்ப எளிமையாவும், குழந்தைகளைக் கவர்ற மாதிரியும் இருந்துச்சு.
அன்றைக்குத் தொடங்கித் தன் வாழ்நாளில் 400-க்கும் மேற்பட்ட காமிக்ஸ் கதைப் புத்தகங்களை அனந்த் பை பதிப்பிச்சார். இந்திய வரலாறு, சாதனையாளர்கள், புராணம், நாட்டுப்புறக் கதைகள் சார்ந்த பல சித்திரக் கதைப் புத்தகங்கள அவரே எழுதி, பதிப்பிச்சார். முதல்ல ஆங்கிலம், இந்தியில வந்துகிட்டிருந்த இந்த சித்திரக் கதைப் புத்தகங்கள், பின்னாடி தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்கம், மராத்தி, அசாமி, குஜராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், உருது மொழிகள்லயும் வந்துச்சு. ஏன் சில புத்தகங்கள் ஃபிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், ஸ்வாஹிலி, ஃபிஜியன், பாஷா இந்தோனேஷியா, செர்போ-குரோட் மொழிகள்லகூட வந்திருக்குன்னா பாத்துக்குங்களேன்.
அமர் சித்திரக் கதைப் புத்தகங்கள் இந்தியாவுல மட்டுமில்லாம, உலகெங்கும் புகழ்பெற்றிருக்கின்றன. உலக அளவில் இந்தியச் சித்திரக் கதைகள் பிரபலமாகுறதுக்கு அமர் சித்திரக் கதைதான் காரணம்.
டிரிங் டிரிங்
1980-ல அவர் தொடங்கினதுதான் டிங்கிள். அந்தப் பத்திரிகைக்கு ஏன் அப்படிப் பெயர் வந்துச்சுன்னா, ஒவ்வொரு முறை அந்தப் பத்திரிகைக்குப் பெயர் வைக்கக் கூட்டம் நடந்தப்பவும், ஃபோன் டிங்கிள் (டிரிங் டிரிங்தான்) என்று கத்துச்சாம். அதனால, அதையே பெயரா வச்சுட்டாங்க.
டிங்கிள் பத்திப் புதுசா சொல்ல வேண்டியதில்ல. அதுல வர்ற சுப்பாண்டி, அன்வர், நஸ்ஸீருத்தின் ஹோட்ஜா, ஷிகாரி ஷாம்பு, காக்கை காளி, கபீஷ், மந்திரி தந்திரி போன்ற கதாபாத்திரங்கள் எல்லாமே நிறைய புத்திசாலித்தனத்தையும், நகைச்சுவை உணர்வையும் கொண்டிருக்கும்.
ரொம்ப வயசான பின்னாடியும் அமர் சித்திரக் கதை அலுவலகத்துக்கு வந்து பகல் முழுக்க வேலை அனந்த் பை பார்த்துக்கிட்டிருந்தார். 2011-ல் புதுடெல்லில நடந்த முதல் இந்திய காமிக்ஸ் மாநாட்டுல ‘காமிக்கான்' வாழ்நாள் சாதனையாளர் விருதை அனந்த் பைக்கு வழங்கினாங்க. அந்த விருதை முதல்முறை பெறப் பொருத்தமான ஆள் வேற யார் இருக்க முடியுமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT